தபால் மூலம் வாக்களிக்க தவறுபவர்கள் 20,21ல் மாவட்ட செயலகங்களில் வாக்களிக்கலாம் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்

இந்த மாதம் 13ம் திகதி முதல் 17ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க தவறுவோருக்கு எதிர்வரும் 20ம், 21ம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் வாக்குகளை பதிவு செய்ய முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், வாக்களிக்க வருவோர் கறுப்பு அல்லது நீல நிற பேனை ஒன்றை எடுத்து வருமாறும் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் ஒத்திகை நடவடிக்கைகளின் போது அனேகமானவர்கள் பேனையை எடுத்துவர தவறி அருகில் இருந்தவர்களிடம் பேனை கேட்பதனை அவதானிக்க முடிந்ததாகவும் அவர், இதன் போது சுட்டிக்காட்டினார்.

வேட்பாளர்கள் செல்கின்ற வாகனங்களில் மாத்திரமே ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட முடியுமென தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், ஆதரவாளர்கள் செல்லும் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட முடியாதெனவும் கூறியுள்ளார்.

அவ்வாறு ஒட்டப்பட்டிருப்பதனை அவதானித்தால் 071 91 60000 என்ற இலக்கத்திற்கு வட்ஸ் அப் அல்லது வைபர் மூலம் அறிவிக்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 829 பேர் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 815 பேர் தபால்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அம்மாவட்டங்களின் உதவி தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.