ராஜபக்ச அரசு உடன் பதவி விலக வேண்டும்! – ஜே.வி.பி. வலியுறுத்து

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மூடநம்பிக்கைகளுக்கு பின்னால் ஓடி – பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் ராஜபக்ச அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.

ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான சுனில் ஹத்துனெத்தி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் நாட்டில் பரவியபோது நாடு முடக்கப்பட்டு, அதனை கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதுமட்டுமல்ல அனைவருக்கும் நிவாரணமும் வழங்கப்பட்டது. செயலணிகள் அமைக்கப்பட்டு, மக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் காத்திரமான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. தேர்தலில் வெற்றிபெற்றார்கள், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலமும் கிடைத்தது. இன்று கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. பாணி அருந்தியவர்கள் உட்பட சுகாதார அமைச்சருக்குகூட வைரஸ் தொற்றியுள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் இன்னும் சமூகத்தொற்று இல்லை என விளக்கமளிக்கப்படுகின்றது.

பாணி மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியுமென்றால் அதனை அரசு சட்டபூர்வமாக செய்திருக்கவேண்டும். அதனைவிடுத்து ஆட்சியாளர்களே பாணிக்குப் பிரசாரம் செய்தனர். மக்களும் அதனை நம்பினர். கடைசியில் அதன்மூலமும் கொரோனா பரவியது. இவ்வாறு நாட்டை கீழ்மட்டத்துக்கு கொண்டுவந்து, பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் ராஜபக்ச அரசு உடனடியாகப் பதவி விலகவேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.