புளாட் வதை முகாமில் நான் – சீலன் (பகுதி 11) : “வெல்வோம்-அதற்காக”

சித்திரவதையால் மயங்கினேன். சிறுநீரோ இரத்தமாகவே சென்றது…

இரண்டாம் நாள் பகல் முழுவதும் எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இதையிட்டு எம்முள் பல கேள்விகள் எழுந்தன? ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை? எங்களை புதைக்கப்போறாங்களா? சந்ததியார் எங்களுக்காக ஏதாவது செய்கின்றரா? இது போன்ற கேள்விகளுடன், எமது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பகல் கழிந்தது. சில காலங்களின் பின்னர்தான் எமக்குத் இதுபற்றித் தெரிய வந்தது.

எம்முகாமை முற்றுகையிட்டு எம்மைக் கடத்தி வந்த மறுநாள் காலை, அன்றைய அனைத்து முகாம் பொறுப்பாளர் வாசுதேவாவும் வாமதேவனும் வழமை போல எமது முகாமிற்குசென்றிருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் நாம் எங்கே என்று அவர்களிடம் விசாரித்து, அவர்களை கொட்டான்களால் ஓட ஓட தாக்கியிருக்கின்றனர்.

இதனால் அந்த முகாமை மீண்டும் முற்றுகையிட்டனர். தாக்குதலுக்கு முன்னணி வகித்தவர்களைக் கடத்தியும், மற்றவர்களை பணிஸ்மன்ற் என்ற பெயரில் “பீ” முகாமிற்கும் அனுப்பியிருக்கின்றனர். இவர்களை தாக்குவதற்கு முன்னின்ற தோழர்கள் சுமார் 25 பேருக்கு அதிகமானவர்களை ஒரத்தநாடு களஞ்சிய அறையில் அடைத்து கடுமையாகத் தாக்கினர். அதிலும் ஒருசிலரை தெரிந்தெடுத்து நாலாம் மாடிக்கும் அனுப்பியிருக்கின்றனர். அவர்களின் விபரங்கள் எனக்கு தெரியவில்லை.

அவ்வாறு நாலாம் மாடிக்கு அனுப்பப்பட்டவர்களை விட மிகுதியானவர்களில் செங்கோடன், முருகன், செல்வன் போன்றோர் வேறு ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தாக்குவதால் தமது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்த போதும் தமது உயிரைப் பணயம் வைத்து எமக்காக அந்த தோழர்கள் போராடினார்கள். ஆனால் அன்று தலைமையில் இருந்தவர்கள் பல அடாவடித்தனங்களுக்கு துணை போனவர்களாக இருந்தனர். இவர்கள் தமது உயிரைப் பாதுகாக்கும் வகையில் நான் தப்பினால் சரி, நீ தப்பினால் சரி என்றாற் போல் தப்பி ஓடினர். அதன் பின் தாம் புளட்டின் அராஜகத்திற்கு எதிராக போராடியவர்கள் என்ற போர்வையை தம்மீது போர்த்திக்கொண்டு, தீப்பொறியாக அடையாளம் காட்டினார்கள்.

இவ்வாறு எமக்காக போராடிய தோழர்களில் ஒரு சிலர் உட்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டதாக பிற்காலத்தில் அறிந்தேன். அவர்களின் பெயர் விபரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் செல்வன் என்ற தோழர் எனக்கு நீண்ட காலமாக அறியப்பட்டவர். நானும் செல்வனும் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்றோம். எமது வகுப்பை சேர்ந்த மூவரைத் தவிர, மற்றவர்கள எல்லோரும் புளட்டுக்கு மீரான் மாஸ்ரரால் பயிற்சிக்காக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் செல்வனும் ஒருவர். ஆம், இந்தத் தோழர்கள் தோழமைக்கு வரைவிலக்கணம் வகுத்ததால், உயிர் வாழ உரிமை மறுக்கப்பட்டவர்கள்..!

உண்மையான விடுதலையும், உண்மையான தோழமை மனப்பாங்கும் உடைய பல தோழர்களை இந்த விடுதலைப் போராட்டத்தின் பெயரில் எதிர்ப்புரட்சி சக்திகளின் கோரக்கரங்கள் பலி எடுத்துள்ளன. அப்போது இவற்றைப் பற்றி எதுவும் கதைக்காது சந்தர்ப்பவாதிகளாக இருந்த பலர் இன்று போராட்டம் பற்றி பேசிய வண்ணம் உள்ளனர்.

இரண்டாம் நாள் இரவு, நாம் இருந்த கூடாரத்தை நோக்கி மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் மாணிக்கதாசன், செந்தில், பாபுஜி, அமுதன், வாமதேவனும் மற்றும் இன்னும் ஒருவரும் (அவர் பெயர் தெரியவில்லை) வந்தனர். இதில் ஒவ்வொரு தனிநபர் பற்றிய ஆய்வு அவசியமாக இருந்த போதும், மேலுள்ளவர்கள் எவரும் அரசியல் பற்றிய சிந்தனை அற்றவர்கள். முற்று முழுதானஇராணுவக்கண்ணோட்டம் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மட்டக்களப்பு சிறைச்சாலை உடைப்புடன் இயக்கத்தில் இணைந்தவர்கள். இவர்களிடம் இருந்த மக்கள் நலன் பற்றிய கருசனை அற்ற, தன் நலன் கொண்ட கருத்தே தமிழ் மக்களின் மீதான இன அழிப்பிற்கு வித்திட்டது. இவர்கள் கையில் விடுதலைப் போராட்டம் சிக்கியதால் தான், இன்று தமிழ் மக்களின் நிலை இன்று பாரிய துயர் கொண்டதாகவிருக்கிறது .

அவர்கள் அறுவரும் வந்து இறங்கியதும், மிகுந்த சத்தத்துடன் “வாங்கடா வெளியாலை” என்று கத்தினர். உள்ளுக்குள் இருந்த நாம் யார் முன் போவது என்ற பதட்டத்தில், ஆளையாள் பார்த்த வண்ணம் இருந்தோம். மீண்டும் வாமதேவன் “வாங்கோடா வெளியாலை” என்று கத்த, தோழர் தங்கராஜா முதல் வெளியில் சென்றார். சென்றவர் ஐயோ என்று சத்தம் போட்டதும், உடனே மாணிக்கதாசன் அவரை அழைத்து சென்றான். நாம் ஒருவர் ஒருவராக வெளியில் வர வாசலில் இருந்து வருபவர்களுக்கு கொட்டானால் அடித்தனர். ஒவ்வொருவரும் ஐயோ அம்மா என்று அலறும் அதேவேளை, அடித்தவர்களில் ஒருவன் “கீழே படுங்கடா..” “கிறவ்லிங் செய்யடா..” என்று சத்தம் போட்டபடி இருந்தான். அங்கிருந்தவர்களில் வயது குறைந்தவன் நான் என்பதால், பதுங்கி பதுங்கி மெல்ல வெளியில் வந்தேன். அப்போது எனது முதுகில் ஓங்கி ஒரு அடி வீழ்ந்தது. “ஐயோ அம்மா” என்ற அலறலுடன் நிலத்தில் வீழ்ந்தேன். வீழ்ந்த என்னை ஒருவன் காலால் உதைந்தான்.

நாங்கள் எல்லோரும் அலறியபடி இருக்கையில், எம்மைச் சுற்றி முகாமில் இருந்த பல தோழர்களை காவலுக்கு போட்டிருந்தனர். அவர்களும் சுற்றி இருக்க எமக்கு “பூஜை” ஆரம்பமாகியது.

ஒவ்வொருவரையும் எவ்வளவு முறை தங்களால் அடிக்க முடியுமோ, அவ்வளவு அடித்தார்கள். அவர்கள் களைத்ததும் தண்ணீர் குடித்துக் களைப்பாறிய பின் வந்து அடித்தனர்.

என்னை ஒரு தடவை, இருவர் சேர்ந்து தாக்கினார்கள் ஒன்று பாபுஜி அடுத்தது வாமதேவன். இவர்கள் இருவரும் “என்னடா, நீ பெரியய்யாவைப் பார்த்து என்ன கேள்வி கேட்டனி” என்று சொல்லி ஒருவர் முதுகின் மேலும் மற்றவர் காலிலும் தம்மால் இயன்றவரை அடித்தார்கள்.

நானுமே அலறியபடியே இருந்தேன். மறுபுறத்தில் அன்ரனி, சலா, விஜி, சண், ஜெகன், ஆனந்தன் போன்றோருக்கு மற்றவர்கள் அடித்தனர். கே.ஆர்.விஜயன் ஒருவாறு அடிகளுக்குத் தப்பித்து ஒதுக்கமாக போய்ப் படுத்திருந்தான். அதற்குகாரணம், செந்திலின் ஒன்றுவிட்ட தம்பி தான் கே.ஆர்.விஜயன். அவருக்கும் அடி விழுந்தது தான். ஆனால் எம்மளவுக்கு இல்லை.

அடுத்து சோசலிசம் சிறி. அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள். ஒன்று மகஜர் கொடுத்தது, அடுத்தது காதலித்தது தொடர்பானது. அதற்காக நையப் புடைக்கப்பட்டார். எனக்கோ, ஒரு சில மணிநேரத்தின் பின் என்ன நடந்தது என்று தெரியாது. நான் மயங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்த போது, என்னால் நகரவே முடியவில்லை.

மற்றவர்களை பார்த்தபோது, அன்ரனியின்தலையில் காயம், ஆனந்தன் மல்லாக்க அரை மயக்கத்தில் கிடந்தார். விஜி தைரியசாலி என்பதால் அடியைத்தாங்கிக் கொண்டு எமக்கு உதவியபடி இருந்தார். என்னாலே நடக்கவோ, எழுந்து நிற்கவோ முடியாத அளவிற்கு தாக்கப்பட்டிருந்தேன். அன்று சிறுநீர் கழிக்கக் கூட என்னால் செல்ல முடியவில்லை. காவலில் நின்றவர்கள் இருவர் என்னை தாங்கியபடி அழைத்துச் சென்றனர். எனது சிறுநீரோ இரத்தமாகவே சென்றது. இவ்வாறு ஒவ்வொரு தோழருக்கும் இருந்தது.

இரவு அடிக்கும் போது காவல் கடமையில் பலர் எம்மைச்சுற்றி நின்றார்கள் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு தோழருக்கு அன்றிரவே மனநிலை பாதிக்கப்பட்டது. அத்தோழர் நான் அறிந்தவரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே பிற்காலத்திலும் வாழ்ந்தார். அவர் எவருடனும் கதைக்க மாட்டார். எதற்கும் பயப்படுவார். இரவில் உறங்க மாட்டார். இது போன்று பலர்பாதிப்பிற்குள்ளாகினர். எமக்கு அடிவிழுந்த போதே ஒரு தோழர் மனநிலை பாதிக்கப்பட்டார் என்றால், எமக்கு எவ்வளவு, எந்த வகையில், அன்றிரவு அடி விழுந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். அன்றைய பகல் முழுவதும் உடல் உபாதையால் அரைமயக்க நிலையிலுமே கழிந்தது. எமது மக்களின் விடிவிற்கு போராடுவதற்காக எமது கல்வி, குடும்பம், உறவுகள் என எல்லாவற்றினையும் துறந்து புளட்டிற்கு போனோம். ஆனால் புளட் இயக்கம் சமூக விரோதிகளினது கூடாரமாகியதுடன், இந்திய அரச எடுபிடிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்தது. இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பி, அதைச் சரியான பாதைக்கு கொண்டு வர போராட முனைந்தோம். அதைக்கோரி வெளியிட்ட அறிக்கையை இங்கு பார்க்கவும். ஆனால் நாம் எமது உயிரினைக் காக்க போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். எம்மை கொலை செய்யமுனையும் இவர்கள், இனவெறி சிங்கள அரசின் கொலை வெறி இராணுவமா? இல்லை! இயக்கங்களினால் உள்வாங்கப்பட்ட இவர்கள் எமது சமூகத்திலிருந்த சமூக விரோதிகள்!

தொடரும்

சீலன்


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.