மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் 04 : T .சௌந்தர்

பட்டுக்கோட்டையாருடனான   இணைவும் , வாழ்வியல் பாடல்களும் :

1950  களின் நடுப்பகுதியில்    மெல்லிசைமன்னர்களின் இசைப்பயணத்தில் இணைந்து கொண்டு திரைப்பாடல் அமைப்பில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !


மரபில் உதித்து , புதுமையில்   நாட்டம் கொண்ட  மெல்லிசைமன்னர்களின் இசையுடன் மரபில் நின்று கொண்டே சொல்லும் கருத்தில்
புதுமையும் காட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இணைவும் புதிய அலையைத் தொடக்கி வைத்தது.

பாரதி, பாரதிதாசன் போன்ற மகாகவிகளின் தொடர்ச்சியே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பாரதியின் அடியொற்றி பல கருத்துக்களை கூறியவர்   என்ற முறையில் அதற்குப் பொருத்தமான இசை வடிவம் கொடுத்த  இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களுக்கும் தனியிடம் உண்டு என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

பாட்டு என்பதை பாங்கோடு  தந்த பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்  சமூக நலன் , ,மக்கள் நலன் என்ற அடிப்படையில் நாட்டார் பாடலின் வேரில் முகிழ்த்தெழுந்தவையாகும்.மண்வளச் சொற்களை சினிமாப்பாடல்களில் அள்ளி,அள்ளிப் பூசியதுடன்,மண்ணின் உணர்ச்சி ததும்பும் பாமரப்புலமையை பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் புனைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.  காவிய நடைகளிலிருந்து மாறி உயிர்த்துடிப்புள்ள பொதுஜனங்களின் மொழியில் பாடல்கள் பிறந்தன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் பற்றி பின்வருமாறு விவரிக்கிறார் அறிஞர் நா.வானமாமலை.

“சமூக மாறுதல், சமூக உணர்ச்சிகளுக்கேற்ப பாடலைகளைத் தோற்றுவிப்பவன் நாட்டார்கவி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போல. அவர்களுடைய உணர்ச்சிகள் , மதிப்புகள் நலன்களுக்கு ஏற்றார் போல அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தகுதியானவற்றை  அவர்
பாடினார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு , நாட்டாரது போர் முழக்கமாயிற்று. அது  நாட்டார் ரசனைக்காக மட்டுமல்ல அது சினிமா பார்க்கிற எல்லா வர்க்கங்களுடைய அனுபவத்திற்காகவும் எழுதப்பட்டதால் , நாட்டார் பண்பாட்டுக்கருவை , நாட்டார் மொழியிலும் ,
சிறிதளவு இலக்கிய மொழியிலும் பாடினார். நாட்டுப்பாடல் எழுத்தறிந்தவர் அனுபவிப்பதற்காக உருமாறுகிறது. இதுவும் நாட்டுப்பாடலே .கல்யாணசுந்தரம் பாடல்கள் நாட்டு மக்கள் உணர்வு , நாட்டு மக்கள் பண்பாடு மதிப்புக்கள் , அவர்கள் ஆர்வங்கள் இவற்றை வெளியிடுகின்றன.”
[தமிழர் நாட்டுப்பாடல் – பேராசிரியர் நா. வானமாமலை ]

தமிழ் திரையைப் பொறுத்தவரையில் உடுமலை நாராயணகவி, கம்பதாசன் , மருதகாசி , தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன் போன்றவர்களை நாட்டுப்புறப் பாங்கில் பாடல்கள் புனைந்தவர்களில் முக்கியமானவர்களாகக்  கருதலாம். ஆயினும் இவர்களில் புதிய
சகாப்தத்தை, சாதனையை படைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் மிகையில்லை. அவரின் பாட்டுத்திறத்தை சரியான வழியில் மதிப்பிடுகிறார் கம்யூனிஸ்ட் தலைவரும் சிறந்த கலைஞருமான தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள்.

சராசரி மனிதனின் சாதாரண விருப்பு வெறுப்புக்களையும் மன அசைவுகள் உணர்ச்சிப் பெருக்குகளையும் எளிமையாக நேர்பாங்காக உயிர் துடிப்பாகச் சொல்லும் மரபே நாடோடி மரபு. இதில் சிக்கலான கருத்துக்களுக்கும், உருவங்களுக்கும் இடமில்லை.

எளிய விவசாய நாகரிகத்தின் அடிப்படையான உணர்வுகளை வெளியிட்டு வந்திருப்பதையே இந்த மரபில் பார்க்கிறோம்.

சிக்கல் நிறைந்த நிகழ்கால வாழ்க்கைத் தோற்றத்தை மிகச் சாதாரண கண்ணோட்டத்தில் வைத்துக் கூறுவதும், கேட்பவரின் நெஞ்சை உடனடியாகக் கவரும் விதத்தில் நேரான வழி வழியான ஆற்றலோடு வெளியிடுவதும் நாடோடி மரபின் இரட்டைக் கூறுகள்.

………சிந்து, காவடிச்சிந்து, கும்மி, குறவஞ்சி, பள்ளு, ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு, கண்ணிகள் முதலிய பாடல் உருவகங்களின் தோற்றங்களும் சித்தர்கள், தாயுமானவர், இராமலிங்கனார், பாரதி, கவிமணி, பாரதிதாசன் போன்றோர் தத்துவ, சமய, லௌகிக, அரசியல், சமுதாயக் கருத்தோட்டங்களை வெளியிட மேற்படி உருவகங்களையெல்லாம் வளர்த்துப் பயன்படுத்திய முயற்சியும் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

அவர் பாடல்களில் நான் மிகச் சிறந்த இரண்டு கூறுகளைக் காண்கிறேன். ஒன்று நாடோடிப் பரம்பரை, அதாவது வழிவழி மரபு , மற்றொன்று நவீன முறையில் வெளியிடுதல் [ Modern எஸ்பிரஸின் ] வழிவழி மரபையும் நவீன உணர்வையும் இணைத்துப் பாட்டுத்திறம் காட்டுவது இன்று மிகமிக முக்கியத் தேவையாக அமைந்துவிட்டது.
என்று விளக்குகிறார் ப.ஜீவானந்தம் .

அந்தவகையில் சிறப்பு மிக்க பட்டுக்கோட்டையின் பாட்டுத்திறம் கும்மி , பள்ளு , காவடி சிந்து , உழவர் பாட்டு , லாவணி , விடுகதை , தத்துவம் , கதைப்பாடல்,தாலாட்டு என நாட்டுப்புற மரபின் அத்தனை அம்சங்களையும் கொண்டு மண்வாசனையுடன் வெளிப்பட்டிருக்கிறது.

சினிமாப்பாடல்களில் பெரும்பான்மையானவை மெட்டுக்கு   எழுதப்படும் வழமையில் ,அந்த மெட்டுக்களையும்   தாண்டி, பாடல் வரிகளை வாசிக்கும் போது,  பாடலின் கருத்தில் எளிமையும், சிக்கலின்றி புரிந்து கொள்ளும் தன்மையும், கருத்துத் தெளிவும் நிறைந்தவையாக இருப்பதை  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களில்  மிக இயல்பாய் காணலாம்.

மேற்குறிப்பிடட  நாட்டுப்புறப் பாடல் வகைகளை மையமாக வைத்து மெல்லிசைமன்னர்களும் பட்டுக்கோட்டையாரும் இணைந்து  தந்த பாடல்கள் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத வண்ணம் மிக இயல்பாய் அமைத்திருக்கின்றன.பாடல்களின் எளிமையும்,
கருத்துச்செறிவும் அவை மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்கள் போலல்லாது எழுதப்பட்ட வரிகளுக்கு இசை அமைக்கப்படட  பாடல்கள் போலவே  திகழ்கின்றன.

மெல்லிசைமன்னர்களுடன் பட்டுக்கோட்டையாரின்  அறிமுகம்  பாசவலை படத்தில் ஏற்படுகிறது.  அந்தப்படத்திலேயே

குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக் கிட்டால்
கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்….
என்று தொடங்கும் பாடலில் நாட்டுப்புற பழமொழியையும் ,

 பாகப்பிரிவினை படத்தில்
“புள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு _ இந்தப் பிள்ளை யாரு?
என்ற பாடலில் லாவணி பாடலையும் ,

அமுதவல்லி படத்தில்  [1958]
ஆடைகட்டி வந்த நிலவோ – கண்ணில்
மேடை  கட்டி ஆடும் எழிலோ.
என்ற பாடலில் காவடி சிந்து பாடலையும்,

பதிபக்தி படத்தில்
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!
வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே
ஆரிரோ… அன்பே ஆராரோ!
என்ற தாலாட்டையும்,

தமிழ் நாட்டின் கும்மிப்பாடலை
சின்னச் சின்ன இழைபின்னிப் பின்னிவரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி – நம்ம
தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி
தய்யத் தய்யா தத்தத்தானா தய்யத் தத்தத்தானா…
என்ற பாடலை “புதையல் “ படத்தில் தந்ததுடன்  , வேறு பல இனிய பாடல்களையும் இப்படத்தில் தந்தார்கள்.

 

தமிழ் திரையின் ஒப்பற்ற கவிஞனாகத் திகழ வேண்டிய மாகவிஞன்,  பாரதி,பாரதிதாசனுக்குப் பின்வாராது வந்த மாமணியான  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்  வாழ்வு மிக இளவயதில்   ஓய்ந்தது.


நாட்டார் பாடல்களின் வண்டலை  தந்த மாகவிஞனின்  எதிரொலி அவருக்கு முன்னிருந்த கவிஞர்களையும் அவர் போல எழுத வைக்குமளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியே ஓய்ந்தது.

என்னதான் சிறப்பாகப் பாடல் எழுதினாலும் இனிய இசை  இல்லையென்றால் காலத்தால் அடித்துச் செல்லப்பட்டு விடும்.

லாவகமும் நுடபமும் ஒன்றுகலந்த அவர்களின் பாடல்கள் காலத்தை கடந்து நிற்கின்றன. இசையும் பாடலும் ஒன்றை ஒன்று பிரியாத அற்புத ஆற்றல்களின் இணைவு அதை சாதித்திருக்கிறது. அந்த இனிய இசையை தந்த  புகழ் எல்லாம் மெல்லிசை மன்னர்களுக்கே !

பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் பாடல்கள் பற்றி அதிகம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் மெல்லிசைமன்னர்களுடனான அவரின் இணைவு குறித்தோ அவர்களது இணைவில் வந்த பாடல்கள் பற்றிய  குறிப்புக்களை மிக அரிதாவே காண்கிறோம். அது குறித்து
மெல்லிசைமன்னர்களும் அதிகம் பேசியதில்லை.

1959 ஆம் வருட இறுதியில் காலம் மாகவிஞனுக்கு  முற்றுப்புள்ளி வைத்தாலும் , தன் வசப்பட்ட காலத்தில் பலவிதமான  உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாடல்களை புனைந்தவர் பட்டுக்கோட்டையார்.

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 03- T .சௌந்தர் | Indian News | SriLankan Tamil News | Articles |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,மெல்லிசைமன்னர்கள் இணைந்து தந்த புகழ் பெற்ற சில பாடல்கள்.

காதல் பாடல்களையும்  அற்புதமாக எழுதும் ஆற்றல்மிக்கவர் என்பதை நிரூபிக்கும் சில பாடல்கள்:
01  கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு – மகனே கேள் [1965 ]
02  முகத்தில் முகம் பார்க்கலாம் – தங்கப்பதுமை[1959 ]
03  இன்று நமதுள்ளமே பொங்கும் – தங்கப்பதுமை[1959]
04  அன்பு மனம் கனிந்த பின்னே -படம்:  ஆளுக்கொரு வீடு ஆண்டு: 1960
05  கொக்கரக்கோ சேவலே  படம்: பதிபக்தி [1958 ]
06  ஆடைகட்டி வந்த நிலவோ  படம்: அமுதவல்லி [ 1959 ]
07  சலசல ராகத்திலே  படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு : 19607
08  உனக்காக எல்லாம்… படம்: புதையல் [1957 ]
09  சின்னஞ்சிறு கண்… படம்: பதிபக்தி[ 1958 ]   [தாலாட்டு]

தத்துவப்பாடல்களில் புகழ் பெற்ற சில பாடல்கள் :

01  தாயத்து… படம்: மகாதேவி | ஆண்டு: [1957 ]
02  குறுக்கு வழியில்… படம்: மகாதேவி :[ 1957 ]
03  உனக்கேது சொந்தம் – பாதாம் :பாசவலை
04  ஆறறிவில் ஓர் அறிவு அவுட்டு படம்: மகனே கேள் [1965 ]

பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பாடலாசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக நாட்டார் பண்புகளை தந்தமை மட்டுமல்ல , திரைக்கதையின் சூழ்நிலைகளுக்கு  பொருத்தப்பாடான கருத்துக்களுக்கு , இயக்கப்போக்குகளுக்கு இசைந்து  நாட்டார்மரபிசையையும் ,மெல்லிசையையும் இசைவேட்கையுடன் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்!

தமிழ்நாட்டு அரசியல்   தமிழ்திரையில் கடுமையாக எதிரொலித்துக்கொண்டிருந்த காலம் என்பதாலும் அதன்  சூழல், போக்கு மற்றும் வீச்சுகளுக்கு ஏற்ப அதற்கீடு கொடுத்து உகந்ததொரு  இனிய இசையை   கொடுத்தார்கள்.

குறிப்பாக ,அக்கால திராவிட இயக்கத்தினரின் கருத்தோட்டப்  போக்கின் முதன்மையான உணர்வாக வீர உணர்ச்சி வெளிப்பட்டது.அதன் இன்னுமொரு முக்கிய கூறாக தாலாட்டும் , தாய்பாசமும் அமைந்தது.தாலாட்டிலும் , வீர உணர்வு  பாடலிலும் எழுச்சி ஊட்டும் வண்ணம் பாடல்கள் அமைக்கப்படடன.இதனூடே அக்கால இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சியூட்டிடலாம் என்ற திராவிட முன்னேற்றக கழகத்தினரின் கொள்கைக்கு மெல்லிசைமன்னர்களின் இசை மிக வலு சேர்த்தது என்றால் மிகையில்லை.

தமிழ்த்திரைப்படப் பாடல்கள் வாழ்நிலையின் உணர்ச்சிகளை  சித்தரித்தன என்ற வகையில் நோக்கும்  போது நாட்டுப்புறவியலாளர்கள் கூறும் கருத்துக்கு ஒப்ப  பாடல்கள் அமைந்திருப்பதையும் காண்கிறோம்.

மரியா லீச் [Maria Leach – [ 1892  – 1977  ]  என்கிற நாட்டுப்புறவியலாளர்  வகைப்படுத்தும் பாடல் வகைகள் போலவே திரையிலும் பாடல்கள்  அமைக்கப்படடன.

மரியா லீச் [Maria Leach]   நாட்டுப்புறப்பாடல்களை  பின்வருமாறு வகைப்படுத்துகிறார்
1. உணர்ச்சிப்பாடல்கள் [ Emotional  ]
2. வாழ்வியல் பாட்டு [ Daily Life ]
3. வாழ்வின் முக்கிய  நிகழ்ச்சி பாடல்கள் [ Crucial Movement of  life ]

இதில் உட்பிரிவுகளாக
01. பிறப்பு [ birth ]
02. மணம் [ marriage]

03. பிரிவு [parting]
04. இறப்பு [death]
05. தாயக நாட்டம் [ nostalgia]
06. போர்ப்பாடல் [ war ]
போன்றவற்றை குறிப்பிடுகின்றார்.

நாட்டுப்புறப்பாடல்களை வெவ்வேறு நாட்டுப்புற ஆய்வாளர்களும் வெவ்வேறுவகையாக வகைப்படுத்துகின்றனர்.

எனினும் பொதுப்படையில் மரியா லீச் [ 1892  – 1977 ] வகைப்படுத்தும் பாங்கு பொதுமையாக விளங்குகிறது. மனித உணர்வுகள் பொதுமையாக இருப்பதால் நமக்கும் அவை பொருந்திப் போகின்றன.

இவை   நாட்டுப்புற இசை சார்ந்த ஆய்வுகளே ஒழிய தமிழ் திரையிசையில் மெல்லிசைமன்னர்கள் தனியே நாட்டுப்புற இசைவடிவங்களில் தான் தமது பாடல்களை இசைத்தார்கள் என்று அர்த்தமல்ல.

இந்தவகைப்படுத்தலில் அமைந்த பாடல்களை மெல்லிசைவடிவங்களிலேயே அமைத்து புதுமை செய்தார்கள். நாட்டுப்புறப்பாங்கிலும் , செவ்விசைவடிவங்களிலும் ஜி.ராமநாதன் ,
எஸ்.எம்.சுப்பைய்யாநாயுடு , ஆர்.சுதர்சனம் கே.வி.மஹாதேவன் போன்றவர்கள் ஏலவே இசைத்திருக்கிறார்கள்.

மரியா லீச் குறிப்பிடும் “வாழ்வியல் பாடல்” வகையிலே நாட்டுப்புற இசையின் அடிநாதத்தோடு , அவற்றை  மென்மையாகத் தழுவிக் கொண்டே, அவற்றில் மெல்லிசைச் சாயங்களைப் பூசி  ஜாலவித்தை காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

அதில் புதிய வாத்தியங்களை இணைத்து தந்த இசைக்கோலங்கள் எத்தனை,எத்தனை என்று ஆச்சர்யத்துடன் வியக்கிறோம்.

மெல்லிசை மெட்டில் விழும் எளிமைமிக்க இனிய சங்கதிகள் செவ்வியலிசையின் உச்சங்களைத் தொடும் வண்ணம் அமைக்கப்படத்திலிருந்து அவர்கள் ராக இசையின்  ரசப்பிழிவுகளை தேவை கருதி பயன்படுத்தியதையும் காண்கிறோம்.

வாழ்வியல்பாடல்கள் என்ற பகுதியில் வரும் தாலாட்டு ,காதல் ,பிரிவு, திருமணம் , இறப்பு ,நாட்டுப்பற்று,வீர உணர்ச்சி போன்ற பலவிதமான உணர்வுகள் பாடல்களிலும் பிரதிபலித்தன.அதுமட்டுமல்ல ஒரு நிகழ்வின் பல படி நிலைகளுக்கும் பாடல்கள்
பயன்படுத்தப்படடன.

தாலாட்டும் , வீரமும்

தாம் பெற்ற பிள்ளையை உறங்கவைக்க  பாடும் பாடல் தாலாட்டாகும்.

உலகெங்கும் தாலாட்டு என்பது நாட்டார்பாடல் வகையில் சிறப்பிடம் பெற்ற ஒன்றாகும். தமிழிலும் அவ்விதமே!  தாலாட்டைப பாடாத கவிஞர்கள் கிடையாது என்று கூறிவிடலாம்.
பெரும்பாலும்  தாய்மார்கள் தாலாட்டை பாடுவது வழமையாக இருந்து வருகிறது. தாலாட்டுப் பாடும் தாய் தனது நிலையையும் , தன குடும்பத்து நிலைமையையும் , பெருமைகளையும் இணைத்துப் பாடுவது தமிழ் மரபு.


“தமிழ்நாட்டு பாமரர்பாடல்”  என்ற நூலை எழுதிய பேராசிரியர்  நா.வானமாமலை தாலாட்டுப் பாடலுடனேயே தொடங்குகிறார். அந்நூலில் வர்க்க வேறுபாடுகளுக்கு ஏற்ப தாலாட்டு மாறுவதை கூறிச் செல்லும் ஆசிரியர் உழைப்போர் கண்ணோட்டத்தில் தாலாட்டு எவ்வாறு அமைந்தது என்பதனை உதாரணங்களோடு விளக்குகிறார்.

தாலாட்டு பற்றி கூறும் தமிழண்ணல் ” இருவர் கொள்ளும் காதலை விட , உடன்பிறந்தோர் கொள்ளும் வாஞ்சையைவிட, ஏன் உலகலக்கும் அருளினைவிட, பிள்ளைப்பாசமே ஆழமானது , வலிமைமிக்கது, உணர்ச்சிமயமானது.

இத்தகைய தாயும் சேயும் என்ற உறவுப்பிணைப்பிலே இயற்கைக் கலைதான் தாலாட்டு ” என்பார்.[ காதல் வாழ்வு – தமிழண்ணல் ]

பிள்ளைத் தமிழ்  என்பது தமிழிலக்கியத்தில் தனி இலக்கியவகையாகக் கருதப்படுகிறது “பழந்தமிழ் பாடல்களில் பிள்ளைத் தமிழ், உலா முதலிய பிரபந்தங்கள் தெய்வங்களை குழந்தையாகவும் , வீரர்களாகவும் பாடியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.” என்பார்
பேராசிரியர் க.கைலாசபதி. [ இரு மகாகவிகள் ]  தாலாட்டுப்பாடலை மிகச் சிறந்த முறையில் தமிழ் சினிமாப்பாடல்கள் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன.

அதிலும் மெல்லிசைமன்னர்கள்   உயிர்த்துடிப்பும் ,உணர்ச்சிப்பெருக்கும் , நெகிழ்சியுமிக்க சிறந்த  பாடல்களை  தமது தனித்துவ முத்திரையோடு அமைத்துத் தந்திருப்பது நம் கவனத்திற்குரியது.

தமிழ் திரையில் ஒலித்த தாலாட்டுப்பாடல்கள் என்றாலே அதில் எல்லோருக்கும் எடுத்த எடுப்பிலேயே நினைவுக்கு வருமளவுக்கு சில முக்கியமான பாடல்களைத் தந்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.

இசைவளப்பெருமை வாய்ந்த பல பாடல்களை  புது லாகிரியுடன்  தந்திருப்பதையும் அவதானிக்கலாம்.  பழைய ராகங்களில்  நவீனத்தின் பண்புகளை இணைத்து திரையிசையைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டவர்கள்  மெல்லிசைமன்னர்கள்.

மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த தாலாட்டுப்பாடல்கள் சில :

01  சிங்காரப்புன்னகை   கண்ணாரக் கண்டாலே – படம்: மகாதேவி [1957] –  பாடியவர்கள்: எஸ்.ராஜேஸ்வரி மற்றும் ஆர்.பாலசரஸ்வதிதேவி

அக்காலத்தில் வெளிவந்த   தாலாட்டுப் பாடல்களில் புதிய பாங்கில் வந்த பாடல். மரபாக வரும் ராகங்களில் அல்லாமல் ஆபேரி ராகத்தில் அமைத்ததுடன் அதனுடன் கைத்தட்டு , கோரஸ் , ஹம்மிங் போன்றவற்றை இணைத்து புதுநெறிகாட்டிய பாடல்.அதுமட்டுமல்ல தாலாட்டில் வீரமும் ,பாசமும் இன்றிணைத்தோடும் கருணை , இனிமை பொங்கும் பாடல்.பின்னாளில்
ஆபேரியில் தாலாட்டுப் பாடல்கள் வெளிவரும் புதிய நெறியை அமைத்துக் கொடுத்த பாடல்.
இந்தப்படத்தின் வசனத்தையும் , இந்தப்பாடலையும் எழுதியவர் என்ற ரீதியில் கவிஞர் கண்ணதாசன் தனது அன்றைய தி.மு.க.அரசியல் சார்பான கருத்தியோட்டத்தையும் கதைக்கு பொருத்தமாக அமைந்துவிடும் நுடபத்தையும் காணலாம்.

இப்பாடலில் காலத்திற்கேற்ற தனது அரசியல் போக்கின் தன்மையையும் காட்டுகிறார் கண்ணதாசன்.

தன்மானச் செல்வங்கள்
வாழ்கின்ற பூமியில்
வில்லேதும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலைச் சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

02  மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது நமது சமுதாயம் – படம்: மகாதேவி [1957] –  பாடியவர்கள்: டி.எஸ்.பகவதி


–  மானத்தையும் வீரத்தையும் மிகுந்த உணர்ச்சிப்பாங்குடன் கூறும் தலை சிறந்தபாடல் இது.
“அபிமன்யூ போர்க்களத்தில் சாய்ந்துவிட்டான் ”  என்று தொடங்கும் வரிகளில்  ஹிந்தோள ராகத்தில் பீரிட்டெழும் உணர்ச்சிக் கொந்தளிப்பை மெய்சிலிர்க்கும் வண்ணம்  மெல்லிசைமன்னர்கள் காண்பிப்பார்கள்.

அதைத் தொடர்ந்து வரும் ” போதும் நிறுத்து ! பாண்டவர்கள் அழுது சோகம் கொண்டாடியிருக்கலாம் , கண்ணீர் வடிக்கும் கோழைப்பாட்டு எனக்குத்  தேவையில்லை.  என் மகன் வீரமரணத்திற்கேற்ற தாலாட்டு பாடு ! “…. மகாபாரதத்தின் அபிமன்யுவை தனது மகனுக்கு உவமையாக்கி  பாடும் இப்பாடலில் இடையிடையே வரும் வசனங்களில் உணர்ச்சி பெருக்கெடுக்கிறது. மெல்லிசைமன்னர்களின் இசையோ உயிரை வதைக்கிறது.

03  தென்றல் வந்து வீசாதோ தெம்மாங்கு பாடாதோ – படம்  சிவகங்கைச் சீமை [1959 ]  பாடியவர்கள் :எஸ்.வரலட்சுமி மற்றும்  டி.எஸ்.பகவதி

தாலாட்டுப்பு பாடலில் தனது நாட்டின் பெருமையையும் மன்னன் பெருமையையும் சோகம் பொங்க அமைக்கப்படட பாடல்.

வெள்ளியிலே தேர் பூட்டி
மேகம் போல மாடுகட்டி
அள்ளி அள்ளி  படியளக்கும்
அன்பு நிலம் வாடுவதோ….
எனத் தங்கள் குடும்பத்தின் பெருமையை உணர்த்தி விட்டு , வரப்போகும் போரின் துயரத்தையும் அதன் விபரீதத்தையும்
நெகிழ்ச்சியுடன் கூறும் பாடல்.
தவளை எல்லாம் குரவையிடும்
தாமரையும் பூ மலரும்
குவளையெல்ல்லாம் கவி இசைக்கும்
வந்து வந்து கூடும் வண்ண எழில் யாவும்
அண்டி வரும் போர் புயலில்
அழிந்து பட சம்மதமோ …….
ஆத்தாள் அருகினில்
அம்மான் மடிதனிலே
காத்திருக்கும் பாலகரும்
கண்ணான மங்கையரும்
போர் மேவி புறப்படுவார்
பொன்னாட்டின் புகழ் வளர்ப்பார்
யார் வருவார் யார் மடிவார்
யார் அறிவார் கண்மணியே
என சோகத்தின் உச்சிக்கு நம்மை அழைத்து செல்லும் பாடலை மெல்லிசைமன்னர்கள் முகாரி ராகத்தில் அமைத்து உணர்ச்சியை பிரதானப்படுத்துகிறார்கள் பாடல் அமைப்பும் பாடிய பாடகிகள் [எஸ்.வரலட்சுமி + டி.எஸ்.பகவதி ] பாடிய பாங்கும் தாய்மையின்  குரலை ஓங்கவைக்கிறது.  பாடல் வரியும் , இசையும் ஒன்றையொன்று தழுவி உயிர் பெறுகின்ற பாடல்.

முகாரி ராகத்தில் அமைந்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.
03   சின்னஞ் சிறு கண்மலர் செம்பவள வாய் மலர் – படம்: பதிபக்தி 1959  –  பாடியவர்:  பி.சுசீலா
04   ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ – படம்: பாகப்பிரிவினை 1959 -பாடியவர்:       டி.எம்.சௌந்தரராஜன்
05  மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் -படம்  மாலையிட்ட மங்கை [1959 ]- பாடியவர் :எம்.எஸ்.ராஜேஸ்வரி
06  காலமகள் கண் திறப்பாள் கண்ணைய்யா – படம்:ஆனந்த ஜோதி [1963 ]- பாடியவர் :பி.சுசீலா
07  நீரோடும் வகையிலே நின்றாடும் மீனே – படம்:பார் மகளே பார் [1963 ]- பாடியவர் :சௌந்தரராஜன் பி.சுசீலா
08  பிள்ளைக்குத் தந்தை ஒருவன் – படம்:பார்த்தால் பசி தீரும்  [1963 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்
09  மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க — படம்:பணம் படைத்தவன்  [1963 ]- பாடியவர் :பி.சுசீலா டி.எம். சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி
10  கண்ணன்  வருவான் கதை சொல்லுவான் – படம்:பஞ்சவர்ணக்கிளி  [1963 ]- பாடியவர் :பி.சுசீலா
11  அத்தைமடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா – படம்:கற்பகம்  [1964 ]- பாடியவர் :பி.சுசீலா
12  காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே – படம்:சித்தி [1967 ]- பாடியவர் :பி.சுசீலா
13  செல்லக்கிளியே மெல்லப்பேசு  – படம்:பெற்றால் தான் பிள்ளையா  [1966 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்
14  காதலிலே பற்று வைத்தால் அன்னையடா – படம்:இதுசத்தியம்  [1963 ]- பாடியவர் :பி.சுசீலா
15  கண்ணன்  பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்  – படம்:பெற்றால் தான் பிள்ளையா  [1966 ]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன் + பி.சுசீலா
16  செல்லக்கிளிகளாம் பள்ளியிலே   – படம்:எங்கமாமா   [1968]- பாடியவர்:டி.எம். சௌந்தரராஜன்
தாலாட்டில் பலவகைப்பட்ட உணர்வுகளை பிரதிபலித்த பேராற்றலைக் காண்பித்த மெல்லிசைமன்னர்கள் வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல்களிலும் தங்கள் தனித்துவத்தைக் காண்பித்தார்கள்.

தமிழர் மரபில் தொன்றுதொட்டு வீரர்களின் பெருமை ,அவர்களுக்கு நடுகல் அமைத்துப் போற்றிய செய்திகளும் பழந்தமிழ்  இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன.வீரர்களைக் கொண்டாடியது மட்டுமல்ல அவர்களை வழிபாடும் செய்தனர்.

இனக்குழு சமுதாய அமைப்பு மாறி பின் தோன்றிய நிலமானிய காலத்து பாடல்கள் வீரயுகப்பாடல்கள் என்பார் பேராசிரியர்.க.கைலாசபதி.

” முதியோள்   சிறுவன்
படைத்தழிந்து மாறின  னென்று பல கூற
மண்டமர்க் குடைந்த னாயினுண்டவென்
முலை யறுத்திடு வென் “புறநானூறு – 278
தனது மகனின் முதுகில் காயம்படவில்லை   என்று  தாய் பெருமைப்படும் பாடல். பெண்களும் வீரத்தில் சளைத்தவர்களில்லை , போர்க்குணம் மிகுந்தவர்களாயிருந்தனர்  எனக் காட்டுகிறது புறநானூறு பாடல்.

வீரர்கள் பற்றிய புகழாரங்களை கூறும் இம்மரபை பின்னாளில் அரசியல் இயக்கங்கள்  சுவீகரித்து கொண்டன. குறிப்பாக தமிழ் தேசியத்தையும் , பிராமணீய எதிர்ப்பையும் மற்றும் சோஷலிஸக் கருத்துக்களையும் முழக்கமாகக் கொண்டு திரைப்படத்தை தங்கள்
பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியவர்கள்  அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக கழகத்தினர். தங்களை  வீர தீரர்களாக காட்டிக்கொண்டிருந்த அன்றைய நிலையில்  கட்சித் தொண்டர்களை உசுப்பேற்றவும் தாம் உய்யவும் வழி தேடினர்.

திரைக்கதையில் மட்டுமல்ல பாடல்களிலும் அவை கணிசமாகவே வெளிப்பட்டன. மரபாக இருந்த போக்கை திரைக்கதை , இசை போன்றவற்றின் உறவுகளின் அடிப்படையிலும், திரைப்படத்தை வெற்றிபெற வைக்கும் உத்தியாகவும் வீர உணர்வை வெளிப்படும்
பாடல்களை பயன்படுத்தினர்.

1950  களின் ஆரமபத்தில் திராவிட முன்னேற்றக கழக கொள்கை பிரச்சாரப்பாடல்கள் இறந்தகாலத்தின் மீதான பிரேமையும், ஏக்கமும்  , அதோடு அதை  புளங்காகிதப்படுத்தி  புத்தாக்கம்  செய்யும் வகையில்  புனையப்பட்டதையும் காண்கிறோம்.


“தமிழன் என்றொரு இனமுண்டு ” என்று தொடங்கும் மலைக்கள்ளன் [ 1954  ] பட டைட்டில் பாடலை திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் அன்றைய கொள்கை விளக்கப் பாடல் என்று சொல்லுமளவுக்கு அமைத்திருந்தார்கள். அது மட்டுமல்ல அதே படத்தில்
“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ”   என்ற பாடலும் அதி உன்னதமான கருத்துக்களை அள்ளி வீசிய பாடலாகும்.

வீர உணர்வை வெளிப்படுத்தும் பாடல்கள்
01  பறக்குது பார் பொறி பறக்குது பார்  — படம்:நீதிபதி  [1955 ]- பாடியவர் : கே .ஆர் . ராமசாமி
வீ ணரை வென்றுவந்த வீரராம்
வென்று வந்த சேரராம்   – அந்த
வீராதி வீரராய் போல் சிரிக்குது பாராய்
பாண்டியன் சபையினிலே
பாய்த்தெழும் கண்ணகி போல்
பறக்குது பார் பொறி பறக்குது பார்
“பறக்குது பார் பொறி”   பொறி என்று பூடகமாக தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் பாடல் இது.

02  வாழ்வது என்றும் உண்மையே  — படம்:ராஜா மலையசிம்மன் [ 1959  ] – பாடியவர் :சீர்காழி கோவிந்தராஜன்
வெற்றியின் பாதை தெரியுதடா
வீணர்கள் கோட்டை சரியுதடா
எட்டுத் திசையும் கொண்டாடவே
எகிறிப் பாய்ந்து முன்னேறடா
முன்னேறடா முன்னேறடா


03  எங்கள் திராவிட பொன்னாடே — படம்:மாலையிட்ட மங்கை   [1959 ]- பாடியவர் : டி.ஆர் . மகாலிங்கம்

விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே
வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே..
எங்கள் திராவிடப் பொன்னாடே.
தி.மு.க இயக்கத்தின் கொள்கை விளக்கப்பாடல் என்ற அளவுக்கு புகழ் பெற்ற பாடல்.படத்தின் கதைக்கும் , இந்தப்பாடலுக்கும் ஏதும்
தொடர்பில்லை.மக்களைக் கவர்வதற்கென்றே சேர்க்கப்படட பாடல் இது.
04  வீரர்கள் வாழும்  திராவிட நாட்டை  — படம்:சிவகங்கை சீமை    [1960 ]- பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன்
மன்றம் மலரும் முரசொலி கேட்கும்
வாழ்ந்திடும் நம் நாடு  – இளந்
தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும்
திராவிடத் தீருநாடு
வேலும் வாழும் தாங்கிய மறவர்
வீழ்ந்ததும் கிடையாது


05  அச்சம் என்பது மடமையடா — படம்: மன்னாதிமன்னன்   [1960 ]- பாடியவர் :டி.எம். சௌந்தரராஜன் விளங்கினார்.

ஆங்கிலப் படங்களில் வீரதீர நாயகனாக திகழ்ந்த ஏரோல் பிளைன் [Errol Flynn ] என்ற நடிகரைப் போல தானும் நடிக்க வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி கொண்டார். குதிரை ஓட்டம், வாள்வீச்சு , கூட்டமாக வரும் வில்லனின் ஆட்களை அனாயாசமாக அடித்து வீழ்த்துவது , கொடியில் தாவி பாய்வது , உடையலங்காரம்  என Errol Flynn பாணியை முழுதாக பின்பற்றியதென்பது தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத ஒன்றாக விளங்கியது.

இவையெல்லாம் எம்.ஜி.ஆரை மிகப்பெரிய நட்ஷத்திரமாக வளர்ச்சி பெற உதவி புரிந்தன.
சாகசம் புரியும்   நாயகனுக்கு [ எம்.ஜி.ஆர்] திராவிட முன்னேற்றக கழக பாணி வார்த்தை வீச்சுக்களும் கைகொடுத்தன.

அதோடு மெல்லிசைமன்னர்களின் புதியபாணி இசையும் புது ரத்தம் பாய்ச்சியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

திரைப்படத்தில்  கதாநாயகன் அறிமுகம் ஆகும் காட்சிக்கு  வகைமாதிரியான பாடல் எனபதற்கு முன்னுதாரணமாக அமைந்த பாடல் இது என்று துணிந்து கூறிவிடலாம்.

இந்தப்பாடலுக்கு முன்பே இது போலவே குதிரையில் அல்லது பயணம் செல்லும் போது பாடும்பாடல்கள் பல வெளிவந்த போதிலும் , அவை பயணத்தின் உல்லாசத்தில் எழும் இன்ப உணர்வை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்த நிலையில் ,1952 இல் வெளிவந்த
தேவதாஸ் படத்தில் பயணத்தின் போது இயற்கையாக எழும் உற்சாகத்தை , ஊடுருவிச் செல்லும் இன்பத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல் ” சந்தோசம் தரும் சவாரி போகும் ” என்ற பாடலாகும். இந்தப்பாடலையும் இசையமைத்தவர் மெல்லிசைமன்னர்
என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ஆயினும்  கதாநாயகனின் உள்ளத்து வேட்கையை ,புத்துணர்ச்சியை  அவனின் சமுதாயப்பார்வையை , அவனது இலட்சிய  ஆவலை வெளிப்படுத்துவதாக   நீலமலைத் திருடன் [1957 ] படத்தில் கே.வி.மகாதேவன் இசையமைத்த ” சத்தியமே லடசியமாய் கொள்ளடா ”
என்ற பாடல் ஒரு கொள்கை முழக்கமாக அமைந்த  முக்கியமான பாடல் என்று கூறலாம்.

இதே போலவே அரசிளங்குமரி [1961  ] படத்தில் ” ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு சேர்ந்து வருகிறார் ” என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன் , சூலமங்கலம்  ராஜலட்சுமி இணைந்து பாடிய பாடலை ஜி.ராமநாதன் இசையமைத்தார்.

இந்தப்பாடலின் பாதிப்பு பின்னாளில் இது போன்ற பாடல்கள் மூலம் கதாநாயகர்களை படத்தின் ஆரம்பத்திலேயே அறிமுகம் செய்யும் வழமை உருவானது.

நாடகத்தில் முன்பாட்டு [ Entrance Song ] என்று அழைக்கப்பட்ட கதாநாயகர்கள் அறிமுகமாகும் காட்சி போல , தமிழ்திரையிலும் நாயகர்கள் இது போன்ற பாடல்களுடன் அறிமுகமாவது ஒரு புதிய போக்காக அமைய மெல்லிசைமன்னர்களின் பாடல்கள் காரணாமாயிருந்தன.

வீரவுணர்ச்சி மட்டுமல்ல  வெற்றிக்களிப்பில் உண்டாகும் உற்சாகத்தை ” ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஊட்டுவோம் ” என்ற பாடலை மகாதேவி படத்தில் மெல்லிசைமன்னர்கள் அமைத்தனர்.

இதே போன்றே திருமணம் மற்றும் அதுதொடர்பான நிகழ்வுகளைச் சிறப்பித்து காட்டும் வண்ணம்  தமிழ் திரையிசை பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.திருமண பாடல் என்றதும் என் நினைவுக்கு வரும் முதல் பாடல் “வாராய் என் தோழி வாராயோ ” என்ற
பாசமலர் திரைப்படப் பாடலே !

திருமண வைபவங்களில் பாடல்களை ஒலிபரப்பரப்புபவர்களுக்கு உடனடியாக கைவரக்கூடிய பாடலாக இந்தப்பாடல் அமைந்திருந்தது அந்தளவுக்கு  திருமணத்தை பாடல்களில் வடித்துக் கொடுத்த முதன்மை இசையமைப்பாளர்கள் மெல்லிசைமன்னர்கள் என்பது மிகையல்ல.
இதுமட்டுமல்ல மணமக்களை பல சந்தர்ப்பங்களிலும் வாழ்த்திப்பாடும் அற்புதமான பாடல்களையும் தந்திருக்கிறார்கள்.

சில எடுத்துக்காட்டுக்கள்:
01   வாராய் என் தோழி வாராயோ – படம்: பாசமலர் [1961 ] -[ மணப்பெண்ணை அழைத்துவரும் பாடல் ]
02   போய் வா மகளே போய் வா மகளே – படம்: கர்ணன் 1964 ] – [ பிள்ளைபெறுவதற்கு தாய் வீடு செல்லும் போது பாடும் பாடல்.]
03   வளையல் சூட்டி  – – படம்: கர்ணன் 1964 ] -[1964 ] –  [ வளைகாப்புப் பாடல் ]
04   குங்குமப்பொட்டு குலுங்குதடி – – படம்: இது சத்தியம்  [1964 ] – [ வளைகாப்புப் பாடல் ]
05   ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – – படம்: கற்பகம்  [1964 ] – [ முதலிரவு நேரம் தோழி பாடும் பாடல்]
06   கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு  – படம்: படகோட்டி  1964 ] – [ வளைகாப்புப் பாடல் ]
07   கெட்டி மேளம் கட்டுற   கல்யாணம் – படம்: சந்திரோதயம்  1967 ]
08    தங்கமணி பைங் கிளியும் தாயகத்து நாயகனும் –  படம்:சிவந்தமண்  [ 1970 ] [ மணமக்கள் வாழ்த்துப்பாடல் ] – [ இசைத்தட்டில் வெளிவராத பாடல்.]
09  புகுந்த வீடு இனிமையான மல்லிகை பந்தல் – படம்: புண்ணியபூமி   [1974 ] –
நாட்டார் பண்பியலில் அமைந்த சில பாடல்களை 1950 பாதிக் கூறிலிருந்து கொடுக்க முனைந்ததைக் காண்கிறோம். நாட்டுப்புற இசையின் ஓசைநயங்களையும் தேவை கருதி அங்கங்கே மெல்லிசையில் இழைத்து வந்ததைக் காண்கிறோம்.


வீரம் , மானம்  உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது உணர்ச்சி கொந்தளிப்பையும் , தாலாட்டுப் பாடல்களில் தாயின் பாசத்தையும் , கண்ணீர் பெருக்கையும் , தாலாட்டின் வாய் மொழி ஓசையின்பத்தையும்  அத்தோடிணைந்த மெல்லிசையின் சுகந்தத்தையும் மிக
இயல்பாய் கொடுத்த பெருமை மெல்லிசைமன்னர்களை சாரும்.

எழுச்சியும் , கிளர்ச்சியும் மிக்க பாடல்களுடன் தங்களுக்கேயான,தனித்துவமிக்க இசையுலகத்தை படைத்துக்காட்ட  1960  களுக்கு நகர்கிறார்கள்.

தொடரும் …..  T .சௌந்தர்

Leave A Reply

Your email address will not be published.