எந்தவொரு அடக்குமுறைச் சட்டமும் அரசால் கொண்டுவரப்படமாட்டாது! – அமைச்சர் விஜித ஹேரத் உறுதி.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே புதிய சட்டங்கள் இயற்றப்படும் எனவும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் சட்டத்துக்கு முரணான வகையில் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியதாவது:-
“ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் முடிவடையவிருந்தது. எனினும், அது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2028ஆம் ஆண்டு வரை அந்தச் சலுகை எமக்குக் கிடைக்கும்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் எனக் கடந்த காலங்களில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது. நாமும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உறுதியளித்திருந்தோம். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மட்டும் கருத்திற்கொள்ளாது, நாட்டு மக்களின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான முடிவை எடுத்தோம்.
எனினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு தொடர்பில் வலுவான சட்ட திட்டம் அவசியம் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையும் உள்ளடக்கிய அனைத்துக் காரணிகளையும் கருத்திற்கொண்டே பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் காணப்பட்ட அடக்குமுறை விடயங்கள் புதிய சட்டமூலத்தில் இல்லை. நீதிமன்ற உத்தரவுக்கமையத் திருத்தங்களை மேற்கொள்ளவும் நாம் தயாராக உள்ளோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அடக்குமுறைச் சட்டமூலங்கள் கொண்டுவரப்படமாட்டாது.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்குப் புதிதாக ஐந்து நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. போதைப்பொருள் ஒழிப்பு, குற்றக்குழுக்களை ஒழித்தல் என்பன அவற்றில் அடங்கும். இதற்கமையவே திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஜனநாயக உரிமைகள், கருத்துச் சுதந்திரம் என்பவற்றைப் பாதிக்காத வகையிலும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களுக்கு அமைவாகவுமே இந்தச் சட்டமூலங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.” – என்றார்.
