கந்தரோடையில் தீர்த்தக்கேணி, அரச மரம் தொடர்பில் விசாரித்த நபர்களால் பதற்றம்.

கந்தரோடையில் தீர்த்தக்கேணி, அரச மரம் தொடர்பில் விசாரித்த நபர்களால் பதற்றம்.

யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக்கேணி மற்றும் அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவம் எனக் கூறிய இனந்தெரியாதோர் விசாரித்ததால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வருகை தந்த இனந்தெரியாத சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி மற்றும் அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

அந்தக் கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்தமானது என்று இராணுவத்தினர் எனக் கூறிக்கொண்டு வந்தவர்கள் பூசகரிடம் விசாரித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று தகவல் எத்திவைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோர் அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

கந்தரோடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்து ஆலயத்தை இராணுவம் எனக் கூறிக்கொண்டு சிங்களம் பேசும் நபர்கள் விசாரித்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.