யாழ். கலாசார நிலையத்தை மத்திய அரசிடம் கையளிக்க இணங்கினார் ஆனோல்ட்!

யாழ். கலாசார நிலையத்தை மத்திய அரசிடம் கையளிக்க இணங்கினார் ஆனோல்ட்!மணிவண்ணன் குற்றச்சாட்டு

“இந்திய அரசின் நிதி உதவியில் யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ். கலாசார மத்திய நிலையத்தை மாநகர சபையின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆனோல்ட், இலங்கை மத்திய அரசிடம் அதனை நிர்வகிக்கக் கையளிப்பதற்கு இணங்கியதால், இதன் கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்தும், அதனைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.”

– இவ்வாறு யாழ். மாநகர சபையின் மேயர் வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தைப் பொறுப்பேற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

அதிலும், குறிப்பாக கலாசார நிலையத்தை இயக்குவதற்கான உத்தியோகத்தர்களை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றோம்.

நான் மாநகர மேயராகப் பதவியேற்ற காலத்திலிருந்து முதல் பணியாக இந்த விடயத்தை முன்னிறுத்தி செயற்பட்டு வருகின்றேன்.

எனினும், இந்தக் கட்டடமானது யாழ். மாநகர சபையிடமிருந்து பறிக்கப்படும் நிலை காணப்படுகின்ற நிலையில் அதனை யாழ். மாநகர சபை பொறுப்பேற்று நடத்துவதற்குரிய செயற்பாட்டை நான் முன்னெடுத்துள்ளேன்.

அத்தோடு அங்கே பணியாற்றுவதற்காக 67 உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.

அத்தோடு அந்தக் கட்டடத்தை நிர்மாணித்த பொறியியலாளர்களிடம் இந்தக் கட்டடத்தை எவ்வாறு கையாள்வது, பராமரிப்பது என்பது தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றோம்.

வெகுவிரைவில் உத்தியோகபூர்வமாக இந்தக் கட்டடமானது திறப்பு விழா செய்யப்பட்டு யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்தோடு இந்தியத் துணைத்தூதுவரிடம் இந்த விடயம் தொடர்பில் பல விடயங்களைத் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களும் இது தொடர்பில் எமக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றனர்.

மேலும், யாழ். மாநகர சபையின் முன்னைய ஆட்சியாளர் இந்தக் கலாசார மத்திய நிலையத்தை இலங்கை மத்திய அரசுக்குக் கையளிப்பதற்கு இணங்கியதே இவ்வளவு காலமும் இந்தக் கட்டடம் திறக்கப்படாமல் இருப்பதற்குக் காரணமாகும்.

எனினும், இந்தக் கலாசார மத்திய நிலையமானது யாழ்ப்பாணம் மாநகர சபையின் சொத்து. அது இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு நமது சபைக்கு மீண்டும் கையளிக்கப்படவுள்ளது என்பதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.