புளாட் வதை முகாமில் நான் – சீலன் (பகுதி 8) “வெல்வோம்-அதற்காக”

மகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம்…

அமைப்புக்குள்ளான பிரச்சனைகளை அறிக்கையாக அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது எவ்வாறு தயாரிப்பது என்றும், அதை யார் யாருக்கெல்லாம் அனுப்புவது என்ற விவாதமும் ஆரம்பமானது. எனது நினைவுக்கு எட்டியவரை, ஒருநாளில் இவ்விவாதங்கள் முடியவில்லை. பல நாட்கள் விவாதங்கள் தொடர்ந்தன.

இறுதியில் முகாமில் நிரந்தரமாகத் தங்கியவர்கள் ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அக்குழுக்கள் தமக்குள் விவாதங்களை நடத்தி, தாம் முன்மொழியும் விடயங்களை அறிக்கையாக எழுதி சமர்ப்பிக்க வேண்டும் என்று இணக்கம் காணப்பட்டது. குழுக்களால் எழுதப்படும் அவ்வறிக்கைகள் குறிப்பிட்ட தினங்களில் முகாமின் ஒன்றுகூடலின் போது வாசிக்கப்பட்டு, அவற்றைத் திருத்தி, அதில் எவை முக்கியமானவை என்று எல்லோராலும் முடிவெடுக்கப்படும் பட்சத்தில் அவற்றை அறிக்கையாக தயாரித்து அனுப்புவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தொடர்ந்து வந்த நாட்களில் ஏழு குழுக்களும் பல விவாதங்களை நடத்தின. இதில் நான் இருந்த குழுவில் என்னால் இரண்டு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

அவையாவன:

1. தேசம் இலங்கை இராணுவத்தால் எரிக்கப்படுகின்றது. இதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? எற்கனவே பயிற்சி முடித்தவர்களை நாட்டுக்கு அனுப்பி, தமிழீழத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் ரோம் நகரம் பற்றி எரியும் போது அந்த நாட்டு மன்னன் பிடில் வாசித்தது போல, தமிழீழம் பற்றி எரியும் போது உமாமகேஸ்வரன் என்ன செய்து கொண்டிருக்கிறார்” என்று அதில் கேட்டேன்.

2. அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்று, எமது சின்னத்தில் இருக்கின்றது. ஆனால் இங்கு நாம் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றோம். இது சரியான அரசியற் செயற்பாடா?

இதைக் கூற எமது குழுவில் இருந்த சண் என்பவர், அதை இன்னமும் விளக்கமாக அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்று கூறியபடி, இங்குவரும் தோழர்களை உடைத்து எறியும் வேலையை அமைப்புப் பொறுப்பாளர்கள் பார்க்கின்றார்கள், என்று கூறி எனது கருத்தை விரிவாகத் தெளிவுபடுத்தினார்.

இவ்வாறு ஒவ்வொரு குழுக்களும் தமது அபிப்பிராயங்களையும் ஆத்திரங்களையும் கொட்டித்தீர்த்தனர். மகஜர் தயாரிக்கப்பட்டது. மகஜர் தயாரிக்கப்படுவதை, ஒரு எதிர்ப்புரட்சி நடப்பதாகவும், நாம் இயக்கத்தை உடைக்கப் போவதாகவும், நாளுக்கு நாள் ஒரத்தநாட்டுக்குச் சென்று வந்த ஜிம்மியும், உதயனும் அங்கிருந்த பொறுப்பாளர்களுக்குத் தகவல் கூறினர். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த அறிக்கை தயாரிப்பது பற்றிய விவாதங்களில் அவர்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி கலந்து கொண்டனர். அவர்கள் எம்மை உளவு பார்க்கின்றனர் என்று எமக்கு தெரிய வந்தாலும் கூட, அவர்களைப் பொருட்படுத்தாது நாம் செய்ய வேண்டிய வேலைகளில் மும்மரமாக இறங்கினோம். இதனடிப்படையில் தயாரிக்கப்பட் அறிக்கையினை கீழே பார்க்கலாம்.

மகஜர் அறிக்கை

10.08.1984

செயலதிபர் தோழர் முகந்தன் அவர்கட்கு,

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் துறைச்செயலாளர் தோழர் வசந்தன் அவர்கட்கு,

பிரதிகள்:-

தோழர் கண்ணன்

தோழர் ராஜன்

தோழர் வாசுதேவா

தோழர் தங்கராஜா

தோழர் அன்ரன் (ஏச் முகாம் பொறுப்பாளர்)

இயக்கத்தின் தோழர்களால் அனுப்பப்படும் இயக்க நடைமுறை குறைபாட்டு புனரமைப்பு அறிக்கை.

இதனால் அறியத்தருவது, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கீழ் விடுதலை வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட வந்திருக்கிறோம். கழகம் மக்கள் மத்தியில் வைத்த கொள்கைகளுக்கும், இங்கே நடைமுறையில் இருக்கின்ற கொள்கைகளுக்கும் செயல்பாட்டிற்கும் இடையில் பாரதுரமான முரண்பாடுகள் காணப்படுகின்றன. இது படிப்படியாக கூடிக்கொண்டே செல்கிறது. எனவே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளோடு இவற்றையும் ஒத்துநோக்கின் இயக்கத்தில் பிரச்சனைகளையும் நடைமுறை பிழைகளையும் சீர்திருத்த வேண்டிய இக் காலத்தின் கட்டாயமாகும்.

எனவே எமது கழகம் புனரமைக்கப்பட்டால் தான் நாங்கள் உண்மையான விடுதலையை அடைய முடியும் என்ற நோக்கில் கீழே சில புனரமைப்புச் செய்ய வேண்டிய பிரச்சனைகளை வரிசைப்படுத்துகின்றோம்.

1. எமது கட்சியின் சின்னத்தில் சகல அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. ஆனால் கட்சியில் இருக்கும் சில தோழர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற போர்வையில் முதலாளித்துவ இராணுவத்தையும் விட மிக மோசமான முறையில் விசாரணையின்றி சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்பிற்கேற்ப தன்டணை வழங்குகின்றார்கள்.

இது சோசலிச கொள்கையை தன் உயிர் நாடியாக கொண்டு இயங்குகின்ற நமது கட்சிக்கு பலத்த சேதத்தை விளைவிக்காதா?

2. எமது கட்சியில் அரசியல் பற்றி பேசுபவர்களை சில தோழர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள். குறிப்பாக எமது கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட எச் முகாம் தோழர்கள் அரசியல் படிப்பதற்காகவும் நோயாளர்களின் நோயை தீர்ப்பதற்காகவும் தவறு விடுபவர்களை திருத்துவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கபட்ட இதைக் கூட மூடப்போகின்ற அதிர்ச்சி தரும் தகவலை அறிந்தோம். அரசியல் எமது கட்சிக்கு என்ன விதிவிலக்கா? அல்லது விஷமா?

3. விடுதலைப் போராட்டத்திற்கு தங்களை அர்ப்பணித்து வந்திருக்கின்ற போராளிகள் நீண்டகாலமாக பின்தளத்தில் இருப்தாலும் எமது பின் தளம் அயல் நாட்டில் இருப்பதாலும் அப்போராளிகள் அவ்விடத்தின் சூழலுக்கும் சுவாத்தியத்திற்கும் ஏற்ப மாற்றமடைகின்றார்கள். அத்தோடு PLOT என்ற பெயர் சூட்டிக்கொண்டு மக்களை தோழர்களை நேசிப்பது குறைவாக இருக்கின்றது. இந்த நடவடிக்கையினுடாக நமது கட்சி மக்களிடமிருந்தும் தோழர்களிடமிருந்தும் அன்னியப்படுவதற்கு சாத்தியகூறுகள் இருக்கின்றதா? இல்லையா?

4. நமது தமிழீழத்திற்கு அரசியல் தீர்வு காணப்பட்டு ஒரு சுமூகமான நிலை ஏற்பட்டால் நாம் சரணடைய வேண்டிய நிலையும், போராட்டம் மாறுபட வேண்டிய நிலையும் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்த விடயமாகும். இப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் நமது கட்சி முதலில் தமிழீழத்தில் எந்தவிதமான போராட்டம் நடத்த வேண்டும். சித்தந்த போராட்டமா? ஆயுதப் போராட்டமா? சித்தந்த போராட்டம் என்றால் சகல தோழர்களுக்கும் அரசியல் ஞானம் இருக்க வேண்டுமா? இருக்க வேண்டாமா?

5. தமிழீழ விடுதலைக்கும் எமது கட்சியின் வளர்ச்சிக்கும் போராட்டத்தை முன்னேடுக்க பயிற்சி முகாங்களுக்கு வருகின்ற தோழர்களுக்கு சுகையீனமும் உளவியல் ரீதியான அதிருப்தியும் உருவாகின்றது. இதை மாற்றுவதற்கு அதிகாரத்தை பயன்படுத்துவதா? அல்லது அவர்களை உணர்வு பூர்வமாக அணுகுவதா?

6. சோசலிச கொள்கை கொண்டு செயற்படும் கட்சிக்குள் ராணுவம் அரசியலுக்கு கட்டுப்பட்டதா? அல்லது அரசியல் இராணுவத்துக்கு கட்டுப்பட்டதா? எனும் ஓர் கோள்வி இன்று பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

எமது இயக்கத்தில் (அரசியல் பிரிவு, இராணுவப்பிரிவு, செய்தித் தொடர்புப்பிரிவு) பல பிரிவுகள் செயற்படுவதால் ஓர் ஒற்றுமையின்மையை கொண்டு வருகின்றது. இக்கேள்விகளையும் அதனால் எழும் முரன்பாடுகளையும் யார் சீர்படுத்துவது? இவ்நிலை கட்சியை வளர்ச்சியடைய செய்யுமா?

அல்லது வீழ்ச்சியடையச் செய்யுமா?

7. நமது கட்சி கொள்கைக்கு மாறாக செயல்பட்டால் அதைத்தட்டிக் கேட்கவும் சுட்டிக்காட்டவும் உரிமையுண்டெனவும் கட்சியின் கொள்கை தான் கூறுகின்றது. ஆனால் இங்கோ பேச்சுரிமைக்கு இடமளிப்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது

இவற்றைப் பார்க்கும்போது இப்போக்கு ஒரு முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்தை மறைமுகமாக எடுத்துக்காட்டுகின்றது. எனவே நாம் இவற்றை எமது தூய்மையான கட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பது அத்தயாவசியமானதா? அல்லது அனாவசியமானதா?

மேற்படி இப்பிரச்சனைகள் இங்குள்ளன என்பது தோழர்களின் ஏகமனதான கருத்தாகும். இப்பிரச்சனைகள் கட்சிக்குள் பொதுவாக நிலவுகின்றது. எனவே இந்த அறிக்கை கிடைக்கப்பெற்று ஏழு தினங்களுக்குள் உடனடியாக ஒரு விசாரணை குழு எங்களை வந்து பார்வையிட்டு பிரச்சனைகளை மிகவும் விரிவாக ஆராயவேண்டும். என்பதனை அனைத்து தோழர்களும் மிகவும் அதிகபட்சமான ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.

இந்த அறிக்கைக்கு கிடைத்த பின்னால் கட்சி உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பது எங்கள் கருத்தாக மனதில் கொள்ளப்பட்டு இந்த புனரமைப்பு அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்கின்றோம். இந்த நடவடிக்கைகள் யாவும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவே மேற்கொள்ளப்படுகின்றது என்பதை மீண்டும் மீண்டும் அனைத்து தோழர்களுக்கும் வலியுறுத்துகின்றோம்.

இவ்வண்ணம்

உண்மையுள்ள கழகத் தோழர்கள்

இந்த அறிக்கையில் ஏச் முகாமில் இருந்த 88 பேர் கையொப்பம் இட்டிருந்தனர். இவ்வாறு நாம் ஏழுநாட்கள் காலக்கெடு கொடுத்து, இதை ஜிம்மி, உதயன் மூலம் அனுப்பி வைத்தோம். ஏழுநாட்களில் பதில் தராது விட்டால் என்ன செய்வது என்றும் எமது முகாமில் விவாதம் எழும்பியது. அப்போது சோசலிசம் சிறியால் இவர்கள் பதில் தராவிட்டால் நாம் மறுநாள் முகாமைவிட்டு வெளியேறி பாதயாத்திரையாக செல்வதுடன், அமைப்புக்குள் நடக்கும் சித்திரவதைகள், கொடுமைகள் தொடர்பாக தமிழக பொலிசிலும் முறையிடுவது என முடிவிற்கு வந்தோம்.

தொடரும் ….

– சீலன்

 


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.