கருணா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ….

‘கருணா அம்மான்’ என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வாக்குமூலம் அளிப்பதற்காக தற்போது (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

அண்மையில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு CIDயிற்கு பணிப்புரை விடுத்த பதில் பொலிஸ் மா அதிபர், கருணா அம்மானிடம் வாக்குமூலம் பெறுமாறும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தன்னால் சமூகமளிக்க முடியாத நிலையில், சுகவீனமுற்றுள்ளதாக கருணா அம்மான், தனது சட்டத்தரணி மூலம் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (CID) நேற்றுமுன்தினம் (23) அறிவித்திருந்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில், அகில இலங்கை தமிழர் மகாசபை எனும் கட்சியில் போட்டியிடும், முன்னாள் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன், அண்மையில் கூட்டமொன்றில் உரையாற்றியபோது, கொரோனாவை விட கொடூரமானவன் என, காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்த கருத்து உண்மையே என்றும், ஆனையிறவில் ஒரே இரவில் 2,000 – 3,000 இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

Comments are closed.