புளாட் வதை முகாமில் நான் (பகுதி 15)- சீலன்

“வெல்வோம்-அதற்காக”

ஒரு சில மத்திய குழுவினர் தப்பியோட, நாம் அடிவாங்குகின்றோம்…

உமாமகேஸ்வரன் தளத்திற்கு சென்ற போது நக்கீரன் (தமிழன்குரல் ஆசிரியர்) என்ற தோழரையும் இந்தியாவில் இருந்து அழைத்துச் சென்றிருந்தார். நக்கீரனை நேரடியாக நாம் இருந்த தண்டனைக் குடிசைக்கு செந்தில் கூட்டி வந்து இவரும் இனி உங்களுடன் தான் இருப்பார் என்று சொல்லிவிட்டுச் சென்றான். அவர் ஏன் எதற்காக எம்முடன் கொண்டு வந்து விடப்பட்டார் என்பது எமக்கு புரியாமையால், எமக்குள் அவர் தொடர்பாக ஒரு பயம் இருந்தது. நாம் என்ன கதைக்கின்றோம் என்று உளவறிய வந்துள்ளாரோ? என்றும் சந்தேகமிருந்தது. எமது தண்டனைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டோர் 10 பேராகி இடநெருக்கடி அதிகமாகியது. இருந்தபோதும் அதை யாரிடம் யார் சொல்வது? சொன்னால் அடி விழும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததால் அதைப் பற்றி எதுவும் கதைக்காது மௌனமாக இருந்தோம்.

உமாமகேஸ்வரனின் விஜயம் என்பது எமது முகாமை உலுக்கியது என்றே சொல்லலாம். அவன் வந்து சென்றதும் முகாமில் இருந்த பல தோழர்களுக்கு தாம் அவரை நேராக சந்தித்து விட்டோம் என்ற திருப்தி ஏற்பட்டது. பல தோழர்கள் எம்மை வெளியால் அழைத்துச் செல்லும் போது உங்களுடன் உமாமகேஸ்வரன் என்ன கதைத்தார் என ஆவலாக கேட்பார்கள். நாம் அவர் ஒன்றும் பெரிதாக கதைக்கவில்லை ஆனால் அவர் நாங்கள் செய்த குற்றத்திற்கு தான் தண்டனை அனுபவித்து வருகின்றோம் என்ற அடிப்படையில் தான் கதைத்தார் என்றதும் பலரும் முகம்வாடியபடி என்ன பெரியய்யாவும் உங்களை இப்படியா பாக்கின்றார் என்று ஆதங்கப்பட்டனர்.

உமாமகேஸ்வரன் வந்த போது முகாமில் ஒரு சம்பவம் நடந்தது. எல்லோரும் மதிய உணவிற்காக வரிசையில் காத்து நின்றனர். அவர்களுடன் உமாமகேஸ்வரனும் வரிசையில் உணவுக்காக நின்றான். முகாமில் இருந்த எல்லோரது கைகளிலும் தட்டு காணப்பட்டது. ஆனால் உமாமகேஸ்வரனின் கையில் மாத்திரம் இல்லை. இதை அவதானித்த வளவன் தனது தட்டை கொண்டு வந்து நீட்ட அதை வாங்க மறுத்தான் உமாமகேஸ்வரன். இதைப் பார்த்த பல தோழர்கள் தமது தட்டை நீட்டினார்கள். அன்று சமையலுக்கு பொறுப்பாக இருந்தவர்களும் தமது தட்டுக்களை நீட்டினார்கள்.

அவற்றில் எதையும் வாங்கவில்லை என்பதால் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. இவனுடன் வந்திருந்த வாமதேவன், கண்ணன் (சோதீஸ்வரன்) போன்றோர் மற்றவர்களின் தட்டை வாங்கியிருந்தனர். இவன் தட்டை வாங்காத பெரிய சர்ச்சையில் முகாம் அல்லாடிக்கொண்டிருக்கும் போது திடீர் என உமாமகேஸ்வரன் சமையல் அறைக்கு மறுபுறத்தில் நிலத்தில் கிடந்த அழுக்குப்படிந்திருந்த தட்டை எடுத்தான். அத்தட்டில் தான் முகாமில் நிற்கும் நாய்க்கு சாப்பாடு வைப்பது வழக்கம். கிணற்றடிக்கு தானே சென்று கழுவி துப்பரவு செய்து மீண்டும் சாப்பாட்டிற்கான வரிசையில் வந்து நின்றான். அந்ததட்டிலே தான் உணவை வாங்கிச் சாப்பிட்டான். இது உண்மையில் அந்த முகாமையே அதிரவைத்தது. அவனை தலைவராக மானசீகமாக ஏற்றவர்கள் போற்றிப் புகழ்ந்தனர். மற்றவர்களும் கூட பாராட்டினர். இவ்வாறு ஒரு பெரிய நாடகமாடி விட்டு முகாமில் இருந்து உமாமகேஸ்வரன் தன் குழுவினரோடு புறப்பட்டான். அதன் பின்பு தோழர்களை முகாம் மையத்துக்கு அழைத்த முகாம் பொறுப்பாளர் வளவன், பெரியய்யா நாய் சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டு விட்டு போகின்றார் என சத்தமிட்டான். இதற்கு காரணம் நீங்கள் எல்லோரும் தான் எனக் கூறித் தண்டனை கொடுத்தான். மேலும் சமையலுக்கு அன்று பொறுப்பாக இருந்த ரவிவர்மன் என்ற தோழருக்கும் அவருடன் இணைந்தவர்களுக்கும் கடுமையான தண்டனையினை மறுநாள் கொடுத்தான். பலருக்கு ஏன் இது என்று விளங்கவில்லை.

ஒவ்வொருவருக்கும் எனக் கொடுக்கப்பட்ட தட்டைத் தான் அவர்கள் வைத்திருந்தனர்.புதிதாக யாராவது வந்தால் அன்று சமையலில் இருப்பவர்களின் தட்டை பாவிப்பது வழக்கம். ஆனால் உமாமகேஸ்வரனோ அதைச் செய்யாது நாய் சாப்பிட்ட தட்டில் தான் சாப்பிட்டு ஒரு ஸ்ரண்டு செய்ததற்காக சும்மாயிருந்த மற்றைய தோழர்கள் சுடுமண்ணில் உருண்டது தான் மிச்சம். ஏன் வளவன் இதைச் செய்தான் என்றால் தலைமையிடம் விசுவாசத்தை பெற்றுக்கொள்ளவே. இவ்வாறு தான் பலர் தமது விசுவாசத்தைக் காட்ட மற்றவர்களைத் துன்புறுத்தினர். இது முகாம் பொறுப்பாளர்களிடம் மட்டுமல்லாது சாதாரண தோழர்களிடையேயும் கூட காணப்பட்டது. இதனால் தான் பல காட்டிக் கொடுப்புக்களும் பழிவாங்கல்களும் நடந்தேறின.

இக் காலகட்டத்தில் புதிதாக முகாமிற்கு வந்த தோழர்கள் எம்முடன் சரளமாக கதைக்குமளவிற்கு நெருக்கம் ஏற்பட்டது. அப்போது எனது ஊரவரான பிரகாஸ் என்பவருடன் கதைத்தேன். அவர் எனக்கு நடந்தவற்றை கேட்டு கவலைப்பட்டார். அப்போது அவர் தான் புலிக்கு துண்டுப் பிரசுரங்கள் கொடுத்ததாகவும் ஆனால் தன்னை பின்தளத்திற்கு அனுப்ப புலிகள் மறுத்து விட்டனர் என்றும் இதனாலேயே தான் புளட்டுக்கு வந்தார் என்றும் கூறினார். எனது வீட்டாரின் சுகநலங்களையும் அவரிடம் கேட்டு அறிந்தேன். நான் முன்பு குறிப்பிட்டது போல தளத்தில் இருந்துபுளட்டுக்கு ஆட்சேர்ப்பு என்பது எந்த அரசியலையும் கொண்டிருக்கவில்லை. மாறாக கும்பலில் கோவிந்தா என்ற மாதிரி படகில் ஏற்றி அனுப்பினார்கள்.

இவ்வாறு தோழர்களுடன் கதைப்பது போன்றவற்றின் ஊடாக எமது காலங்கள் நகர்ந்தன. தோழர் சந்ததியார் அமைப்பில் இருந்து ஒதுங்கிய பிற்பாடு அமைப்பின் அரசியல் பொறுப்பாளராக பம்மாத்து வாசு என்ற வாசுதேவாவை நியமித்தார்கள். இந்த வாசு அடிப்படையிலேயே நேர்மையற்றவர் என்பதால் தான் “பம்மாத்து” என்ற பட்டம் சூட்டப்பட்டது. இவர் அனைத்துமுகாம் பொறுப்பாளராக இருக்கும் போது செய்த தில்லு முல்லுக்கள் பல. சுயநலம் கருதிய இவரது செயற்பாடுகளைப் பார்த்த பல தோழர்கள் இவர் மீது காழ்ப்புணர்வைக் கொண்டிருந்தனர்.தலைமைக்கும் அதன் அடிவருடிகளுக்கும் சேவகம் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த பம்மாத்து வாசு இயக்கத் தோழர்களைப் பற்றி சிந்தித்ததில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் பாணும், வாழைப்பழமும் காலைச் சாப்பாடாகவும் மதியம் மீன் அல்லது இறைச்சி உணவாகவும் இருந்தது. இதில் வாசு வந்ததும் கழகத்தில் பணம் தட்டுப்பாடு என்று கூறிக் கொண்டு பாண், வாழைப்பழம் என்ற உணவை நிறுத்தினான். ஆனால் தனது ஆடம்பர வாழ்க்கை செலவுகள் மற்றும் உணவுப்பழக்க வழக்கங்களை அவன் நிறுத்தவில்லை .

வாசுவைப் போன்று தலைமையில் இருந்தோர் ஒவ்வொருவரும் ஊர் சுற்ற மோட்டார் சைக்கிள், உண்பதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் என்று சொகுசு வாழ்க்கையையே வாழ்ந்தனர். இதைப் பார்த்த தோழர்கள் பலர் தமக்குள்ளேயே திட்டித் தீர்த்தனர். இவ்வாறான ஒருவர் அரசியல் பொறுப்பில் இருந்தால் என்ன நடக்கும்? மார்க்சியம் என்ற சொல்லுக்கு அப்பால் ஒருவரும் முன்னேறவில்லை. அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்த பம்மாத்து வாசு அரசியல் பொறுப்பாளராக பதவியேற்றப்பட்டது எம்மிடையே பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதை எமக்குள் கதைத்தபடி இருந்தோம். அக்காலத்தில் வாகன ஒட்டுனராக இருந்த வெள்ளை அண்ணர் முகாமிற்கு பொருட்களை கொண்டு வரும் போது முகாம் தோழர்கள் ஊடாக எமக்கு சில தகவல்களைத் தருவார்.

அவ்வாறு தரப்பட்ட தகவல்கள் தான் சுழிபுரம் படுகொலை மற்றும் சந்ததியார் கைது போன்றவை. எம்மை சந்திக்க வருபவர்கள் வாமதேவன் உட்பட எம்முடன் சரளமாக கதைக்க ஆரம்பித்தனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தின் பின் பாபுஜி வருவதில்லை. அதன் பிற்பாடு அவரை இந்தியாவில் நான் சந்திக்கவில்லை. ஒரு முறை எம்மை அரசியல் பொறுப்பாளர் பம்மாத்து வாசு சந்திக்க வந்த போது எமக்கு வாசிக்க புத்தகம் தேவை என்றோம். அதற்கு சிரித்தபடி ஆம் என்று கூறிச் சென்றவர் வேண்டுமென்றே ஒரு சில மார்க்சிச புத்தகங்களை அனுப்பி வைத்தார்.

எமக்கோ பயம். முகாம்களில் அவைகள் படிக்கத் தடையாக இருக்கும் போதுää எமக்கு மட்டும் ஏன் என்ற கேள்வியுடன் அதை சிறிது காலம் தொட்டுப் பார்க்காமல் இருந்தோம். பின்னர் முகாமில் தோழர்களால் பரபரப்பாக வாசிக்கப்பட்ட புத்தகங்களை அவர்கள் ஊடாக பெற்றுக்கொண்டோம். அப்போது தான் எமக்கு “தாய்”, “வீரம் விளைந்தது” பகுதி 1-2, “அதிகாலையின் அமைதி” போன்ற புத்தகங்கள் கிடைக்கப் பெற்றன. எம்மிடையே ஒருவர் அதை வாசிக்க மற்றவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருப்போம்.

இவ்வாறு பல வாரங்கள் எம்மைக் கடந்து போனது. அக்காலகட்டத்தில் படைத்துறைச் செயலதிபர் கண்ணனும் (சோதீஸ்வரன்) காந்தனும் எம்மை சந்திக்க வந்து போவார்கள். படைத்துறைச் செயலதிபராக கண்ணன் (சோதீஸ்வரன்) இருந்தாலும் ஆயுதங்களுக்கு பொறுப்பாக இருந்தது காந்தன் என்றே அறிந்தோம். இவர்கள் இருவரும் எம்மை சந்தித்து சாதாரணமாக கதைத்து விட்டு செல்வார்கள். காந்தன் என்ற ஜான் மாஸ்டர் கண்ணனுடன் (சோதீஸ்வரன்) மாத்திரம் அல்ல உமாமகேஸ்வரன் மற்றும் செந்தில் போன்றோருடனும் முகாம்களுக்கு விஜயம் செய்வார். படைத்துறை நடவடிக்கைகளை கையாள்வதற்கும் அதை பார்ப்பதற்கும் இவர் அடிக்கடி முகாம்களிற்கு விஜயம் செய்துள்ளார்.

காந்தன் என்ற ஜான் மாஸ்டர் விஜயம் செய்த முகாம்களில் “பீ” முகாம் மற்றும் நாம் இருந்த முகாம் போன்றவற்றிற்கு அப்பால் கொமாண்டோஸ் முகாம் போன்றவற்றிற்கும் விஜயம் செய்துள்ளார். இதில் “பீ” முகாமில் இருந்த “நாலாம் மாடியையும்” நாம் இருந்த முகாமில் எமது சிறையையும் பார்த்த காந்தன் என்ற ஜான் மாஸ்டர் இவைகள் பற்றி எந்த விதக் கேள்வியையும் எழுப்பவில்லை என்பதே இன்றுவரை எனக்குத் தெரிந்த தகவல். காந்தன் என்ற ஜான் மாஸ்டர் தலைமையுடன் அதன் அதிகார வெறியுடன் இணைந்து செயற்பட்ட ஒருவராகவே இருந்து வந்தார் .

இக்கால கட்டத்தில் நோபேட்டை தளத்தில் இருந்து பின்தளத்திற்கு அழைக்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்தேறின. இதை அறிந்த சந்ததியார் நோபட்டை பின் தளத்திற்கு வர வேண்டாம் என்று ஒரு கடிதம் எழுதி என்.எல்.எவ்.ரீ தோழர்களிடம் கொடுத்து விட்டிருந்தார். ஆனால் என்.எல்.எவ்.ரீ யினருக்கு இவர் கேசவன் என்ற பெயரில் அறிமுகமாகி இருந்ததால் நோபேட் என்பவர் யார் என அவர்கள் அறிய குறிப்பிட்ட காலம் எடுத்தது. இதற்குள் நோபோட் பின்தளம் வர வழைக்கப்பட்டார். நோபோட்டுடன் பல விவாதங்கள் நடந்தேறின. நோபோட்டை எந்த நேரமும் உளவாளிகள் சுற்றிய வண்ணமே இருந்தார்கள். பின் அவரை தளத்திற்கு பொறுப்பாளராக அனுப்பிவைத்தனர்.

ஒருநாள் அமைப்பில் இருந்த மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார் என்ற செய்தியை அறிந்ததும் முகாம்களில் உள்ளவர்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவ்வாறு தப்பித்தவர் காந்தன் என்ற ரகுமான் ஜான் என்றும் அவர் கழகத்தின் ஆயுதங்களுடன் தலை மறைவாகியதுடன் அதற்கு முன் கண்ணனை (சோதீஸ்வரன்) கொலை செய்யவும் முயற்சித்தார் என்றும் பொய்ப் பிரச்சாரங்களை கழக முகாம்களுக்கள் கட்டவிழ்த்து விட்டனர். இதனால் பல தோழர்கள் ரகுமான் ஜானை கடுமையாக விமர்சித்தனர். அவர் தப்பியோடுவதற்கு ஒருகிழமைக்கு முன்னர் எம்மைச் சந்தித்து கதைத்திருந்தார். இது எல்லோருக்கும் தெரியும். அதனால் அவர் தப்பியோடியதற்கும் எமக்கும் சம்பந்தம் உண்டு எனக்கருதி கண்ணன் (சோதீஸ்வரன்), வாமதேவன், பம்மாத்து வாசு போன்றோர் வந்து எம்மை தனித்தனியாக வைத்து விசாரித்தனர். அப்போது மீண்டும் அடித்தனர். சித்திரவதை செய்தனர். தம்முடன் இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவரும் இயக்க இரகசியங்களை அறிந்தவருமான ரகுமான் ஜான் -காந்தன் தப்பித்ததென்பது ஆச்சரியத்தை அவர்களுக்கு கொடுத்திருந்தது என்பதனை விசாரணையின் போது என்னாற் கவனிக்க கூடியதாக விருந்தது. அவரைக்கண்ட இடத்தில் சுடும் அளவிற்கு ஆத்திரத்தில் அன்று கழகம் இருந்தது. ரகுமான் ஜான் ஏன் எதற்காகத் தப்பினார் என்று எவருக்கும் தெரியவில்லை. கழகத்தின் எல்லா அராஜக சம்பவங்களிலும் ஒன்றாக நின்ற காந்தன் என்ற ரகுமான் ஜான் எதற்காக திடீர் என ஒழித்து ஓடினார் என்பது எல்லோருக்கும் புரியாத புதிராகவே இருந்தது. அவர் தப்பிச் செல்லும் போதுகழகத்தின் எந்த ஒரு உடமைகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கவில்லை.. ரகுமான் ஜான் தப்பியதும் இயக்கத்தின் பல நடவடிக்கைகள் இரகசிய முறைக்கு மாற்றப்பட்டன.

 

புதியசெயற்குழுவையும் மத்திய குழுவையும் உருவாக்கத் தொடங்கினர். தமது நம்பிக்கைக்கு உரியவர் தப்பித்ததால் மற்றவர்களை நம்பத் தயாராக எவரும் இருக்கவில்லை. கழகம் எப்போதும் தனிமனித வழிபாட்டிலேயே இயங்கி வந்தது. சிலர் மார்க்சியம், தேசியம், இன முரண்பாடு, சர்வதேசியம் போன்ற சொற்பதங்களைப் பாவித்தும் தனிமனித வழிபாட்டைச் செய்து வந்தனர். இத் தனிமனித வழிபாட்டுடன் பலர் கருத்து ரீதியாக முரண்படவில்லை. பின்தளத்தில் தான் அப்படி என்றால் தளத்திலும் அதே நிலைதான். பின்தளத்தில் நடக்கும் விடையங்களை மறுத்து பிரச்சாரம் செய்து இயங்குவது தளத்தில் இருந்தவர்களின் வேலையாக இருந்தது. இதனால் சிறு சோர்வு நிலை தளத்தில் காணப்பட்டது. ஆனால் ஆட்சேர்ப்பில் மட்டும் அவர்கள் சோர்ந்து போகவில்லை. தொடர்ந்தும் ஆட்களைத் திரட்டிப் பயிற்சிக்கு என அனுப்பி வந்தனர்.

சுழிபுரப் படுகொலை, அதன் பின் மணியம் தோட்டப் படுகொலை, இயக்கத்திற்கு வந்த பெண்கள் கொலை, மேலும் கொலைகளும் அடாவடித்தனங்களும் நடந்த போதும் கூட இன்று புலம்பெயந்து ஜனநாயகம் மற்றும் புரட்சி பற்றிப் பேசும் பலர் அன்று இயக்கத்துக்குள்ளும் வெளியிலும் அவற்றினை மூடி மறைத்தனர். பொய்களை கீழ் மட்டத்தினருக்குக் கூறி பெரியய்யாவிற்கு விசுவாசிளாக இருந்தனர்.

பின்தளத்தில் ஜனநாயகம் மறுக்கப்பட்டு அராஜகம் தலை விரித்தாடியது. தளத்தில் இருந்து அரசியல் வேலைகளில் ஈடுபட்டவர்களும் பெரியய்யாவிற்கும் அவனது குண்டர் கூட்டத்திற்கும்தாமும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர் என்னும் நிலையிலேயே இருந்தனர். உதாரணமாக கொட்டடியை சேர்ந்த நான்கு இளைஞர்களை கழகத்தினர் கொள்ளைகாரர்கள் என கைது செய்தனர். உண்மையில் அவர்கள் கொள்ளைக்காரர்களா என்று பார்த்தால் இல்லை. சிறு திருட்டுகளை செய்யும் திருடர்கள். கொட்டடியைச் சேர்ந்தவர்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர். யாழ்ப்பாண சமூகத்தால் ஒதுக்கப்பட்வர்கள். வறுமையை வாழ்வாக சாதியம் திணித்து இருந்தது. யாழ் சைவவேளாள ஆதிக்கத்தில் ஒரு சிந்தனையாக இருப்பது எங்கு எந்தத் திருட்டு நடந்தாலும் அதை தாழ்த்தப்பட்ட சமூகத்தினரோ அல்லது பொருளாதார வசதி குறைந்தவர்களோ செய்திருப்பார்கள் என்று கூறுவது சாதிய ஆதிக்க வழக்கமாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே பல இயக்கங்களும் இயங்கின. இதற்கு கழகம் மட்டும் விதிவிலக்காக இருக்கவில்லை. யாழ்ப்பாண நகரத்தில் எங்கு எது நடந்தாலும் அது தாழ்த்தப்பட்டவர்களான இந்த நால்வரும் தான் செய்திருப்பார்கள் என்ற எண்ணமும் அபிப்பிராயமும் இருந்தது. இந்த அபிப்பிராயத்தின் அடிப்படையில் கழகத்தினரால் இந்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு மரண தண்டைனை வழங்கப்பட்டது. அவர்கள் நாலுபேரும் நான்கு வெவ்வேறு இடங்களில் வைத்து கொலை செய்யப்பட்டனர். வைத்தீஸ்வரா சந்தி, ஸ்ரீதர் தியேட்டருக்கு முன்னால், வின்சர் தியேட்டருக்கு முன்னால் மற்றும் யாழ் பஸ் நிலையச் சந்திகளில் சமூக விரோதிகள் என்ற பட்டத்துடன் சுட்டு மின்கம்பங்களில் கட்டப்பட்டனர். இதை அறிந்த உறவினரும், அவர்களது கிராமமும் கொதித்து எழுந்தது. இதை மூடி மறைப்பதற்காக கழகத்தினர் அவர்கள் சமூக விரோதிகள் என்ற பொய்ப் பிரச்சாரத்தை செய்ததுடன், பொய்யான ஆதாரங்களையும் முன்வைத்து துண்டுப்பிரசுரம்வெளியிட்டனர்.

இந் நிலையிலேயே நோபேட்டும், காந்தன் என்ற ரகுமான் ஜானுடன் சேர்ந்தவர்களும் பெரியய்யாவின் ஆட்களின் நெருக்கு வாரங்களுக்கும் சந்தேகங்களுக்கும் ஆளான போது கழகத்தைவிட்டுத் தப்பி என்.எல்.எவ்.ரியின் துணையுடன் தலைமறைவானவர்கள். தமது உயிருக்கு பிரச்சனை வந்த பின்பேயே ரகுமான்ஜான், கேசவன் என்ற நோபர்ட் போன்றவர்கள் தலைமறைவாகினார்கள். இவர்கள் பிற்காலத்தில், தமது வெளியேற்றம் அரசியல் ரீதியானது எனக் கூறினாலும் உண்மை அதுவல்ல. காரணம் இவர்கள் புளொட் இல் இருக்கும் வரை எதுவித கருத்தியல் சார்ந்த அரசியல் – நடைமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அப்படி முன்னெடுத்திருந்து இவர்கள் பிற்காலத்தில் கூறியது போல இவர்களின் அரசியலும் சரியானதாக இருந்திருந்தால் சில வேகைளில் பல உட்கட்சிப் படுகொலைகளைத் தடுத்திருக்க முடியும்.

தேசிய விடுதலைப் போராட்டத்தை திசை மாற்றி இருக்க முடியும். ஆனால் அப்படி நடக்கவில்லை. 2009 பின் அரசியல் செய்ய மறுபடியும் முயன்ற ரகுமான் ஜான் போன்றவர்கள் தாம் கழகத்துடன் கருத்து முரண்பாட்டில் தான் கழகத்தை விட்டுப் பிரிந்தோம் என்று கூறுவது சந்தர்ப்பவாதமே. இவர்கள் பிரிந்து செல்லவில்லை மாறாக ஒழித்து ஓடியவர்கள் என்பதே என் கருத்து .

தொடரும்

– சீலன்

பழைய பதிவுகளை காண அழுத்துங்கள்

 

Leave A Reply

Your email address will not be published.