கண்மணியே பேசு பாகம் : எட்டு  

கண்மணியே பேசு

-கோதை

பாகம் : எட்டு

 

 

அவள் மனதில் குழப்பங்கள் ஆரம்பித்து சில நாட்களாயிற்று. கையில் வைத்து தாங்கிய கட்டிய  கணவனைப் புற்றுநோய்க்குக் காவு கொடுத்து வருடங்கள் நான்குதான் ஆயிற்று என்றாலும் அவளுக்கு அந்தத் தனிமையும் வேதனையும் பல ஆண்டுகள் ஆனாற்போல் ஒரு அயற்சியைக் கொடுத்திருந்தன.

அவள் தோழி பார்த்த திசையில் அவள் பார்த்த பிரமுகருக்குப் பக்கத்தில் அவ்வளவு உயரமாகக் கம்பீரமாக இருந்தவனைப் பார்க்க அவளுக்குத் திகைப்பாய் இருந்தது என்னவோ உண்மைதான்.  இவனுக்கும் அவனுக்கும் என்ன தான் நட்பு ?  ஏன் இவர்கள் இருவரும் சேர்ந்தே திரிகிறார்கள்?  கண்மணிக்கு ஒரு வினாடி மனதில் தோன்றிய கேள்வி வந்த வேகத்திலேயே மறைந்தும் போனது.

அவளுக்கு அதன் பின்னர் வந்த நாட்களில் தான் சேர்ந்த இசைக்குழுவில் இணைந்து பாடுவதும் அதன் தொடர்பில் ஏற்பட்ட ஏனைய நிகழ்ச்சி நிரல்களைச் சரி பார்ப்பதும் என்று நாட்கள் சிறிதே வித்தியாசமாய் ஓடிக்கொண்டிருக்க, உலகின் இன்னொரு மூலையில் அவளுக்கும் சரி எவருக்கும் சரி தெரியாமல் சில விடயங்கள் பரம இரகசியமாய் நடந்தேறிக்கொண்டிருந்தன.

************************************************************************************************************************************

மக்களிடமிருந்து கேட்டும் பலவந்தமாயும் பிடுங்கப்பட்ட பணமனைத்தையும் பக்குவமாய் தமது பெயரில் மாற்றிவிட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவங்களினூடாக, தம்மை மக்களை நேசிக்கும் மானுடர்களாய் மாற்றிச் சிலர் அவதாரம் எடுக்கத் தொடங்கியிருந்தனர்.  இவர்கள் தமது அசையும் அசையாச் சொத்துக்களை தாம் வசிக்கும் நாடுகளிலும் அண்டை நாடுகளிலும் பதுக்குவதில் வல்லவராய் மாறினர்.

பாடசாலை ஆண்டு விழாக்களில் இவர்கள் ரோதனை தாங்க முடியாததாய் வளர்ந்தது.  சில நீதி நியாயம் பார்த்து வாழ்பவர்களும் அவர்களைப் பற்றிய  சரியான விளக்கம் இன்றி அவர்களுக்குப் பின் வால் பிடித்து உதவி செய்யத் தொடங்கியிருந்தனர்.  பதுக்கிய பணத்தை வியாபார நிலையங்கள், திருமண மண்டபங்கள் எனக் கலகலப்பாக்கினர்.

 

இதில் மிகக் கொடிய, ஆபத்தான விடயமொன்றும் மெல்ல வித்திட்டு வளரத் தொடங்கியிருந்தது.  பொது மக்களுக்கு இது எதையும் விசாரிப்பதற்கோ அல்லது அதையிட்டு கவலைப்படுவதற்கோ நேரமெதுவும் கிடைக்காமல்ப் போனதற்கு அவர்களது போர்க்கால அவலங்களே காரணமாயிருக்குமோ என எண்ணத் தோன்றியது சிலருக்கு மட்டும்.

இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியில் இரு தோழிகள் சந்தித்துக் கொண்டனர்.

“இண்டைக்கு என்னை வளர்த்தவர் என்னைப் பார்ப்பதற்காக வெளிநாட்டில இருந்து வாரார்.” இருபதே வயதான அந்தப் பெண் தன் சிநேகிதியிடம் சொல்லி மாய்ந்து போனது.

“அப்ப உன்ர அப்பா உன்னைப் பார்க்க வாரார் எண்டு சொல்லு!”  அவள் தோழி தீபா உற்சாகம் குறையாத குரலில் அழுத்தம் கொடுத்தாள்.

 

“நீ சொல்லுறது சரிதானடி, எனக்கு என்ற அப்பாவையும் அம்மாவையும் ஏதோ ஒரு கொஞ்சமாய்த் தான் ஞாபகம் இருக்கு. நான் வளர்ந்தது எல்லாமே இந்தக் குழந்தைகள் காப்பகத்தில் தானே, நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் இவர்களை மறக்க முடியாதடி.” அவள் நன்றிக்கடனை சொற்களில் வடிக்க முற்பட்டு திணறிப் போனாள்.

கடந்த வாரம் தான் அவளுக்கு தன் வளர்ப்புத் தந்தை பற்றிய விபரங்கள் இன்னொரு தோழி மூலமாகத் தற்செயலாய் வந்து சேர்ந்தது.  அவள் தன் பெற்றோரை இழந்த போது அவளுக்கு எட்டு வயது, அவளுடைய தங்கைக்கு நான்கு வயது.

தெருவில் பசியோடு அலைந்த காலத்தில்த் தான் அவளை இந்த காப்பகம் அனைத்துக் கொண்டது. அவளுக்கு ஒரு தன்னார்வத் தொண்டர் ஒருவர் கல்வி உதவி செய்வதற்கு ஒத்துழைப்பதாய் அறிந்து கொண்டாள். அவரது விபரங்கள் மற்றவர்களைப் போலவே அவளுக்கும் சொல்லப்படவில்லையாயினும் அவரை அவள் மானசீகமாக தன்னை தத்தெடுத்த ஒரு தந்தையாய் கடவுளுக்கு நிகராய் வணங்கி வாழ்த்தத் தொடங்கினாள்.

 

“இண்டைக்கு நீ வளர்ந்து படிச்சு இங்க பக்கத்திலேயே வேலையும் கிடைச்சு நல்லாய் இருக்கிறதுக்கு அவர் தான் காரணம். காலில விழுந்து கும்பிட்டாலும் அந்த நன்றியைத் தெரிவிக்கவே ஏலாது!” அவளது தோழி தீபா இவளுடைய  உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்தாள்.

அவளுடைய காப்பகத்தில் அவளுக்கு எந்தக் குறையுமில்லாமலே வளர்க்கப்பட்டாள்.  தன்னோடு தங்கையும் சேர்ந்தே வளர்ந்தது தான் செய்த புண்ணியமே என எண்ணிக்கொள்வாள்.  ஏனெனில் அவளுடைய தோழி ஒருத்தி இவளுடைய காப்பகத்திலும் அவளுடைய சகோதரன் இன்னொரு காப்பாகத்திலும் வளர்ந்தார்கள்.

அவளுக்கு பதினெட்டு வயது வரையும் அவளுடைய கல்வி, உடை உறையுள் என அனைத்து அடிப்படை வசதிகளும் அவளுக்கு குறையேதுமில்லாமல் வழங்கப்பட்டது.

 

“உன்ர வெளிநாட்டு அப்பாவைப் பார்க்க நானும் வரட்டோ ?” தீபாவின் கண்களில் ஆர்வம் கொப்பளித்தது.

 

“ம்ம்ம்ம் எனக்கும் நீ என்னோட சேர்ந்து வாறது விருப்பம் தான். ஆனால் அப்பாவுக்கு அது விருப்பமோ தெரியாது. தங்கச்சியைக்கூட நான் கூட்டிக்கொண்டு போகேல்ல…”

 

அவள் இழுத்ததுக்குக் காரணம் இல்லாமல் இல்லை.  கடந்த மூன்று மாதங்களாகத் தான் அவளுடைய அப்பா அவளைக் கண்டு பிடித்து அவளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தார்.  மிகவும் அன்பகப் பேசினார், அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பது வரை கேட்டுத் தெரிந்து கொண்டார்.  ஆனால் காப்பகத்தின் விதிமுறைகளை மீறி அவளைத் தொடர்பு கொண்டதால் யாருக்கும் இதைப் பற்றி சொல்லி தேவையில்லாத பிரச்சனைகளை வளர்த்து விடாதே என அறிவுரை சொன்னார். அவள் காப்பகத்தின் பாதுகாப்பிலிருந்து வெளியே வசிக்கத் தொடங்கியிருந்தாலும் அவர்களுடனான தொடர்பு முற்றாக அவளிடமிருந்து விலகியிருக்கவில்லை. அவளுக்கும் அப்பாவின் வார்த்தைகள் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என ஆகியது.

“நீயும் வாறதெண்டால் வா தீபா, ஒருத்தருக்கும் சொல்லிக்கில்லிப் போடாதை. மெதுவாய் வந்து தூரத்தில நிண்டு பாரனடி!”

பார்ப்பதற்கு அழகாய் இருந்தவளை அவள் உடுத்தியிருந்த சுரிதார் இன்னும் அழகாக்கியது.

“நல்ல வடிவாய் இருக்கிறாய், உன்ர அம்மாவும் அப்பாவும்  இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசப் பட்டிருப்பினம் உன்னைப் பார்த்து!” சொல்லிவிட்டு தன் தோழியின் கண்களில் தெரிந்த கண்ணீரைப் பார்த்து அதை சொல்லாமலே இருந்திருக்கலாம் எனத் தீபா தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.

அவள் சிறிது சிறிதாக, தன் சிறு வயது ஞாபகங்களில் இருந்த அப்பாவை நினைவுக்கு கொண்டு வந்தாள்.

தோழிகள் இருவரும் தமது வயதுக்கேயுரிய துள்ளலுடன் அப்பாவைச் சந்திக்க அந்த ஐஸ்க்ரீம் கடையை நோக்கி நடக்கத் தொடங்கினர் ஓநாய் ஒன்று காத்திருந்தது தெரியாமலே…

 

ஒநாய்களின் பசியும்  தொடரும் …

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.