சிகரத்தை தொடும் பெண்கள் வரிசையில் அருந்ததி இன்னொரு நட்சத்திரம்

 

கொழும்பு, வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி இராஜவிஜயன் இன்று தனது 60 ஆவது அகவையில் அண்மையில் கால் பதித்து அநேகரது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றார்.

இலங்கை திருநாட்டின் யாழ்ப்பாணம் இளவாலை எனும் பெருமைக்குரிய மண்ணில் வாழ்ந்த செந்தில்வேல்ராஜா ராஜேஸ்வரி தம்பதியினருக்கு 29.12.1960இல் அருந்ததி அம்மையார் பிறந்தார்.

எம். அருந்ததி, இளவாலை கன்னியர் மடத்திலேயே தன் கல்வியை ஆரம்பித்து சாதாரண தரம், உயர்தரம் என்பவற்றை பூர்த்தி செய்திருந்தார்.

பின்னர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் கணித விசேட பயிற்சிப் பட்டம் பெற்று , தலவாக்கலை சென்.பற்றிக்ஸ் கல்லூரியிலும் (1981 – 1982 ) பின்னர், கிளிநொச்சி வண்ணார்குளம் மகாவித்தியாலயத்திலும் (1982 – 1986 ) , யாழ்.இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரியிலும் ( 1987 ) தனது திறமையினால் பகுதித்தலைவராகவும் பணியாற்றினார்.

அப்போதைய நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் மேற்படிப்புக்கள் காரணமாக கொழும்பிற்கு இடமாற்றம் பெற்று வந்தார்.

அருந்ததி அவர்களது வாசகமான “கல்விக்குக் கரையில்லை ” என்பதற்கமைய தேசிய கல்வி நிறுவகத்தின் தொடர்கல்வி சாதனைப் பயிற்சி பெற்றிருந்தார்.

அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆங்கில விசேட கற்கை நெறியினையும் பூர்த்தி செய்தார்.

இவ்வேளையில் இடமாற்றத்துடன் கொழும்பு பிரஸ்பற்றேரியன் பாலிகா வித்தியாலயத்தில் (1993-2001) சேவை புரிந்தார்.

தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வியியல் முகாமைத்துவத்தில் டிப்ளோமா நிலையை பூர்த்தி செய்தபோது, இவரது கணித பாடத் திறமைகளும் , ஆளுமையும் பொருந்தியதன் காரணமாக கொழும்பு கல்வி வலயத்தின் கணிதபாட ஆசிரிய ஆலோசகராக 2001 இல் பொறுப்பேற்றார். அப்போது திறந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரிய கல்வியில் முதுமாணிப்பட்டமும் பெற்றிருந்தமை விசேடமாகியது.

கணிதப்புலி, கணித மேதை என செல்லமாக அழைக்கப்படும் அருந்ததி மாணவர்களுக்கு ஒரு விடி வெள்ளியாக தெரிந்தார். அவரிடம் கற்றோர் கொடுத்து வைத்தவர்கள் எனும் அடைமொழியை பெற்றனர்.

பின்னர் யாழ். மண்ணில் வர்த்தகமும் , புராதன வரலாறுகளும் ஆலயங்கள், கல்விநிலையங்களும் நிறைந்த சுன்னாகத்தில் இராசநாயகம் (சுகாதாரப் பரிசோதகர் ) விஜயலச்சுமி தம்பதியினரின் மூத்த மகன் திருவாளர் இராஜவிஜயனை திருமணம் புரிந்தார் .

இராஜவிஜயன் அவர்களும் கணிய அளவியல் நெறியில் சிறந்து விளங்கியிருந்தார். சமூக சிந்தனையும், முயற்சி மிக்க இளைஞர்களுக்கு முன்னோடியாகவும், ஆரம்பித்த “சிற்றாஸ் கொன்ஸ்” எனும் கட்டட நிர்மாண நிறுவனத்தினூடாக, கோவில்கள், பாடசாலைகள், தொடர்மாடிகள் என தன் தனித்துவ திறமைகளைப் பதிந்து வந்த ஒரு மகான் ராஜன் ஆவார்.

இவர்களின் இல்லறக் காதல் வாழ்வின் பயனாக 12.11.1995 இல் மகளாக கேஷங்கி என்ற பெண் பிள்ளை பிறந்தார்.

கணித ஆசிரிய ஆலோசகராக 17 ஆண்டுகள் சேவைபுரிந்த அருந்ததி அம்மையார் அவர்கள், மேல் மாகாணம், கொழும்பு கல்வி வலயம் நடத்தும் அனைத்து கணிதபாட பரீட்சைகளின் வினாத்தாள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விழுது அமைப்பிலும் இணைந்து தன் சேவைகளை ஆற்றி வருகிறார்.

தன் பிரதேசத்தில் பாடசாலைகளையும் அவர் அக்கறையுடன் கண்காணிப்பதும் விசேட ஆளுமையாகும்.

யாழ். சென். ஹென்றிஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்க முகாமைக் குழுவிலும், தனது பாடசாலையான இளவாலை கன்னியர்மட கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவியாகவும் ஆர்வத்துடன் பொறுப்பு வகிப்பது பெருமைக்குரியதாகும்.

அத்தனை பணிகளுடனும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் கணிதபாட வினாத்தாள் பிரதானகட்டுப்பாட்டாளராகவும் பரிசோதகராகவும் தன் சேவைப்பணியை திறம்பட நிரூபித்த பெருமைக்குரியவராவார்.

இந்நிலையில், திருமதி அருந்ததி இராஜவிஜயன் 2018 ஆம் ஆண்டு மார்கழியில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று 2019 ஆம் ஆண்டு தை மாதம் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபராகப் பொறுப்பேற்றார்.

சிவானந்தினி துரைசுவாமி அம்மையாரின் தலைமையில் 90 ஆவது அகவையில் தடம் பதித்த சைவ மங்கையர் கழகத்தின் முகாமைத்துவ உறுப்பினராக சேவை செய்யும் காலத்தில், இலங்கையில் தலைநகரில் சிறந்த தனியார் தமிழ் சைவப்பெண்கள் பாடசாலையான சைவ மங்கையர் வித்தியாலயத்தின், கல்விச் செயற்பாடுகளை கழகத்தின் சார்பில் தலைவியுடன் இணைந்து கண்காணித்து ஆலோசனைகள் வழங்கி மேன்மைப்படுத்தினார்.

இவ்வேளையில், தன் கணவரின் திடீர் மறைவையடுத்து 2019 ஆம் ஆண்டு வித்தியாலயத்தின் பத்தாவது அதிபராகப் பொறுப்பேற்றார் அருந்ததி அம்மையார்.

வித்தியாலயத்தின் அனைத்து மன்றங்கள், கழகங்கள், குழுக்கள் எல்லாவற்றினையும் ஒன்றிணைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் நட்புறவுடன் கலந்துரையாடி, கழக முகாமையினரின் கோட்பாடுகளுக்கு அமைவாகவும் வித்தியாலய சமூகத்தினருக்கு இசைவாகவும் திறம்பட நடத்திச் செல்லும் பெருமைக்குரியவராக அதிபர் அருந்ததி இராஜவிஜயன் அவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சைவ மங்கையர் கழகத்தின் செயற் குழுவில் இருந்தபோதே அம்மையார் “இணைப்பாடச் செயற்பாடுகளே ஒரு மாணவனை முழுமைப்படுத்தும்” என்பதனை வலியுறுத்தி வந்தவர்.

விவாதம், நாடகம், சாரணியம், கணித பல்லினச் செயற்பாடுகள் என்பவற்றில் தனிக்கவனம் செலுத்தியதுடன், வித்தியாலயத்தின் மாணவித் தலைவியர் ஒன்றியத்திலும் தொடர்ந்து விசேட கவனத்துடன் வழிகாட்டி வருகின்றார்.

அதற்கமைய மாணவத் தலைவியர் ஒன்றியத்தின் செயற்பாடுகளும் தலைமைத்துவப் முன்னெடுப்புகளும் நாடளாவிய ரீதியில் செயலாற்றும் விதத்தில் பல செயற்றிட்டங்களை ஊக்குவித்து முன்னிலைப்படுத்துவதுடன் அவர்களுக்கான பொறுப்புக்களை ஏற்று சுயமாக நடாத்த வழிசெய்துவருகின்றார்.

2019 இல் அதிபராகப் பொறுப்பேற்றதும் சைவ மங்கையர் வித்தியாலயம் நடத்திய “வானமே எல்லை” எனும் தொனிப்பொருளில் தொடர்ந்து 3 நாட்களாக சகல பாட, இணைப்பாடவிதான செயற்பாடுகளை உள்ளடக்கி மாணவத்தலைவியர் ஒன்றியம் பொறுப்பேற்று நடாத்திய கல்விக் கண்காட்சியானது சைவ மங்கையர் வித்தியாலயம் வரலாற்றின் சிறந்த பதிவாகும்.

பாடசாலை சூழலுடன் மட்டுமன்றி நாடளாவிய ரீதியிலும் மாணவத் தலைவியர் தம் செயற்பாடுகளை முன்னெடுக்க “சாயை” எனும் செயற்றிட்டம் மூலம் சில ஆதரவற்ற குழந்தைகள், வயேதிபர் பராமரிப்பு நிலையங்களுக்கு தாமே சென்று சேவைகள் செய்ய மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

இவ்வருடம் பேர்ள் ஐலண்ட் ரொட்டரி கழகம் நடத்திய தேசிய ரீதியிலான “இளைஞர்களின் தன்னலமற்ற சுயசேவை” என்ற தொனிப்பொருள் கொண்ட போட்டியில் எம் வித்தியாலய மாணவத் தலைவியர் ஒன்றியம் கலந்துகொண்டு பல்வகைத்திறமைகளைத் தாமே வெளிப்படுத்தி போட்டியிட்டு 53 குழுக்களில் முதலாவதாக தெரிவுசெய்யப்பட்டு பணப்பரிசுகளும் வென்றமை அம்மையரின் பக்கபலமே ஆகும்.

வித்தியாலய மாணவியரிடமும் ஆசிரியர்களிடம் சொல்லும் ஒரு விடயம் “முழுமனதுடன் தைரியமாக செயற்படுங்கள், நூறு வீதம் வெற்றி கிடைக்கும்” என்பதாகும்.

பெயரைப்போலவே நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச் செருக்கும் என்பதற்கமைந்த தோற்றமும், முகப்பொலிவும் வசீகரமும் நிறைந்த கண்டிப்பான கண்ணியமான கடமை உணர்வுள்ள எம் அதிபர் அருந்ததி இராஜவிஜயன் அவர்கள் அகவை 60 தாண்டியும் மக்கள் சேவைகளை செய்யும் பெண்கள் மத்தியில் இன்னொரு நட்சத்திரம் எனலாம்.

–  ceylonmirror.net

Leave A Reply

Your email address will not be published.