பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பு அரசின் நிலைப்பாடு இல்லையா? – சஜித் அணி சாடல்

“கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இவ்விடயத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்றால், அவரின் கருத்து அரசின் நிலைப்பாடல்ல என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.

சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் அரசுக்குள்ளேயே இரு வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் அரசியல்வாதிகள் கருத்துக்கூற முடியாது. மாறாக இந்த விடயத்தில் தேர்ச்சி பெற்ற விசேட நிபுணர்களின் அபிப்பிராயத்தை அரசு வெளியிட வேண்டும். எனினும், அதனைச் செய்வதில் அரசு ஏன் தொடர்ந்தும் தயக்கம் காட்டுகின்றது என்ற சந்தேகம் பொதுமக்களிடத்தில் உள்ளது.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர், அதற்கு அனுமதி வழங்கப்படும் என்றார். எனினும், இந்த விடயத்தில் விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அவ்வாறெனின், சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாகப் பிரதமரால் வெளியிடப்பட்ட கருத்து பொறுப்பற்ற தன்மையைப் புலப்படுத்துகின்றதா? இந்த விடயத்தில் பிரதமரின் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முடியாதெனின், அவரால் வெளியிடப்பட்ட கருத்து அரசின் நிலைப்பாடல்ல என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.