இனவெறி கோஷம் எழுந்த நிலையில் இந்திய வீரர்கள் புகார்.போட்டி இடைநிறுத்தம்.

3வது டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்திலும் இனவெறி கோஷம் எழுந்த நிலையில் இந்திய வீரர்கள் புகார் அளித்ததன் பேரில் போட்டி இடையில் நிறுத்தப்பட்டது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.  இதில், 3வது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர். எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்த போது, அவர்களை சீண்டியுள்ளனர்.

3வது நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய கேப்டன் ரஹானே கள நடுவர்கள் பால் ரீபெல், பால் வில்சன் மற்றும் போட்டி நடுவர் டேவிட் பூன் ஆகியோரிடம் இது குறித்து புகார் அளித்தார். மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. இந்திய வீரர்களை இனவெறியுடன் வசைபாடிய ரசிகர்களை வீடியோ பதிவுகளின் மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இன்றைய 4வது நாள் ஆட்டத்தில், சிராஜ் பந்து வீசிய பின்னர் பும்ரா பந்து வீசுவதற்கு முன் வந்தபோது பவுண்டரி கோட்டு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.  ரஹானே, நடுவரை நோக்கி சென்றார்.  சக வீரர்களுடம் அவருடன் சென்றனர்.

இன்றைய போட்டியிலும் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மீண்டும் இனவெறி கோஷம் எழுந்துள்ளது.  இதுபற்றி இந்திய வீரர்கள் நடுவரிடம் புகார் அளித்துள்ளனர்.  இதனால், போட்டி இடையில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.  போட்டி நடுவர்களும், இந்திய வீரர்களும் சில நிமிடங்கள் வரை பேசி கொண்டனர்.

இதன்பின்னர் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கோஷம் எழுந்த பகுதியில் இருந்த ரசிகர்களை வெளியேறும்படி கேட்டு கொண்டனர்.  பார்வையாளர்கள் பகுதியில் சில வரிசைகள் காலியாக விடப்பட்டன.  இதன்பின்பு போட்டி தொடர்ந்தது.

இன்றைய போட்டியின் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளுக்கு 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.  தொடர்ந்து, இந்தியா 2வது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.