பட்ஜட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மாலை சபையில் – எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம் – தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது, வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன அதிகாரம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியனவும் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராகவே வாக்களிக்கவுள்ளன. எனினும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் இறுதி நிலைப்பாடு இன்றைய தினமே அறிவிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த நவம்பர் 13ஆம் திகதி ஆரம்பமானதுடன், இதற்காக 7 நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, நாளை வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாள்களுக்குக் குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது. இதன்படி, டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குழுநிலை விவாதக் காலப்பகுதியில் அரச தரப்புக்கு 40 சதவீதமும், எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் என்ற அடிப்படையில் விவாத நேரம் ஒதுக்கப்படவுள்ளது. அத்துடன், அமைச்சொன்றின் செலவினத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்பட்டால், அந்த வாக்கெடுப்பு அன்றைய தினத்தின் இறுதியில் மாலை 6.00 மணிக்கு நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
