மேய்ச்சல் தரைக் காணிகளை அபகரிக்காதே இன்று ஆர்ப்பாட்டம்.

மேய்ச்சல் தரைக் காணிகளை அபகரிக்காதே
கொக்கட்டிச்சோலையில் இன்று ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரைக் காணிகளைப் பெரும்பான்மை இன மக்கள் அத்துமீறிப் பிடிக்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கால்நடைப் பண்ணையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும் பண்ணையாளர்கள் ஆகியோர் பட்டிப்பளைப் பிரதேசத்தில் இருந்து பேரணியாகச் சென்று பிரதேச செயலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை 135 கிராம சேவகர் பிரிவில் உள்ள பரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமான மணல் ஏற்றம், காத்தாடியார் சேனை, பொன்னாங்கண்ணி சேனை, பனையடிவெட்டை, மலையடிவெட்டவிச்சுகுளம் ஆகிய வன பிரதேச கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையைப் பண்ணையாளர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், சில வருடங்களாகப் பெரும்பான்மை இன மக்கள் அத்துமீறிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருவதுடன், 1500 ஏக்கருக்கும் அதிகமான காடுகளும் அழிக்கப்படுகின்றன.

இந்த மேய்ச்சல் தரை அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே கால்நடைப் பண்ணையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மற்றும் பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.