கொரோனா தடுப்பும் எதிர்காலமும் : சுவிசிலிருந்து சண் தவராஜா

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கைகளுள் ஒன்று. அறுவடையோடு தொடர்புடையதாக இருப்பினும் அந்த நம்பிக்கையில் பொருள் இருப்பதாகவே தெரிகின்றது. அதே போன்று, யேசுவின் பிறப்பை ஒட்டி உலகெங்கும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் பாலன் பிறப்பு பண்டிகையை ஒட்டியும் தொடர்ந்து வரும் புது வருடத்தை ஒட்டியும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை ஒன்று மேற்குலகில் நிலவி வருகின்றது. உலகில் அதிக மக்கட் தொகை கொண்ட நாடான சீனாவில் புதிய வருடம் யனவரி 21 முதல் பெப்ரவரி 20 வரையான காலப் பகுதியுள் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகின்றது. ஆண்டுதோறும் வெவ்வேறு திகதியில் கொண்டாடப்படும் புத்தாண்டு இவ்வருடம் பெப்ரவரி 12 ஆம் திகதியில் வருகிறது. பரிசுப் பொருட்களை ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்வது மட்டுமன்றி, கடந்தகாலக் கசப்புகளையும் மறந்துவிடும் ஒரு நாளாக இது அமைகிறது. எனவே, உலகின் பெரும்பாலான மக்கள் ஆண்டுதோறும் ஒருவித நம்பிக்கையோடுதான் புத்தாண்டிலும், தையிலும் கால் பதிக்கின்றார்கள் எனலாம். அடுத்த வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல.

கடந்த ஒரு வருடமாக கொரோனாக் கொள்ளை நோயின் கொடுமையினால் பாதிக்கப்பட்டு சுமார் 16 இலட்சம் மக்களை இழந்துள்ள மனித குலம் இந்த நோயின் கெடுபிடியிலிருந்து விடுபடும் நன்நாளையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த வாய்ப்பு புதிய வருடத்தில் கிட்டுவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் கூட, அதை அனுபவிக்க நாம் இருப்போமா என்ற கேள்வியும் கூடவே தொடருகின்றது.
அறிவியல் வளர்ச்சி மற்றும் தீநுண்மியியலில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளின் விளைவாக ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகள் உலகெங்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 கட்ட ஆய்வுகளின் பின்னர் பொதுமக்களுக்கு அவற்றை வழங்கும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. உலகின் பல நாடுகளிலும் பல பிரமுகர்கள் முதல் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். இந்த ஆண்டு முடிவிற்குள் பிரித்தானியா, அமெரிக்கா, ரஸ்யா, கனடா, சீனா, இந்தோனேசியா, இஸ்ரேல் என உலகின் பல நாடுகளில் பல மில்லியன் கணக்கான மக்கள் இந்தத் தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது.
தற்போதைய நிலையில் அமெரிக்க உற்பத்திகளான பைசர் மற்றும் மொடெர்னா, ரஸ்ய உற்பத்தியான ஸ்புட்னிக் – வி, சீனாவின் நான்கு வகையான தடுப்பு மருந்துகள் மற்றும் ஒக்ஸ்போட் மருந்து எனப் பல வகையான மருந்துகள் பாவனைக்கு வந்துள்ளன அல்லது பாவனைக்கு வருவதற்குத் தயராக உள்ளன. பல்வேறு கேள்விகள், விமர்சனங்கள் உள்ள போதிலும் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் விதத்தில் இந்தக் கண்டு பிடிப்புகள் உள்ளன.

உயிர்க் கொல்லி நோய்கள்

மனிதகுல வரலாற்றில்; பல உயிர்க்கொல்லி நோய்களுக்கு வெற்றிகரமான மருந்துகள் இன்றுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஒருசில நோய்கள் முற்றுமுழுதாக இல்லையென்றே சொல்லுமளவிற்கு ஒழிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான மக்களைப் பலிகொண்ட சின்னம்மை என்ற நோய் அத்தகையதே. இளம்பிள்ளைவாதம் உள்ளிட்ட பல நோய்கள் ஒருசில பத்தாண்டுகளின் முன்னர் பேசுபொருளாக இருந்த நிலை தற்போது மாறியிருக்கின்றது. இதனால் பல மில்லியன் உயிர்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின தகவல்களின் படி 20 க்கும் மேற்பட்ட உயிர்க் கொல்லி நோய்களுக்கு இதுவரை வெற்றிகரமாக மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

தீநுண்மிகளுக்கு எதிரான மனித குலத்தின் போராட்ட வரலாறு மிக நெடியது. அறிவியல் வளர்ச்சிக் காலகட்டத்தில் அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அளப்பரியன. பொதுவாக தீநுண்மித் தொற்றுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க 18 முதல் 24 மாதங்களாவது அவசியம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. ஆனால், கொரோனாவுக்கான மருந்து 10 மாதங்களில் கண்டு பிடிக்கப்பட்டமை அறிவியல் சாதனையாகக் கொண்டாடப்படும் அதேவேளை, அதன் திறன் குறித்த சந்தேகங்களையும் எழுப்பி நிற்கின்றது. தீநுண்மியியலில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவந்த ஆராய்ச்சிகளே கொரோனாவுக்கான மருந்தை குறுகிய காலத்தில் கண்டு பிடிப்பதைச் சாத்தியமாக்கியது. எனினும், இந்த மருந்தை எதிர்ப்போரின் நியாயமான சந்தேகங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையே.

உலகின் பல நாடுகளில் கொரோனாத் தடுப்பு மருந்து வழங்கலுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அனைத்து மக்களுக்கும் கண்டிப்பாக தடுப்பு மருந்து வழங்கியே தீருவது எனச் சில அரசாங்கங்கள் தீர்மானித்துள்ளன. தொற்று நோய்களுக்கான மருந்தை மக்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மாத்திரம் வழங்கி அவற்றை ஒழிக்க முடியாது என்பதே யதார்த்தம். அதேவேளை, ஒருவருக்குப் பலவந்தமாக மருந்தை ஏற்றும் உரிமை அரசாங்கத்திற்கு உள்ளதா? அவ்வாறு செய்தல் தனிமனித உரிமைகளை மீறுவது ஆகாதா? என்ற கேள்விகள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வருகின்றன.

மூன்று கட்ட மருந்து விநியோகம்

அது மாத்திரமன்றி தற்போது பாவனைக்கு வந்துள்ள மருந்துகள் யாவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே உள்ளன. எனவே, முன்னுரிமை அடிப்படையிலேயே அவை மக்களுக்குக் கிடைக்கவுள்ளன. பெரும்பாலான அரசாங்கங்களின் திட்டப்படி முதலில் மொத்த சனத்தொகையில் மூன்று வீதமாக உள்ள மருத்துவ மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

இரண்டாவது கட்டமாக, அபாயகரமான நோய்களைக் கொண்டவர்களுக்கும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பு மருந்தைப் பெறவுள்ளனர். அவர்கள் மக்கட் தொகையில் 20 வீதமானோரே. மூன்றாம் கட்டமாக தடுப்பு மருந்தைப் பெறவுள்ள 20 வீதமானோரில் 65 வயதுக்கும் குறைந்தோர் வயது மூப்பின் அடிப்படையிலும், ஏனைய அபாயகரமான நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையிலும் கவனத்திற் கொள்ளப்பட உள்ளனர்.

பெரும்பாலான நாடுகளில் இவ்வாறு தடுப்பு மருந்து வழங்கி முடிக்கப்படும்போது ஏப்ரல் மாதத்தைக் கடந்திருப்போம். அப்போது மொத்த மக்கட் தொகையில் 43 வீதமானோருக்கு மாத்திரமே தடுப்பு மருந்து கிட்டியிருக்கும். தற்போதைய மருந்துகள் சராசரியாக 90 வீதமே தாங்கு திறன் கொண்டவை என அறிவிக்கப்பட்டு உள்ளமையால், தடுப்பு மருந்து பெற்றவர்களுள் கூட 10 வீதமானோர் மீண்டும் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நிலையிலேயே இருப்பர். இவர்களைத் தவிர மீதியுள்ள 60 வீதமானோர் தொடர்ச்சியாக கொரோனாத் தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதுடன், நோய்களைக் காவிக் கொண்டும் இருப்பர்.

மந்தை நிர்ப்பீடனம்

உலக சுகாதார நிறுவனத்தின் விதப்புரைகளின் படி, மந்தை நீர்ப்பிடனம் என்ற நிலையை அடைவதற்கு ஒட்டுமொத்த மக்கட் தொகையில் 65 முதல் 70 வீதமானோர் தடுப்பு மருந்தைப் பெற்றிருக்க வேண்டும். எனவே இந்த நிலையை அடைவதற்கு மேலும் 4,5 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
தற்போது மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் சூழலும் மந்தை நிர்ப்பீடனத்தை விரைவில் அடைவதற்குத் தடையாக அமைந்துள்ளது. மறுபுறம், மக்களில் ஒரு சாரார் மருந்தைப் பெற்றுக்கொள்ள முன்வராது போனால் மந்தை நிர்ப்பீடனம் தாமதமாகும் எனவும் நம்பலாம்.

இந்நிலையில். மக்களைப் பலவந்தப்படுத்தி தடுப்பு மருந்தை வழங்காமல் அவர்களோடு பேசி, விளக்கம் தந்து, அவர்களைச் சம்மதிக்கச் செய்த பின்னர் மருந்தை வழங்குவதே சாலச் சிறந்த முறை என உலக சுகாதார நிறுவனம் அறிவுரை வழங்கியுள்ளது.

அதேவேளை, தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருந்துகள் உலக நாடுகள் அனைத்துக்கும் சமமாக வழங்கப்படுமா என்றொரு கேள்வியும் எழுகின்றது. மருந்துகளை உற்பத்தி செய்துள்ள நிறுவனங்கள் வணிக நோக்கத்தோடு மாத்திரம் அவற்றைப் பங்கீடு செய்யுமா? அல்லது அரசியல் கண்ணோட்டத்தோடு அவை விநியோகிக்கப்படுமா அன்றி மனிதாபிமான நோக்கில் அவை பங்கிடப்படுமா என்ற நியாயமான கேள்வி முன்வைக்கப்படுகின்றது.

மருந்துகள் சமமாகப் பங்கிடப்படுமா?

கொரோனாக் கொள்ளை நோய் நாட்டின் எல்லைகளைக் கணக்கில் கொள்ளாமல் அனைத்து இடங்களுக்கும் பரவியுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளும் எல்லைகளைக் கடந்ததாக இருக்க வேண்டியதே யதார்த்தம். ஆனால், எனது நாடு, எனது மக்கள் என்ற சிந்தனையோடு செயற்படும் ஒருசில அரசாங்கங்கள் தமது நாட்டுக் கண்டு பிடிப்புக்களை ஏனைய நாடுகளுடன் சமமாகப் பங்கிட முன்வருமா என்ற கேள்வி எழுகிறது.

அது மாத்திரமன்றி கண்டு பிடிக்கப்பட்ட மருந்துகளைக் கொள்வனவு செய்து தனது நாட்டுக் குடிமக்கள் அனைவருக்கும் வழங்கும் நிலையில் உலகின் அனைத்து நாடுகளும் உள்ளனவா என்ற கேள்வியும் உள்ளது. மருந்தின் விலை மாத்திரமன்றி, மருந்துகளின் போக்குவரத்து மற்றும் களஞ்சியப் படுத்தல் போன்றவற்றிலும் பல இடர்பாடுகள் உள்ளன.

இத்தகைய சூழ்நிலைகளால் உலகின் வறிய நாடுகள் கைவிடப் படுமானால் உலகளாவிய கொள்ளை நோய்த் தடுப்பு என்பது கேள்விக் குறியாகவே விளங்கும்.

எதிர்பார்த்தபடியே அனைத்தும் செவ்வனே நடைபெற்றாலும் கூட ஆகக் குறைந்தது 2022 ஆம் ஆண்டு வரையுமாவது மனித குலம் கொரானா அபாயத்திலேயே இருக்கும் என்பது தெளிவாகின்றது. எனவே, இன்று நாம் கடைப்பிடித்துவரும் சுகாதாரப் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தே ஆக வேண்டும். தனிமனித இடைவெளி பேணப்பட்டே ஆக வேண்டும். முகக் கவசம் எமது வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கியே ஆக வேண்டும். பொருளாதார இழப்புக்களை மனித குலம் சந்தித்தே ஆக வேண்டும். மனித நடமாட்டம் என்பது நாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நிகழ்ந்தே ஆக வேண்டும்.

உடனடி நன்மை

தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள உடனடி நன்மையொன்றும் அது முதற் கட்டமாக மரணங்களைக் கட்டுப் படுத்தும் என்பதே. கொரோனா மரணங்கள் கட்டுப்படுத்தப் படுவதாலும், தீவிர சிகிச்சைக்காக கொரோனா நோயாளிகள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படும் நிலையில் மாற்றம் வருவதாலும் உலகெங்கும் சுகாதாரத் துறை சந்தித்து வரும் நெருக்கடிகள் வெகுவாகக் குறைவடையும். இதனால், வழக்கமாக தமது மருத்துவத் தேவைகளுக்காக, சத்திர சிகிச்சைகளுக்காக மருத்துவ மனைகளை நாடுவோர் பலன்; அடைவர். இவை தவிர, தடுப்பு மருந்தே இல்லாத ஒரு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளோமே என்ற சிந்தனையால் மன அழுத்தத்துக்கு ஆளாகித் தற்கொலை வரை செல்லும் இலட்சக் கணக்கான மக்களின் மனதில் கொரோனா ஒன்றும் வெற்றி கொள்ளப்பட முடியாத நோய் அல்ல, அதனை வெற்றி கொள்ள மனித குலம் மருந்தைக் கண்டுபிடித்து விட்டது என்ற நேர்மறைச் சிந்தனை உருவாக வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில், புதிய ஆண்டில் மனித குலம் நம்பிக்கையோடு காலடி எடுத்து வைத்தாலும் கூட, தன் முன்னைய வாழ்வை மீளப் பெற முடியாமல் இருக்கும் என்பதே உண்மை. கொரோனாவோடு வாழப் பழகிய நாம், கொரோனாவை வெற்றி கொண்டாலும் கூட, கொரோனா கற்றுத் தந்த பாடங்களோடுதான் வாழ வேண்டியிருக்கும். எனவே, முன்னைய வாழ்வை நாம் மீளப் பெறுதல் என்பது பகற் கனவாகவே அமையும்.

Leave A Reply

Your email address will not be published.