ஜெனிவா நெருக்கடியைச் சமாளிக்க ராஜபக்ச அரசு இராஜதந்திரப் பேச்சு! தாரக பாலசூரிய

ஜெனிவா நெருக்கடியைச் சமாளிக்க ராஜபக்ச அரசு இராஜதந்திரப் பேச்சு! பல்வேறு நாடுகளுடன் முன்னெடுப்பு; உறுதிப்படுத்தினார் தாரக பாலசூரிய

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், உறுப்புரிமை நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதற்கமைய ஜெனிவா நெருக்கடியைச் சமாளிக்க இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பல்வேறு நாடுகளுடன் இராஜதந்திரப் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது எனக் கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன. தாம் தற்போது பல நாடுகளுடனும் பேச்சு நடத்தியுள்ளதாகவும், எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளுடனான பேச்சு நகர்வுகள் முடிவுக்கு வரும் என்றும் பிராந்திய ஒத்துழைப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

தற்போதளவில் தாம் சீனாவின் முழுமையான ஆதரவையும், ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளின் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை மீது இதற்கு முன்னர் 30/1 தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அதற்கு எதிராக வாக்களித்த மற்றும் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்ட நாடுகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது எனவும் அமைச்சர் தாரக பாலசூரிய மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.