கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் இறுதிக்கிரியைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்களின் ஆய்வு அறிக்கைகள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌சவிடம் கையளிக்கப்பட்டுள்ள போதும், அந்த அறிக்கைகளில் உள்ள விடயங்கள் தொடர்பில் இதுவரையில் தெளிவுப்படுத்தப்படவில்லை எனவும் பிரதமர் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனாத் தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சால் 11 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவும், மருத்துவ தரப்பினரால் இன்னுமொரு குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது.

இவ்விரு குழுக்களின் அறிக்கைகள் சில நாட்களுக்கு முன்னர் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

ஆனபோதும் அந்த அறிக்கைகளின் உள்ளடக்கங்கள் குறித்து இதுவரையில் ஆராயப்படவில்லை என்று பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கைகள் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது எனவும், வெகுவிரைவில் அறிக்கையின் உண்மைத் தன்மை பகிரங்கப்படுத்தப்படும் எனவும் பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.