ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் இந்தியா! – இப்படி நம்புகின்றது ராஜபக்ச அரசு

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையெழுத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் இலங்கைத் தூதரகம் ஊடாக இந்தியப் பிரதமருக்கு கிடைத்திருக்கின்றது. அந்தவகையில் இந்தியா இந்த கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.”

– இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் பல்வேறு உறுப்புநாடுகளுக்கும் இவ்வாறு இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரிய கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இறைமை உள்ளநாடு என்ற வகையில் இலங்கைக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் ஆதரவு வழங்கும் என்று நம்புகின்றோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அவ்வாறு புதிய பிரேரணை இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்படும் பட்சத்தில் அதனை இலங்கை எதிர்க்கும்போது அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பு நடத்தப்படும்போது இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பல்வேறு உறுப்பு நாடுகளிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இது தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் நான் 23ஆம் திகதி இரவு 8 மணிக்கு இலங்கையில் இருந்தவாறு இணைய வழியில் உரையாற்றவுள்ளேன்.

இதன்போது இலங்கையின் நிலைப்பாடு தெளிவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு அறிவிக்கப்படும்.

நாங்கள் என்ன செய்திருக்கின்றோம், என்ன செய்யப்போகின்றோம், எமது நிலைப்பாடு என்ன என்ற விடயங்களை மிகத் தெளிவாக – விரிவாக அறிவிப்போம்.

அதேபோன்று ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு நாம் எமது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றோம்.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஆதரவு வழங்குமாறு கோரி உறுப்பு நாடுகளுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்திருக்கின்றோம்.

உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர்களுக்கும் நாங்கள் இவ்வாறு ஒத்துழைப்புக் கோரிய கடிதங்களை அனுப்பி வைத்துள்ளோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையெழுத்துடன் கடிதங்கள் உறுப்பு நாடுகளுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்தவகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இவ்வாறு ஒத்துழைப்பு கோரிய கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் அனுப்பப்பட்டிருக்கின்றது.

அந்தக் கடிதம் தற்போது எமது தூதரகம் ஊடாக இந்தியப் பிரதமரின் கைகளுக்குச் சென்றிருக்கின்றது. அதனை அவர்கள் பரிசீலித்து எமக்கு இந்தக் கூட்டத் தொடரின்போது ஆதரவு வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்குப் பல நாடுகளாலும் ஆதரவு வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

இந்தியா என்பது ஒரு மிகப் பெரிய நாடு. இந்தியா இலங்கைக்குச் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதன்படி இந்தியா எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கின்றோம். இலங்கை இறைமையுள்ள நாடு. ஓர் இறைமையுள்ள நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டுவர முடியாது. அந்தவகையில் அவ்வாறான ஒரு முயற்சி இடம்பெறும்போது எமக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும் என்றே நம்புகின்றோம்.

குறிப்பாக சீனாவும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.