விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது.
ஆனால், கிளம்பிய 4 நிமிடங்களிலேயே 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.
விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் இருந்தனர்.  அவர்கள் அனைவரும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்தவர்கள் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.
இதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பலில் தேடுதல் பணியை தொடங்கினர். ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது.  மேலும், விமானத்தில் பயணித்தவர்களை ஜகார்த்தா விரிகுடாவில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள்  தெரிவித்தனர்.
மாயமான விமானம் இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது என்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், விமானம் விபத்திற்குள்ளான இடமும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்நது விமானிகளின் உரையாடலை சேமித்து வைக்கும் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதில், விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கைகளில், ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.