இலங்கையில் கொரணா 22 ஆயிரத்தை கடந்தது.

22 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினத்தில் 559 பேருக்கு கொவிட்19 தொற்றுதியானது. அவர்களில் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய 553 பேருக்கும், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும், துருக்கி, மாலைத்தீவு, ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் மற்றும் கடலோடி ஒருவருக்கும் நேற்று கொவிட்19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து நாட்டில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 28 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 491 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் 369 கொவிட்19 நோயாளர்கள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நாட்டில் இதுவரை இந்த தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் 6 ஆயிரத்து 113 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொழும்பில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பிரவேசிப்போரை தொடர்ந்தும் அவதானித்து வருவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 352 பீ.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனையில் 23 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியானது.

வவுனியா பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த 20 பேருக்கும், யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தல் மையத்தில் இருக்கின்ற 3 பேருக்கும் இவ்வாறு தொற்றுறுதியானதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி முதல் நேற்றிரவு வரையான காலப்பகுதியில், 184 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகமான நோயாளர்கள் அக்குறணை பகுதியில் பதிவாகியுள்ளனர். அங்கு 53 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி நகராட்சி பகுதியில் 17 பேரும், மெததும்பறையில் 14 பேரும், உடபலாத்தையில் 11 பேரும், கலஹாவில் 10 பேரும், பாத்ததும்பறை வத்துகாமத்தில் 9 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, காலிமுகத்திடலில் நேற்று திடீரென சுகவீனமுற்று உயிரிழந்த கொள்ளுப்பிட்டி காவற்துறை நிலைய குற்றவியல் பொறுப்பதிகாரிக்கு கொவிட் 19 நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

காலி முகத்திடலில் நேற்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது குறித்த காவல்துறை அதிகாரி திடீரென வீழ்ந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.