வடக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 10 பேருக்கு இன்று கொரோனா!

வடக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 10 பேருக்கு இன்று கொரோனா!

யாழ். ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வடக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 10 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 462 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 10 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். தென்மராட்சி மிருசுவில் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவரும் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த, மன்னார் நானாட்டான் ஹற்றன் நசனல் வங்கி ஊழியர்களுடன் தொடர்புடைய ஒருவரின் குடும்பத்தினர் எனத் தெரிவித்தார்.

அச்சுவேலி மரக்கறி சந்தையில் ஏற்கனவே தொற்று உறுதியான நால்வரில் ஒருவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, தடிமன், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஜா எல பகுதிக்குச் சென்று திரும்பிய நிலையில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்தே யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காகச் சென்றபோது பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கும் இன்றைய பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நெல்லியடி மரக்கறி சந்தை ஆண் வியாபாரி ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வடக்கில் இன்று மேற்கொள்ளப்பட்ட 828 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் என 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.