அமெரிக்க வெனிசுவேலா உறவு ? : சண் தவராஜா

அமெரிக்க அரசுத் தலைவராகப் பதவியேற்க உள்ள ஜோ பைடன் காலத்தில் உலக ஒழுங்கு எவ்வாறு அமையும் என்பது பற்றிய கருத்தாடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த வருடம் யனவரி 20 வரை உத்தியோகபூர்வ அரசுத் தலைவராக விளங்கும் டொனால்ட் ட்ரம்ப் தனது பதவியை வில்லங்கம் எதுவும் இன்றி மாற்றிக் கொடுப்பாரா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கவே செய்கின்றது. அதையும் தாண்டி, குடியரசுக் கட்சியின் பிடியிலிருந்த அரசாங்கம் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வருவதால் கொள்கை மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன.

போர்களை முடிவிற்குக் கொண்டுவரும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ட்ரம்ப்பின் பாதையில் இருந்து விலகி மீண்டும் புதிய போர்களை பைடன் நிர்வாகம் ஆரம்பிக்கலாம் என ஊகங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ட்ரம்பின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள் காரணமாக பரிகாசத்திற்கு ஆளாகியுள்ள அமெரிக்காவின் பிம்பத்தை மீளவும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிகள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ட்ரம்பின் பதவியின் இறுதிக் காலத்தில் ஈரான் மீது போர் தொடுக்க அவர் முயற்சித்தார் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவேலா மீதும் போர் தொடுக்கலாம் என்ற பேச்சும் அடிபட்டது.

ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை அடுத்து அவருக்குப் பாராட்டுத் தெரிவித்த ஈரானிய அரசுத் தலைவர் ஹசன் ரவ்ஹானி, பைடனின் பதவிக் காலத்தில் அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, வெனிசுவேலா அரசுத் தலைவர் நிக்கலஸ் மடுரோவும் ஜோ பைடன் நிர்வாகத்துடன் இணக்கப் போக்கைக் கடைப்பிடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் பதவி விலகும் ட்ரம்ப் வெனிசுவெலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு “கண்ணிவெடி வயலை” விட்டுச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடி வயல்

மடுரோவின் உவமை மிகச் சரியானதே. வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவரான யுவான் குவைடோவை இடைக்கால அரசுத் தலைவராக 2019 யனவரியில் அமெரிக்கா அங்கீகரித்த போது, அமெரிக்க – வெனிசுவேலா உறவு மிக மோசமான கட்டத்தை அடைந்தது. அமெரிக்காவின் அங்கீகாரத்தைத் தொடரந்து அதன் நட்பு நாடுகள் பலவும் குவைடோவை இடைக்கால அரசுத் தலைவராக அங்கீகரிக்கத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து மடுரோ அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பெருமளவில் தூண்டிவிடப்பட்டன.

மடுரோவிற்கு முந்திய தலைவரான ஹியுகோ சாவெஸின் இடதுசாரிச் சிந்தனைகளின் விளைவாக மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் ஏற்படுத்தியிருந்த மக்கள் ஆதரவு, குறித்த ஆர்ப்பாட்டங்களை பலமற்றவையாக மாற்றின. அது மாத்திரமன்றி மறுப்பு ஆர்ப்பாட்டங்களும் பெருமளவில் இடம்பெறத் தொடங்கின.

மேற்குலகின் பின்புலத்துடனான ஆர்ப்பாட்டங்கள் வெற்றியளிக்காத நிலையில் – தென்னமெரிக்காவில் 70 களில் மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்புப் பாணியில் – இராணுவச் சதிப் புரட்சிக்கு முயற்சிகள் செய்யப்பட்டன. வெனிசுவேலா படைத் துறை மடுரோ அரசாங்கத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததால் இராணுவச் சதிப் புரட்சி வெற்றியளிக்கவில்லை.
இதற்கிடையில் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்க அரசாங்கம் வெனிசுவேலா அரசுத் தலைவர் மடுரோவை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரது தலைக்கு 15 மில்லியன் டொலர் பெறுமதியையும் அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்கக் கூலிப்படைக் கும்பல் ஒன்று வெனிசுவேலா அரசுத் தலைவரைக் கடத்திச் செல்ல எடுத்த முயற்சி தோல்வியைத் தழுவியது.

வெனிசுவேலாவின் தவறு

இத்தனைக்கும் வெனிசுவேலா அரசாங்கம் செய்த தவறு(?) ஒன்றேயொன்றுதான். அமெரிக்க எண்ணெய் நிறுவனமான பிக் ஒயிலின் (Big Oil) பிடியில் இருந்த எண்ணெய் உற்பத்தியைத் தேசிய மயமாக்கியதே. லத்தீன் அமெரிக்காவின் முதலாவது சுதந்திரப் போராளி என வர்ணிக்கப்படும் பொலிவேராவின் கொள்கையின் படி ~உழுபவனுக்கே நிலம் சொந்தம்| என்ற பொதுவுடமைக் கொள்கையில் நடைபோட முயன்றதன் விளைவே வெனிசுவேலா இன்று அனுபவித்து வரும் அவலம் யாவற்றுக்கும் முதல்படி.

அமெரிக்க அரசுத் தலைவராக உள்ள ஒருவர் அமெரிக்கக் குடிமக்களுக்கு மாத்திரமான பிரத்தியேகத் தலைவர் என்றில்லாமல் ஒட்டு மொத்த உலக மக்களுக்கே தலைவர் என்ற சிந்தனையைக் கொண்டுள்ள அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து வைத்துள்ளது. உலகின் காவல்காரன் என வர்ணிக்கப்படும் அமெரிக்கா தான் நினைப்பதையே மற்றைய நாடுகள் கேட்க வேண்டும், உலக நலனை விடவும் அமெரிக்க நலனே – சரியாகச் சொல்வதானால் – அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலனே முதன்மையானது என்ற கருத்திலேயே செற்பட்டு வருகின்றது. இத்தகைய கருத்தியலுக்கு எதிரானவர்கள் யாவரும் தனது விரோதிகள் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு.

வெனிசுவேலாவின் இடைக்காலத் தலைவர் என்ற அந்தஸ்தை அனுபவித்துக் கொண்டு குவைடோ மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியையே தழுவின. அது தவிர, அவரைச் சூழ்ந்துள்ள நபர்கள் யாவரும் ஊழல் பேர்வழிகள் என்பதுவும் நிரூபணம் ஆகியுள்ளது. மறுபுறம், இந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் குவைடோ அணி போட்டியிடாத நிலையில் அவரது நாடாளுமன்றப் பிரதிநிதி என்ற பதவியும் பறிபோனது.

மேற்குலகின் ஆதரவு பெற்ற எதிர்க்ட்சித் தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் அரசுத் தலைவர் வேட்பாளருமான ஹென்றிக் கப்றில்லஸ் தனது தொடர்புகளுக்கு ஊடாக குவைடோவைக் கைகழுவிக் கொள்ளுமாறு மேற்குலக அரசாங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

இத்தகைய பின்னணியில், வெனிசுவேலாவின் இடைக்கால அரசுத் தலைவராக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று கௌரவத்தைப் பெற்றுக் கொண்ட குவைடோ தற்போது ஜோ பைடன் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள முயல்கின்ற போதிலும் அது வெற்றியளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் அர்த்தம் வெனிசுவேலா தொடர்பில் ஜோ பைடன் நிர்வாகம் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகின்றது என்பதே.

மலருமா புதிய உறவு?
அதனை வைத்துக் கொண்டு இரு நாடுகளுக்குமான உறவு தலைகீழ் மாற்றத்துக்கு உட்பட்டு விடும் எனக் கற்பனை பண்ண முடியாது. வெனிசுவேலாவிற்கு எதிரான அமெரிக்காவின் செயற்பாடுகள் பராக் ஒபாமா காலத்தில்தான் ஆரம்பமாகின. அப்போது துணை அரசுத் தலைவராக இருந்து கொண்டு அத்தகைய நடவடிக்கையில் நேரடியாகப் பங்கு கொண்டிருந்த ஜோ பைடன்தான் தற்போது புதிய அரசுத் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார். எனவே, மடுரோ அரசாங்கத்தை ~புனிதராகத் திருநிலைப் படுத்தி விடுவார்| என எதிர்பார்க்க முடியாது. ஆனால், பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தி ஒரு சுமுகமான உறவிற்கு வித்திடலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இது தொடர்பில் வெனிசுவேலாவின் நட்பு நாடுகளான ரஸ்யா, சீனா, ஈரான் மற்றும் கியூபா ஆகிய நாடுகளோடும் பேசுவதற்கு பைடன் நிர்வாகம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.
மேற்குலகின் பெருளாதாரத் தடைகள் காரணமாக வெனிசுவேலா மக்கள் சொல்லொணாத் துயரை அனுபவித்து வருகின்றனர். உணவுப் பொருட்கள் முதல் அன்றாடாப் பாவனைப் பொருட்களுக்கும் அங்கே தட்டுப்பாடு நிலவுகின்றது. உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளுள் ஒன்று வெனிசுவேலா. பொருளாதாரத் தடையின் விளைவாக உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு அந்த நாடு தள்ளப்பட்டுள்ளது. அண்மையில், ஈரானில் இருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட எண்ணெயை அமெரிக்கக் கடற்படை வழிமறித்துக் கடத்திய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்திருந்தமை தெரிந்ததே.

பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தும் பேரவலம்

சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னான ஒற்றைமைய உலகில் அமெரிக்கா தனிப்பெரும் வல்லரசாக உருவெடுத்ததன் பின்னான காலப்பகுதியில், தனது சொல் கேளாத நாடுகளை வழிக்குக் கொண்டு வருவதற்கு சாம, தான, பேத, தண்ட நடைமுறைகளைக் கைக்கொண்டு வருகின்றது. இத்தகைய நடவடிக்கைகளுள் யுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு நிகராக, பொருளாதாரத் தடைகளும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. யுத்த காலங்களில் விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் எத்தகையது என்பதை அனுப அடிப்படையில் தெரிந்தவர்கள் ஈழத் தமிழ் மக்கள். நாட்டினுடைய ஓரு குறித்த பிராந்தியத்தில் விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளை விட மோசமானவை ஒட்டு மொத்த நாட்டின் மீதே விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள்.
இன்று மேற்குலகினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அந்த நாடுகளில் மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டு வருவதைத் தெரிந்து கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக வட கொரியா, ஈரான், வெனிசுவேலா போன்ற நாடுகளின் நிலைமைகளைக் கொள்ளலாம். ஆட்சியாளர்களைத் தண்டிக்கும் நோக்கிலேயே பெருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், பாதிப்பு பொதுமக்களுக்கே ஏற்படுகின்றது.

“ஓரு தலைப்பட்சமான பொருளாதாரத் தடைகள் நாட்டு மக்களை நோயாளிகளாக மாற்றுவதுடன் பட்டினியை நோக்கியும் தள்ளுகின்ற அதே வேளை பேரிடர் காலகட்ட மனிதாபிமான உதவிகளுக்கும் தடைகளை ஏற்படுத்துகின்றன” என்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவரான அலேனா டோஹான். தற்போது உலகம் எதிர்கொண்டுவரும் கொரோனாப் பேரிடர் காலத்திலாவது இத்தகைய பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பது அவரது பரிந்துரை. இத்தகைய பொருளதாரத் தடைகளின் விளைவு அர்த்தமற்றதாக உள்ளது. எனவே, ஒரு தலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளின் விளைவுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு.
ஆனால், இலாபம் ஒன்றே இலக்கு என்ற நோக்கத்தோடு செயற்படும் முதலாளித்துவ அரசாங்கங்கள் இதுபோன்ற ஆலோசனைகளைச் செவிமடுக்குமா என்பது கேள்விக்குறியே.

அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கு

ஜோ பைடன் தனது கொள்கைகளைக் குறிப்பாகத் தென்னமெரிக்கப் பிராந்தியத்தில் தனது அணுகுமுறையை மாற்றியே ஆக வேண்டிய ஒரு இக்கட்டில் உள்ளதாக மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.
இன்று அமெரிக்காவுக்குப் போட்டியாக சகல துறைகளிலும் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நாடு சீனா. சீனாவின் செல்வாக்கு தென்னமெரிக்கப் பிராந்தியத்தில் அதிகரித்து வருவதாக எச்சரித்திருக்கின்றது அமெரிக்கப் படைத்துறை. அமெரிக்க தென் பிராந்தியக் கட்டளைத் தளபதியான அட்மிரல் கிரெய்க் பால்லர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அமெரிக்காவின் தென் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது கருத்தின் பிரகாரம், சீனாவின் கட்டுமான உதவித் திட்டத்தில் தென்னமெரிக்காவில் 4 வருடங்களின் முன்னர் ஒரு நாடு மாத்திரமே இணைந்திருந்தது. இன்றோ அந்தத் திட்டத்தில் 19 நாடுகள் உள்ளன. பிரேசில், சிலி, பெரு மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுடனான வர்த்தகத்தில் பிரதான பங்காளியாக உள்ள சீனா ஏனைய நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. விரைவில் அமெரிக்காவை முந்திவிட வாய்ப்பு உள்ளது. 2002 இல் 17 பில்லியன் டொலராக இருந்த வர்த்தகம் தற்போது இந்தப் பிராந்தியத்தில் 315 பில்லியன் டொலராக அதிகரித்து உள்ளது என்கிறார் அவர்.
தென்னமெரிக்கப் பிராந்தியத்தில் கப்பல் துறைமுகங்களை நிர்மாணிப்பதில் குறிப்பாக ஆழமான கப்பல் தளங்களை நிர்மாணிப்பதில் சீனா ஆர்வம் கொண்டுள்ளது. ஏற்கனவே, 40 வர்த்தகத் துறைமுகங்களுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. போர் ஒன்று வருமானால் இவை அமெரிக்காவிற்கு எதிராகப் பயன்படுத்தப் படலாம் என எச்சரிக்கிறார் அவர்.
இத்தகைய பின்னணியிலும் கூட அமெரிக்கா தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்கிறார்கள் நோக்கர்கள். காரணம் எதுவானாலும், ஒரு நாட்டின் சுதந்திரத்தில் தேவையின்றி மூக்கை நுழைக்கும் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும் என்பதே உண்மையான மக்களாட்சியை விரும்பும் மக்களின் அவா.

Leave A Reply

Your email address will not be published.