ஜெனிவா அமர்வில் கூட்டிணைந்து செயற்படுமா தமிழ்க் கட்சிகள்? சுமந்திரன் கடும் பிரயத்தனம்

ஜெனிவா அமர்வில் கூட்டிணைந்து செயற்படுமா தமிழ்க் கட்சிகள்? – சுமந்திரன் கடும் பிரயத்தனம்.

இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலிலிருந்து இலங்கை அரசு விடுபட்டுச் செல்லாதிருக்கும் வகையிலும், இந்த விடயத்தில் சர்வதேசத்தின் பிரசன்னம் தொடர்ந்தும் நீடித்திருப்பதற்காகவும் அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடரில் மக்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன ஒன்றிணைந்து செயற்படுவதற்குக் கடும் முயற்சி எடுக்கப்படுகின்றது.

அதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், விக்னேஸ்வரன் அணியையும், கஜேந்திரகுமார் அணியையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

2015ஆம் ஆண்டு இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, அதன் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய அவகாசம் வழங்கப்பட்டும் அதிலுள்ள பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் தற்போதைய அரசு அத்தீர்மானத்திலிருந்து விலகவுள்ளது என அறிவித்துள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள கூட்டத்தொடர் தொடர்பில் தமிழ்த் தரப்பினர் இடையே முன்னெடுக்கப்பட்டுள்ள கூட்டுச் செயற்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,

“30/1 தீர்மானத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதா இல்லை புதிய தீர்மானமொன்றை உருவாக்கி நிறைவேற்றுவதா என்பது உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.  இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலிருந்து இலங்கை விவகாரம் நீங்காது நீடிக்கச் செய்திருப்பதற்கான உபாயங்களை ஏனைய தரப்புகளுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது பற்றியதொரு முன்மொழிவு விக்னேஸ்வரனிடத்திலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜெனிவா விடயத்தில் கடந்த காலத்தில் எனது நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தாலும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள விடயங்களின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு சாதகமாகப் பரிசீலிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  வெளியிடுகையில்,

“சுமந்திரனின் முன்மொழிவுகளுடன் கூடிய ஆவணம் எனக்குக் கிடைத்துள்ளது. அதுபற்றி ஆராய்ந்து வருகின்றோம். எமது கட்சி இவ்வார இறுதியில் யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளது. அதன்போது சுமந்திரனின் முன்மொழிவு தொடர்பில் இறுதி முடிவொன்றை எடுப்போம்” என்றார்.

எனினும், கொழும்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சில சட்டத்தரணிகளுடன் அந்த ஆவணம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துரையாடினார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், கட்சிக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பின்னரேயே இறுதி முடிவை உத்தியோகபூர்வமாக சுமந்திரனுக்கு அறிவிப்பது என கஜேந்திரகுமார் தீர்மானித்துள்ளார் எனவும் மேலும் தெரியவந்தது.

அதேநேரம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முன்மொழிவுகள் பற்றிய முடிவொன்றை எடுக்கவுள்ளார் என்று குறிப்பிட்டார்.

எனினும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், சர்தேச நீதிமன்றம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நாடுவதன் ஊடகாவே நியாயமான நீதி கிடைக்கும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

எவ்வாறாயினும், நான் ஐ.நா.மனித உரிமைகள் சபையை மட்டும் மையப்படுத்தாது நீதித்துறை சார்ந்தே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில், சுமந்திரன் ஐ.நா.மனித உரிமைகள் சபையை மையப்படுத்திய முன்மொழிவையே என்னிடத்தில் சமர்ப்பித்துள்ளார். ஆகவே, அதன் சாதக, பாதக நிலைமைகள் பற்றிய ஆழமான ஆய்வு அவசியம். அதற்காக எனக்கு சில நாட்கள் அவகாசம் தேவைப்படுகின்றது. எனினும், விரைவில் அவருடைய முன்மொழிவு குறித்து விரைவில் என்னுடைய நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்றும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.