போருக்குத் தூண்டப்படுகின்றதா ஈரான்? – சுவிசிலிருந்து சண் தவராஜா

உலகில் எப்போதும் கொதிநிலையில் இருந்து கொண்டிருக்கும் ஒரு பிராந்தியம் மத்திய கிழக்கு. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களின் மத்தியிலும் அமைந்திருக்கும் அந்தப் பிரதேசத்தின் பூகோள அமைவிடம் காரணமானது அல்ல இந்தக் கொதிநிலை. உலகில் தங்கத்திற்கு அடுத்ததான பெறுமதியான மூலப்பொருள் எனக் கருதப்படும் பெற்றோலிய மூலவளத்தைக் கொண்ட பிராந்தியம் என்பதனாலும் அல்ல. அல்லது உலகின் பெரிய மதங்களுள் ஒன்றான இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுவோரை அதிகமாகக் கொண்ட பிராந்தியம் என்பதனாலும் அல்ல. அந்தக் கொதிநிலைக்கான ஒரே காரணம் ‘வாக்களிக்கப்பட்ட பூமி’ என யூதர்களால் கொண்டாடப்படும் இஸ்ரேல் நாடு அந்தப் பிராந்தியத்தில் அமைந்திருப்பதுவே.

இஸ்ரேலின் நாட்டாண்மைத்தனம்

ஒரு நாடு ஒரு பிராந்தியத்தில் அமைந்திருப்பதனால் மாத்திரம் அந்தப் பிராந்தியம் கொதிநிலை கொண்டதாக மாறிவிடுமா? ஆம் என்பதற்கு ஒரே எடுத்துக்காட்டு இஸ்ரேல். தனது நாட்டின் பாதுகாப்பை விட மேலானது எதுவும் இல்லை. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலகின் எந்தச் சட்டத்தையும் மீறிச் செயற்பட முடியும். எந்த நாட்டின் மீதும் படையெடுக்க முடியும். Israelஎல்லைகளைத் துச்சமென நினைத்து, ஊடுருவித் தாக்குதல்களை நடத்த முடியும். ஏன் நிலங்களைக் கூட ஆக்கிரமிக்க முடியும் என்பதே இஸ்ரேலின் கொள்கை. சுற்றிவரப் பகை நாடுகளைக் கொண்டிருந்தாலும், அயல் நாடுகளான பாலஸ்தீனம், யோர்தான், சிரியா ஆகிய நாடுகளின் நிலங்களைக் கவர்ந்து தன்வசம் வைத்திருந்தாலும் அச்சமின்றி இஸ்ரேல் தொடர்ந்து தனது நடவடிக்கைகளைத் தொடர இரண்டே இரண்டு காரணங்கள். ஒன்று அந்த நாட்டின் வசம் உள்ள அணு ஆயுதங்கள். இரண்டாவது உலகக் காவல்காரன் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் ஆசீர்வாதம். துணைக் காரணங்களாக வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் அமெரிக்க-இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாடு. உலகெங்கும் உள்ள நாடுகளில் பரந்து வாழும் அதீத செல்வாக்குமிக்க யூத இன பன்னாட்டு வணிகர்களின் அனுசரணை என்பவற்றைக் கூறிக் கொள்ள முடியும்.

உலக நாடுகளின் சிறந்த உளவுப் பிரிவுகளுள் ஒன்று என வர்ணிக்கப்படும் மொசாட் அமைப்பின் பார்வை படாத நாடுகளே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு அதன் வல்லமை வெகு பிரசித்தம். உலகில் உள்ள மிக இளமையான நாடுகளுள் ஒன்று இஸ்ரேல். 1948 மே 14 ஆம் திகதி அந்த நாட்டின் சுதந்திரம் பிரகடனம் செய்யப்பட்ட போதில், அந்த நாடு அந்தப் Report: secret group captured Israeli Mossad officers in Lebanon – Middle East Monitorபிராந்தியத்திலேயே ஒரு வெடிகுண்டாக மாறப் போகின்றது என்ற ஐயம் எழுந்திருக்கவில்லை.        2 ஆம் உலக யுத்தத்தின் பின்னான பனிப்போர் உலகம், இஸ்ரேல் போன்ற ஒரு நாட்டின் அவசியத்தை அமெரிக்க முகாமிற்கு வெகுவாக உணரச் செய்தது. தன்னால் நேரடியாகச் செய்ய முடியாத பல காரியங்களை இஸ்ரேலின் துணையோடு மேற்குலகம் சாதித்துக் கொண்டது. யூதர்களுக்கு எதிரான படுகொலைகளைப் புரிந்தோரை உலகம் முழுவதிலும் தேடியலைந்து பழிதீர்த்துக் கொள்ளும் கொள்கைகளைக் கொண்டிருந்த இஸ்ரேல் மேற்குலகின் தேவையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. தனது நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றித் தருகின்ற அதேவேளை தனது தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டது. அரசியல்வாதிகள் போடும் திட்டங்கள் யாவற்றையும் எந்தவிதத் தவறும் நிகழாமல் கச்சிதமாகச் செய்து முடிப்பது உலகெங்கும் தனது சிறந்த வலைப்பின்னலைக் கொண்டுள்ள மொசாட்.

தன்னைப் பலப்படுத்து, எதிரியைச் சீர்குலை

பிராந்தியத்தில் தன்னைப் பலப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்த இஸ்ரேல் சுற்றியுள்ள நாடுகளின் பலத்தைச் சிதைத்து விடுவதிலும் பேரார்வம் கொண்டிருந்தது. பனிப்போரின் உச்சக் கட்டமாக அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடே வல்லமை மிக்க நாடு என்ற ஒரு நிலைப்பாடு உருவான போதில் தனது நாட்டில் அணுவாயுதத்தை உற்பத்தி செய்து கொண்ட இஸ்ரேல், தனது பிராந்தியத்தில் ஒரு ‘இஸ்லாமிய அணுகுண்டு’ உருவாகி விடக்கூடாது என்பதில் அதிக கரிசனை கொண்டிருந்தது. ஆனால், 1979 இல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி இஸ்ரேலின் பிராந்திய வல்லமைக்கு முதலாவது பெருஞ் சவாலாக மாறியது. அதிலும் ஈரான் அணுசக்தி விஞ்ஞானத்தில் ஏற்படுத்திக் கொண்ட முன்னேற்றம் இஸ்ரேலுக்கு மேலும் கிலியை ஏற்படுத்தியது. அணு ஆராய்ச்சி என்பது சக்தித் தேவைகளுக்கானது மட்டுமன்றி, அணுகுண்டு உருவாக்கவும் பயன்படக் கூடும் என்பதை அனுபவத்தில் தெரிந்து வைத்துள்ள இஸ்ரேல், ஈரானின் அணு ஆராய்ச்சித் திட்டத்தைச் சீர்குலைத்துவிட பல்வேறு தாக்குதல்களை நடாத்தி உள்ளதுடன் பல விஞ்ஞானிகளைப் படுகொலையும் செய்துள்ளது. இந்த வரிசையில் இறுதியாக நடந்த கொலையே நவம்பர் 27 ஆம் திகதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நிகழ்ந்த கலாநிதி மொஹ்சின் பாக்ரிஸாதே-மகாவடி என்பவரின் கொலை.

ஈரானிய அணுசக்தித் திட்டத்தின் தலைவர் என வர்ணிக்கப்படும் இவர் எதிரிகளின் இலக்குகளுள் ஒன்று என்பதை முன்கூட்டியே கணித்து வைத்திருந்த நிலையிலேயே அவருக்கு விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை ஈரானிய அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. இவ்வாறு கணிப்பதற்குப் பெரிய நிபுணத்துவம் எதுவும் வேண்டியிருக்கவில்லை. இஸ்ரேலின் தற்போதைய தலைமை அமைச்சரான பெஞ்சமின் நெத்தன்யாஹூ 2018 ஆம் ஆண்டு ஏப்ரலிலேயே ஈரானிய அணுசக்தித் திட்டம் தொடர்பான ஒரு விளக்கத்தைத் தந்தபோது கலாநிதி பாக்ரிஸாதே அவர்களின் பெரைக் குறிப்பிட்டதுடன், அவரின் பெயரை ஞாபகத்தில் வைத்திருக்குமாறும் கேட்டிருந்தார். அப்போதே அவரின் தலைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகிவிட்டது.

கலாநிதி பாக்ரிஸாதே கொலையைப் புரிந்தது யார்?

Intelligence minister: We know what is happening everywhere in Iran - The Jerusalem Post

இந்தக் கொலை தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலழித்த இஸ்ரேலிய புலனாய்வுத்துறை அமைச்சர் எலி கோஹான், இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள ஐரோப்பிய நாடுகளை “அவை தமது தலைகளை மண்ணில் புதைத்துக் கொண்டுள்ளதாகக்” கடுமையாகச் சாடியுள்ளார். “உலகில் இருந்து அவர் அகற்றப்பட்டமை மத்திய கிழக்கிற்கு மட்டுமன்றி முழு உலகிற்குமே பங்களிப்பு நல்கியுள்ளது. அணு ஆயுதம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் எவரும் நடக்கும் பிணங்களுக்குச் சமமானவர்கள்” என்பது அவரது கருத்து.

அனைத்துக்கும் மேலாக, வலதுசாரிப் பத்திரிகையான ஜெருசலேம் போஸ்ற் வெளியிட்டுள்ள செய்தியில், “அணுசக்தித் திட்டத்தில் பங்கு கொள்ளும் எந்த ஈரானியராக இருந்தாலும் அவர் கண்டுபிடிக்கப்பட்டுக் கொல்லப்படுவார் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது” என்கிறது.

கொலை நடந்தவுடனேயே ஈரான் அரசாங்கத் தரப்பிலிருந்து வெளிவந்த செய்திகள் இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டுவதாகவே அமைந்திருந்தன. கலாநிதி பாக்ரிஸாதே அவர்கள் சென்ற வாகனத் தொடரணி 12 ஆயுததாரிகளால் வழிமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளிவந்த போதிலும் அவை பின்னர் திருத்திக் கொள்ளப்பட்டன. தூரத்தில் இருந்து இயக்கப்படும் சாதனத்தின் துணையுடன் இணைக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கி மூலமே இந்தக் கொலை நடைபெற்றதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சாதனத்தைப் பாவிக்கக்கூடிய தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள நாடு அந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேல் மாத்திரமே.

அது மாத்திரமன்றி இஸ்ரேல் இந்தத் தாக்குதலுக்கு மறைமுகமாகப் பொறுப்பேற்கவும் செய்திருக்கின்றது. நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்குத் தகவல் தந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை நபர்கள் இந்தத் தாக்குதலின் பின்னணியில் மொசாட்டே இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகச் சொல்லப்படும் தன்னை இனங்காட்டிக் கொள்ளாத உளவுத்துறை அதிகாரியொருவர் “கலாநிதி பாக்ரிஸாதே கொலையைப் புரிந்ததற்காக உலகமே இஸ்ரேலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அது மாத்திரமன்றி, இதே பாணியில் 2010 முதல் 2012 ஆம் ஆண்டுவரை 5 ஈரானிய விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதுவும், அந்தக் கொலைகள் தொடர்பில் இஸ்ரேல் மீதே குற்றஞ் சாட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது எதற்காக இந்தக் கொலை?

2018 ஆம் ஆண்டில் அறியப்பட்டிருந்த ‘எதிரி’ ஒருவரை அழிக்க ஏன் தற்போதுவரை இஸ்ரேல் காத்திருந்தது? அதில்தான் இஸ்ரேலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் தந்திரம் வெளிப்படுகின்றது. தனக்கு அச்சுறுத்தல் எனக் கருதப்படும் விஞ்ஞானியும் கொல்லப்பட வேண்டும். அதேசமயம், தான் நினைக்கும் விடயமும் உலக அரங்கில் நிறைவேற வேண்டும்.
தனது பதவியைத் துறந்து ஜோ பைடனுக்கு வழிவிட தற்போதைய அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்புக்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. தேர்தலில் தான் தோற்கவில்லை எனச் சொல்லிக் கொண்டிருக்கும் ட்ரம்ப் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக ஈரானுடன் ஒரு போரைத் தொடங்கிவிட நினைக்கிறார். இதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் தொடர்ந்தும் தானே இருக்கலாம், முடியாத பட்சத்தில் புதிதாக வருபவருக்கு ஒரு தொல்லையையாவது ஏற்படுத்திவட்டுப் போகலாம் என்பது அவரது கணக்கு.

அதே சமயம் அந்த யுத்தம் அமெரிக்காவால் தொடங்கப்பட்டதாக இருக்காமல் ஈரானால் தொடங்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். நவம்பர் 12 ஆம் திகதி இது தொடர்பாக அவர் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடாத்தியதாக ஊடகச் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், ஈரான் மீதான தாக்குதலுக்கு இணங்குவதற்கு பாதுகாப்புத் துறையினர் முன்வரவில்லை என்கின்றது அந்தச் செய்தி.

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், பெரும்பான்மைப் பலம் இல்லாமல் ஆட்சிக் Benjamin Netanyahu - Wikipediaகதிரையில் அமர்ந்திருக்கும் இஸ்ரேலிய தலைமை அமைச்சர் நெத்தன்யாஹ{ இந்தவாரம் நாடாளுமன்றத்தில் ஒரு பலப்பரீட்சையை எதிர்கொண்டுள்ளார். எனவே அவரும் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருக்கின்றார். ஈரானிய விஞ்ஞானியின் படுகொலை அதற்கான ஒரு வாய்ப்பை வழங்கினாலும், ஈரானுடனான போர் என்பது தேவைக்கும் அதிகமான செல்வாக்கை அவருக்கு வழங்கக் கூடும்.

உருவான நாள் முதலாக அமெரிக்காவுடன் தேன்நிலவு கொண்டாடிவரும் இஸ்ரேல், கடந்த 72 வருடங்களில் அதிக சலுகைகளை அமெரிக்காவிடம் இருந்து பெற்றது ட்ரம்ப் அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே. அதில் குறிப்பிடத்தக்கது ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா ஏற்றுக் கொண்டமை மற்றும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா தன்னிச்சையாக வெளியேறியமை. தற்போதைய நிலையில், புதிதாகப் பதவியேற்க உள்ள ஜோ பைடன் நிர்வாகம் ஜெருசலேம் விடயத்தில் மாற்றம் செய்யாதுவிடினும் ஈரானுடனான அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ட்ரம்புக்கு முந்திய அமெரிக்க அரசுத் தலைவரான பராக் ஒபாமாவின் பதவிக் காலத்தின் சாதனைகளுள் ஒன்றெனக் கொண்டாடப்பட்ட ஈரானிய அணுசக்தி ஒப்பந்தந்தை முன்னர் இருந்தவாறே மீள அமுல்படுத்துவது என்பதை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், ஈரானுக்கு சில விட்டுக் கொடுப்புகளைச் செய்யலாம் என ஜோ பைடன் நிர்வாகம் நினைத்தாலும் அதற்கான வாய்ப்புகளை இல்லாமற் செய்வதே இஸ்ரேலின் திட்டம்.

China's Huawei hid business operation in Iran after Reuters reported links to CFO | Amwal Al Ghad

விஞ்ஞானி கலாநிதி பாக்ரிஸாதே அவர்களின் கொலையைத் தொடர்ந்து இரண்டு வகையான குரல்கள் ஈரானில் எழுந்துள்ளன. ஆத்திரமூட்டும் நோக்கத்தோடு செய்யப்பட்ட தாக்குதல் என்பதால் பொறுமை காக்கப்பட வேண்டும் என ஒரு சாரார் குரல்தர, பதிலடியாக இஸ்ரேலிய துறைமுக நகரான ஹைபா மீது தாக்குதல் நடாத்தப்பட வேண்டும் என மற்றோரு சாரார் கோரிக்கை முன்வைத்துள்ளனர். ஜோ பிடன் தலைமையிலான புதிய நிர்வாகத்தில் உறவுகள் சீர்படும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ள ஈரானிய அரசுத் தலைவர் ஹஸன் ரொஹானி இது விடயத்தில் மென்மையான அணுகுமுறையையே கடைப்படிப்பார் எனத் தெரிகின்றது. ஆனால், எதிர்காலப் பேச்சுக்களின் போது – விஞ்ஞானி படுகொலையை மனதில் வைத்துக் கொண்டு – ஈரான் ஒரு இறுக்கமான அணுகுமுறையையே கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உடனடிப் போர் இல்லாது விடினும், ஈரானின் இத்தகைய இறுக்கமான அணுகுமுறை கூட தனக்கு ஒரு ஆறுதலான விடயமே என்பது இஸ்ரேலின் கணக்கு.

மொத்தத்தில் ட்ரம்ப் நிர்வாகத்தில் மாத்திரமன்றி வரப்போகும் பைடன் நிர்வாகத்திலும் தனது நலன்களைக் காத்துக் கொள்வதுடன் தனது நாட்டாண்மைத் தனத்தையும் பேண விரும்புகிறது இஸ்ரேல். “மயிலே மயிலே இறகு போடு” எனக் கேட்டுக் கொண்டிராமல் மயில் தானாகவே வந்து இறகைப் போடச் செய்யும் பட்டறிவு இஸ்ரேலுக்கு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது என்பதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டே கலாநிதி பாக்ரிஸாதே அவர்களது கொலை. பைடன் பதவிக் கட்டிலில் அமர்வதற்கு முன்னால் இதுபோன்ற இன்னும் பல சோதனைகள் ஈரானுக்குக் காத்திருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை.

Leave A Reply

Your email address will not be published.