சிறப்பு குழந்தையின் அம்மா : ‘தாயினும் சாலப் பரிந்து’ : ஜான்

“அந்த கேரளத்து பெண்ணின் பெயர் என்ன ஜான் ஐயா ?”

இப்படி கேட்டவர் என் இனிய நண்பரும் மானசீக குருவுமான வீரபத்திரன் சுவாமிகள்.

வாசுதேவநல்லூர்தான் அவரது சொந்த ஊர். அடிக்கடி குற்றாலம் வந்து போவார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கடந்த மாதத்தில் ஒரு நாள் தற்செயலாக என்னுடைய ஃபேஸ்புக் பதிவு ஒன்றை படித்த வீரபத்திரன் சுவாமி உடனடியாக என்னை அழைத்தார். விபரம் கேட்டார்.

“ஜான் ஐயா, ஃபேஸ்புக்கில் நீங்கள் எழுதியிருந்ததை படித்தேன். அந்த கேரளத்து சகோதரியின் குடும்பத்தை பற்றிய விபரங்களை சொல்லுங்களேன்.”

அந்த உடன்பிறவா தங்கையின் பெயர் ஷிஜி. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பெண்.

இரண்டு பெண் குழந்தைகள்.

மூத்த மகள் பார்வதி பிறக்கும்போதே சிறப்பு குழந்தையாக பிறந்தாள்,

அதாவது மனவளர்ச்சி குறைவான குழந்தையாக.

முதன்முதலாக தனக்கு பிறந்த குழந்தை இப்படி ஒரு குறையோடு வந்து பிறந்துவிட்டது என்று கடவுளை குற்றம் சொல்லவில்லை ஷிஜி. ஏனெனில் கடவுளேதான் இப்படி சிறப்பு குழந்தைகளாக வந்து பிறக்கிறார்கள் என்பதை எங்கோ அவள் படித்திருந்தாள்.
ஆனாலும் …


இந்த சிறப்பு குழந்தைகளை 24 மணி நேரமும் கூடவே இருந்து கவனித்துக்கொள்ள அக்கறையான ஒரு ஆள் அருகிலேயே இருந்தாக வேண்டும்.

அடுத்து ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் இன்னொரு இனிய மகள் பிறந்தாள். மீனாட்சி.
இனிமையாகத்தான் போய்க் கொண்டிருந்தது இவர்களின் இல் வாழ்க்கை.

ஆனால் எதிர்பாராதவிதமாக
அதற்கு அடுத்த சில ஆண்டுகளில் ஷிஜியின் கணவர் திடீரென உடல் நலக் குறைவால் இறந்து விட்டார்.

திகைத்துப் போய்விட்டார் ஷிஜி. கடன் நிறைய இருந்தது ஆனால் கையிருப்பு எதுவுமில்லை. குடும்பத்தை காப்பாற்றியாக வேண்டுமே… அதிலும் சிறப்பு குழந்தை பார்வதி…

இப்போது அவளுக்கு வயது 18.

இளைய மகள் மீனாட்சிக்கு
9 வயது.

இளம் விதவையாக இரு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள்…

ஊரிலிருந்த தன் பெற்றோரை வரவழைத்து உடன் வைத்துக் கொண்டார் ஷிஜி.

சிறப்பு குழந்தை பார்வதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இனி வேலை ஒன்று தேட வேண்டும்.

ஒவ்வொரு அலுவலகமாக விண்ணப்பம் அனுப்பி ஓய்வின்றி முயற்சித்தாள் ஷிஜி. ஒருவழியாக தனியார் அலுவலகம் ஒன்றில் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.
நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் ஷிஜி. ஆனால் அதுவும் நீண்ட காலம் நிலைக்கவில்லை.
சமீபத்தில் வந்த கோவிட் காலம் இதுவரை அவள் வேலை செய்துவந்த அலுவலகத்தை இழுத்து மூட வைத்தது.

இருந்த ஒரே ஒரு வருமானமும் இல்லாமல் பறி போய் விட..
இனி எப்படி வாழ்க்கையை நடத்துவது ? ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை எப்படி
காப்பாற்றுவது ?

பல வித முயற்சிகளையும் செய்து பார்த்தாள். எதுவும் பலிக்கவில்லை, பலனளிக்கவில்லை.
ஒருநாள் வெப்சைட்டில் வேலை வாய்ப்புக்கள் ஏதாவது இருக்கிறதா என தேடிப் பார்த்துக் கொண்டிருந்தபோது…

தற்செயலாக கண்ணில் பட்டது அந்த யூடியூப் வீடியோ.

“வெஜிடபிள் அப்பளங்களை வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்வது எப்படி ?”
அப்படித்தான் ஆரம்பமானது அந்த அப்பள பிசினஸ்.

பலாப்பழ அப்பளம், மிளகு அப்பளம், தேங்காய் அப்பளம் என விதம் விதமான அப்பளங்களை வீட்டிலேயே தயார் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார் ஷிஜி.

தொழிலின் ஆரம்பகட்ட மார்க்கெட்டிங் பிரச்சினைகள் அந்தப் பெண்ணுக்கும் இருந்தன.

ஆனாலும் எதிர்நீச்சல் போட்டு
இரவும் பகலும் தூங்காமல் உழைத்து தன்னுடைய கடுமையான முயற்சியால் சரிந்து விழுந்த தன் குடும்பத்து பொருளாதாரத்தை காப்பாற்றினாள் ஷிஜி. அந்த சாதனை பெண் வாழ்க்கை போராட்டத்தை பாராட்டி ஒரு சில பத்திரிகைகள் எழுதியிருந்தன.

இதை தற்செயலாக படித்த நான் ஷிஜியின் நம்பரை வாங்கி ஃபோனில் தொடர்பு கொண்டேன். அவளது போராட்ட குணத்திற்கும் தைரியத்திற்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்தேன்.

அவளுடைய அப்பளம் தயாரிப்புக்களுக்கு மார்க்கெட்டிங் உதவிகளை செய்து கொடுப்பதாக உறுதி கூறினேன்.

ஒரு அண்ணனாக என்னுடைய ஆதரவு அந்தப் பெண்ணுக்கு எப்போதும் உண்டு என்பதை எடுத்து சொன்னேன்.


இதுதான் நடந்த விஷயம்.
வீரபத்திரன் ஸ்வாமிகளிடம் இதை சொல்லி முடித்தேன்.

அமைதியாக அமர்ந்திருந்தார் வீரபத்திரன் சுவாமி. ஆனால் அவர் அன்னை உள்ளம் ஆர்ப்பரித்து தவிப்பதை அருகிலிருந்த என்னால் உணர முடிந்தது.

“தாயினும் சாலப் பரிந்து” என்ற வார்த்தைகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த வீரபத்திரன் சாமிக்கு அது மிக மிக பொருந்தும். இதை அவரிடமே நான் அடிக்கடி சொல்வதுண்டு.

ஆனால் அதைக் கேட்டு அவர் சிரிப்பார்.
“இல்லை ஜான் ஐயா, தாயினும் சாலப் பரிந்து அன்பு செய்யும் உள்ளங்கள் இந்த உலகில் கோடிக்கணக்கில் உண்டு.”

இப்போதும் அவரது அந்தத் தாயுள்ளம் தவிப்பதை நான் புரிந்து கொண்டேன்.

“ஜான் ஐயா, அந்த சகோதரியின் குடும்பத்துக்கு நம்மாலான ஏதாவது ஒரு சிறு உதவியை உடனடியாக செய்தாக வேண்டும்.”

அடுத்த சில நிமிடங்களில் வீரபத்திரன் சுவாமி என்னிடம் கொடுத்த ரூபாய் ஐயாயிரத்தை
என் தங்கை ஷிஜியின் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பி வைத்தேன்.

அடுத்த நொடியே ஃபோன் வந்தது ஷிஜியிடம் இருந்து.

“எதற்காக அண்ணா இந்த பணத்தை அனுப்பி இருக்கிறீர்கள் ?”

“இதை முதலுதவியாக வைத்துக்கொள் அம்மா. உன்னுடைய வெஜிடபிள் அப்பளம் தொழிலை விரிவாக்கம் செய்ய இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்.”

“நன்றி அண்ணா.”

அடுத்தநாள் அதிகாலையிலேயே வீரபத்திரன் சாமியை பார்க்க குற்றாலத்தில் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு போய் விட்டேன்.

காலையிலிருந்தே விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. கூடவே குளிர்ந்த காற்று வேறு சில்லென்று வீசிக் கொண்டிருந்தது.

‘வாங்க ஜான் ஐயா’ என வரவேற்ற வீரபத்திரன் சாமி, தான் போர்த்திக் கொண்டிருந்த வெள்ளை நிற துண்டை, குளிர் காற்றின் வேகம் தாங்காமல் இன்னமும் கொஞ்சம் இழுத்து போர்த்தி கொண்டார்.

“ஜான் ஐயா அந்தப் பெண் ஷிஜியின் குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?”

ஐந்து பேர் என்று சொன்னேன். அடுத்த நிமிடமே வீரபத்திர சாமி தன் அறைக்குள் சென்று,
ஏதோ ஒரு பார்சலை பிரித்து
5 விலை உயர்ந்த போர்வைகளை எடுத்து வந்தார்.

“இது குளிர்காலம். அந்த பெண்ணின் குடும்பத்துக்கு இந்த காலத்தில் இந்த போர்வைகள் கண்டிப்பாக தேவைப்படும். உடனடியாக இவற்றை திருச்சூருக்கு அனுப்பி விடுங்கள்.”

“இது இப்போது அவசரத் தேவையா சாமி ?”

புன்னகைத்தார் வீரபத்திர சாமி. “உதவி செய்வது என்று முடிவெடுத்து விட்டால் உடனே செய்துவிட வேண்டும் ஜான் ஐயா. ஒரு நொடி யோசித்தாலும் மனிதனின் மனம் மாறினாலும் மாறிவிடும்.”

அடுத்த சில நிமிடங்களில் கூரியரில் போர்வைகளை அனுப்பி வைத்துவிட்டு, என் தங்கை ஷிஜிக்கு ஃபோன் செய்து விஷயத்தை கூறினேன்.

“அண்ணா, உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும்.”

உடைந்த தமிழிலும் ஓரளவு மலையாளத்திலும் இப்படிச் சொன்னாள் என் தங்கை ஷிஜி.
“நான் எதுவும் கேட்காமலேயே தாய்மை உள்ளத்தோடு நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியும் எனக்கு தாங்க முடியாத சந்தோஷத்தை தருகிறது. என் வாழ்க்கையில் இப்படி ஒரு அன்பையும் ஆறுதலையும் இதுவரை நான் கண்டதில்லை.

ஆனாலும் ஒரு விஷயம் என் உள்ளத்தை உறுத்துகிறது அண்ணா. இந்த கோவிட் காலத்தில் நீங்கள் எனக்கு செய்த இந்த உதவிகள் உண்மையிலேயே உயர்வானவை, உன்னதமானவை.

ஆனாலும்…”
தயக்கத்துடன் தொடர்ந்தாள் தங்கை ஷிஜி.

“அண்ணா, எனக்காவது சொந்தத்தில் தங்குவதற்கு ஒரு வீடு இருக்கிறது. கோவிட் காலத்தில் பறிபோன வேலை, இப்போது மீண்டும் கிடைத்து விட்டது. அதோடு சேர்ந்து அப்பளம் தயாரிக்கும் தொழில் ஒன்றும் என் கையில் இருக்கிறது.

ஆனால் இது எதுவும் இல்லாமல் எத்தனையோ பேர் இந்த நாட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே..!

“என்னைவிட பொருளாதாரத்தில் சிரமப்படும் இப்படிப்பட்ட எத்தனையோ பேருக்கு கிடைக்கவேண்டிய உதவிகளை எல்லாம், உங்களை ஏமாற்றி நான் வாங்கிக் கொண்டிருக்கிறேனோ என்று எனக்கு உறுத்தலாக இருக்கிறது அண்ணா.”

நான் அதிர்ந்து போனேன்.

இந்த சிறப்பு குழந்தை பார்வதியின் அம்மா ஷிஜிக்குத்தான் எத்தனை சிறந்த மனசு !

“இப்போது நீங்கள் எனக்கு கொடுக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் அவ்வளவு பணத்துக்கும் கணக்குப் போட்டு அப்பளங்களை தயார் செய்து உங்களுக்கு நான் அனுப்பி வைத்து விடுகிறேன் அண்ணா. அந்த அப்பளங்களை நீங்கள் ஆதரவற்றோர் இல்லம் அல்லது ஏதாவது முதியோர் இல்லங்களுக்கும் கூட கொடுக்கலாமே ! இதன் மூலம் இலவசமாக உதவிகளை பெற்றுக் கொள்கிறோம் என்ற மன உறுத்தல் எனக்கு இல்லாமல் போகும். இந்த உதவியை எனக்காக செய்வீர்களா அண்ணா ?”

எவ்வளவு பெருந்தன்மையான இதயம் இந்தப் பெண்ணுக்கு ! இலவசமாக எதையும் வாங்க விரும்பவில்லை இந்த கேரளத்து தங்கை. நாங்கள் கொடுக்கும் பணம் அத்தனைக்கும் பதிலாக, தான் தயாரிக்கும் பொருட்களை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லும் உயர்ந்த உள்ளம் உண்மையாகவே என்னை ஆச்சரியம் கொள்ள செய்தது.

அடுத்த நாள் வீரபத்திர சாமியிடம் இந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டேன். சிரித்தார் வீரபத்திரன் சாமி. “இப்போது புரிகிறதா ஜான் ஐயா, ‘தாயினும் சாலப் பரிந்து’ என்ற வார்த்தை எனக்கு பொருத்தமாக இருப்பதாக சொல்கிறீர்களே, என்னை விட அது பல மடங்கு அதிகம் பொருந்துவது உங்கள் கேரளத்து தங்கை ஷிஜிக்குத்தான்.”

ஏற்கனவே கடந்த 27ஆம் தேதி திருச்சூர் போய் சிறப்பு குழந்தை பார்வதிக்கு எங்களால் முடிந்த ஒரு சில உதவிகளை செய்வதற்கு திட்டம்போட்டு ஈ பாஸ் கூட எடுத்து விட்டோம். ஆனாலும் கேரள மாநிலத்தில் நிலவும் வைரஸ் காய்ச்சல், பறவை காய்ச்சல் காரணமாக எங்கள் பயண திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. விரைவிலேயே வீரபத்திரன் சாமியுடன் இணைந்து திருச்சூர் சென்று என் அன்பு தங்கை ஷிஜியையும் அவளது அருமை குழந்தைகள் பார்வதி மீனாட்சியையும் சந்திக்க இருக்கிறோம்.

நாங்கள் ஷிஜிக்கு கொடுக்கும் ஒவ்வொரு அப்பளத்திற்கான ஆர்டரும், அந்த சிறப்பு குழந்தை பார்வதிக்கு செய்யும் உதவி என்பதை புரிந்துகொண்டு நண்பர்கள் பலரும் கூட தங்களால் முடிந்த தொகையை பார்வதியின் அம்மா ஷிஜியிடம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
ஆம். வீரபத்ரன் சாமி சொன்னதை போல
தாயினும் சாலப் பரிந்து
உதவி செய்யும் அன்னை உள்ளங்கள் ஆயிரக்கணக்கில் அங்கங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.


அத்தனை பேருக்கும்
அன்பும் நன்றியும் !

Leave A Reply

Your email address will not be published.