ஆனந்த பாலிதவின் கைது நியாயமானது திருடர்களுக்கு ஆதரவாக எதிரணி பேசுவது வேதனையளிக்கின்றது! – அமைச்சர் அநுர கருணாதிலக கடும் கண்டனம்.
தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துகளை முன்வைத்த நிலையில், திருடர்களுக்கு ஆதரவாகப் பேசுவது வேதனையளிக்கின்றது என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித கைது செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்ந்தபோது, 36 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரியவந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“திருடர்களுக்கு ஆதரவாகப் பேசுவது நமது பௌத்த தர்மத்துக்கோ அல்லது தார்மீக விழுமியங்களுக்கோ பொருத்தமானதல்ல என்பதை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறந்துவிட்டனர் என்று தெரிகின்றது. அதனை நினைக்கும்போது மனதுக்கு மிகவும் வேதனையாகவுள்ளது.” – என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சி முழுமையாக நிலைநாட்டப்பட வேண்டுமானால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
