தமிழ்க் கூட்டமைப்பைத் தடை செய்வது தமிழரையும் தடை செய்வதற்குச் சமம்! மங்கள

தமிழ்க் கூட்டமைப்பைத் தடை செய்வது
தமிழரையும் தடை செய்வதற்குச் சமம்!

வாய்க்கு வந்த மாதிரி உளறாதீர்கள்;
ராஜபக்ச தரப்புக்கு மங்கள பதிலடி

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்வது என்பது இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களையும்  தடை செய்வதற்கு ஒப்பானது.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இது தொடர்பில் மங்கள சமரவீர கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவர்கள். தமிழ் மக்களின் பிரதிநிதிகள்தான் கூட்டமைப்பினர். கூட்டமைப்பிலுள்ள அனைவரும் தமிழர்கள். இதை உணராது கூட்டமைப்பினருக்கு ராஜபக்ச தரப்பு புலி முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. கூட்டமைப்பினரைத் தடைசெய்ய வேண்டும் என்ற கடும் இனவாதக் கருத்தை ராஜபக்ச தரப்பினர் உடன் வாபஸ் பெற வேண்டும்.

இனவாத சிந்தனையில் செயற்படுபவர்களை அமைச்சர்களாக நியமித்தால் அவர்கள் காலம், நேரம், இடம் பாராது வாய்க்கு வந்த மாதிரி உளறுவார்கள் என்பது திண்ணம்.

இல்லாதொழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் மீண்டும் ராஜபக்ச தரப்பினரே ஞாபகப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்வது என்பது இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களையும்  தடை செய்வதற்கு ஒப்பானது என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.