இலங்கை தொடர்பான அறிக்கையை ராஜபக்ச அரசிடம் கையளித்தது ஐ.நா!

இலங்கை தொடர்பான அறிக்கையை ராஜபக்ச அரசிடம் கையளித்தது ஐ.நா.!  அடுத்த வாரம் பதில் வழங்கப்படும் எனத் தகவல்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாகச் சமர்ப்பிக்கப்படவிருக்கும் விரிவான அறிக்கை ராஜபக்ச அரசின் பார்வைக்கு நேரத்துடனேயே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அதற்கான ராஜபக்ச அரசின் பதில் அடுத்த வாரமளவில் ஜெனிவாவுக்கு வழங்கப்படுவதற்காகக் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்துக்குக் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேற்று தம்மைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர்.

வழக்கமாக, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சம்பந்தப்பட்ட அமர்வு நெருங்கும் வேளையிலேயே அங்கு ஒரு நாடு தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் அல்லது அறிக்கையாளரினால் முன்வைக்கப்படவிருக்கும் அறிக்கை சம்பந்தப்பட்ட நாட்டுக்கு வழங்கப்படும்.

ஆனால், இலங்கை விடயத்தில் இம்முறை சுமார் பத்து வார காலத்துக்கு முன்னரே அரசிடம் அது கையளிக்கப்பட்டு விட்டது.

அந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படும்போது அதற்குத் தான் முன்வைக்கப் போகின்ற பதிலின் விபரத்தை பெரும்பாலும் அடுத்த வாரத்தில் ராஜபக்ச அரசு ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் ஐ.நா. தரப்பில் சுமந்திரன் எம்.பிக்குத் கூறப்பட்டது என அறியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.