தேர்தல் பிரசாரத்தில் எனது புகைப்படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி கோட்டாபய

2020 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளுக்காக தனது நிழற்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் நிழற்படங்களை பயன்படுத்துவதாகவும் இராணுவம் மற்றும் அரச அதிகாரிகளை ஈடுபடுத்துவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய துறை தலைவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்கு ஜனாதிபதியின் நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் அரச ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கடுமையாக அறிவுறுத்துமாறும் ஜனாதிபதி, செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களும் இவ்வறிவுறுத்தலை பின்பற்றுமாறும் ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தர வௌியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Comments are closed.