இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிப்பொறிமுறையை இம்முறை நிறுவ வேண்டும்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிப்பொறிமுறையை இம்முறை நிறுவ வேண்டும். ஐ.நா மன்னிப்புச் சபை வலியுறுத்து

“இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை எதிர்வரும் 46 ஆவது கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 19 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

இலங்கையில் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அடக்குமுறையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானத்தில் உள்ளவற்றில் மிகவும் வரையறுக்கப்பட்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டுள்ளமை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்தமை ஆகியவற்றின் பின்னணியில் இத்தகையதொரு சர்வதேச நீதிப்பொறிமுறை அவசியமாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு முறையான பொறிமுறையின் கீழ் இலங்கை அரசு செயற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கடந்த சில வருடங்களில், குறிப்பாகக் கடந்த வருடம் இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக சிவில் சமூகக்குழுக்களுக்கான இடைவெளி பாதகமான முறையில் மட்டுப்படுத்தப்பட்டமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் தரிஷா பாஸ்டியன்ஸ் மீதான அடக்குமுறை, சமூகவலைத்தள செயற்பாட்டாளர் ரம்ஸி ரஸீக் மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரின் கட்டாய தடுத்துவைப்பு, எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஆகியவை தொடர்பில் நாம் ஏற்கனவே விசேடமாக சுட்டிக்காட்டியிருந்தோம்.

இத்தகைய அடக்குமுறைகளின் விளைவாக பல செயற்பாட்டாளர்கள் நாட்டைவிட்டுத் தப்பிச்சென்றிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மையினத்தவர்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பெரிதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன” என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.