இலங்கை அரசு தப்ப முடியாது! – சுமந்திரன் தெரிவிப்பு

“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை எடுப்போம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜெனிவா விவகாரங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனைக்குழுக் கூட்டம் வவுனியா, குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த வாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியையும் இணைத்துத் தெளிவான ஒரு கலந்துரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இங்கே இருக்கின்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்துத் தரப்பும் இணைந்து மார்ச்சில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் பொதுவான நிலைப்பாடு ஒன்றை முன்வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கின்றன.

அது தொடர்பாக அனைத்துத் தரப்புகளிடமும் கலந்துரையாடி ஒரு வரைபைத் தயாரித்து அந்த நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.

இதேவேளை, நான் தயாரித்ததாகக் கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட வரைபு புலம்பெயர் அமைப்புக்களால் வரையப்பட்டது. அதனை நான் வரைந்ததாகத் தெரிவித்து இரு கட்சியினர் நிராகரித்து விட்டனர். பின்னர் அதற்கு விக்னேஸ்வரன் ஐயா அனுமதி வழங்கியுள்ளார் என்று மின்னஞ்சல் ஒன்றைப் பார்த்தேன்.

நான் வரைந்ததாக என்ற நினைப்பில் அந்த வரைவு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதை நான் வரையவில்லை எனத் தெரிந்ததும் ஏற்றுக்கொண்டதுபோல் தெரிகின்றது. அது ஒருபக்கம் இருக்கட்டும்.

நாம் இதுவரை பேசி இணக்கப்பாடு ஏற்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து ஒரு நிலைப்பாட்டுக்கு வரலாமா என்பது குறித்து ஆராய்வோம்.

அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக அரசுக்கு முன்வைத்துள்ள யோசனைகளில் மாகாண சபை பற்றி தீர்க்கமாக எழுதியிருக்கின்றோம். மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கு இடம்கொடுக்க முடியாது. அதிலே பாரிய பின்விளைவுகள் இருக்கின்றன.

இலங்கை அரசு வெவ்வேறு ஜனாதிபதிகளின் கீழே இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தங்களது வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது. அதையெல்லாம் மீறி இலங்கை அரசு செயற்பட முடியாது என்ற உண்மையை நாம் சொல்லியிருக்கின்றோம்.

அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை எடுப்போம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.