குடாநாட்டில் போதைப்பொருளையும் வன்முறையையும் கட்டுப்படுத்த பொலிஸ் இராணுவம் கூட்டு நடவடிக்கை உறுதியளித்தார் இராணுவத் தளபதி.

குடாநாட்டில் போதைப்பொருளையும் வன்முறையையும்
கட்டுப்படுத்த பொலிஸ் – இராணுவம் கூட்டு நடவடிக்கை
உறுதியளித்தார் இராணுவத் தளபதி

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை இராணுவத்தினர் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க எதிர்காலத்தில் பொலிஸாருடன் இணைந்து இராணுவமும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுவார்கள்.”

– இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு பிரதேசம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது வருமானம் குறைந்தவர்களுக்கு 700 இற்கும் மேற்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் மேலும் பல வீடுகள் அமைக்கப்படவுள்ளன. அதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன.

அத்துடன்  வடபகுதியில் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமானச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக அண்மையில் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் அனர்த்தத்தின்போது இராணுவத்தினர் மனிதாபிமான உதவிகளைப் புரிந்திருக்கிறார்கள்.

தற்போது இராணுவமானது நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் முகமாகவே செயற்பட்டு வருகின்றது. எனவே, எமது இராணுவத்தினர் இந்த மனிதாபிமானச் செயற்பாடுகளை மக்களுக்குச்  செயற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் .

தற்போது இங்கே ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை இராணுவத்தினர் கட்டுப்படுத்த வேண்டும் என ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார்.

அதற்கிணங்க எதிர்காலத்தில் பொலிஸாருடன் இணைந்து இராணுவமும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுவார்கள்.

தற்போது யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இது அனைவரும் அறிந்த விடயமே. எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதவாறு இராணுவம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.