தலைவிரித்தாடுகின்றன அடக்குமுறைகள்! அரசைக் கண்டிக்கின்றார் ரிஷாத்.

தலைவிரித்தாடுகின்றன அடக்குமுறைகள்! அரசைக் கண்டிக்கின்றார் ரிஷாத்

“இந்த ஆட்சியில் சிறுபான்மை இன மக்கள் வேதனையின் உச்சத்தில் வாழ்கின்றனர். அந்தளவுக்கு இந்த ஆட்சியில் அடக்குமுறைகள் தலைவிரித்தாடுகின்றன.”

இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இஸ்லாம் பற்றிய பூரண அறிவைப் புரிந்துகொள்ள, புனித அல்குர்ஆனுடன் சேர்த்து, அது அருளப்பட்ட பூரண பின்புலங்களை விளக்கும் ஹதீஸ்களையும் நல்லெண்ணத்துடன் அமைச்சர் உதய கம்மன்பில படிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசிய அமைச்சர் உதய கம்மன்பில, அல்குர்ஆனை தான் படித்தார் எனவும், ‘இறந்தவர்களின் உடல்களை எரிப்பது ஹராம் என எங்கும் கூறப்படவில்லை எனவும் கூறியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் நேற்று சபையில் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

“அல்குர்ஆனை மாத்திரமல்ல, ஸ்சையும் சேர்த்துப் படியுங்கள். நல்லெண்ணத்துடன் இவைகளைப் படித்தால் சரியான தெளிவைப் பெறுவீர்கள்.

நாட்டின் இறைமைக்கும், ஒற்றுமைக்கும், ஏன் சுதந்திரத்துக்கும் கூட பாடுபட்டது முஸ்லிம் சமூகம். எனினும்., கொரோனவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம்.

எமது கண்ணுக்கு முன்னே சடலங்கள் பலவந்தமாக எரிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற நிபுணர்களும், இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவ வல்லுநர்களும் ஜனாஸாக்களை அடக்க முடியும் எனச் சொன்ன பிறகும் இந்த அரசு, எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.