பொத்துவில் – பொலிகண்டி பேரணி: சுகாஸிடமும் பொலிஸ் வாக்குமூலம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நீதிக்கான பேரணியில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமாகிய க.சுகாஸிடம் இன்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்துப் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்த மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும் நோக்கில் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் பலரிடமும் பொலிஸாரால் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தநிலையிலே சட்டத்தரணி க.சுகாஸிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி க.சுகாஸிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

“இன்று மாலை 5.30 மணியளவில் எமது கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸாரால் என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

நான் எனது வாக்குமூலத்தில் பொத்துவில் – பொலிகண்டிப் பேரணியானது ஒரு ஜனநாயப் பேரணி, அந்தவகையில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் இலட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருவனாகக் கலந்துகொண்டேன். அத்துடன் எனக்கு தனிப்பட்ட ரீதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்றக் கட்டளைகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, நான் ஆரம்பம் முதல் இறுதிவரை பேராட்டத்தில் கலந்துகொண்டிருந்தேன்.

தொடர்ச்சியாக வாக்குமூலங்கள் பெறுவது மற்றும் கைது செய்தல் போன்றன, தமிழ் மக்களை உளவியல் ரீியாக அச்சுறுத்தும் செயற்பாடாகும். நாங்கள் ஜனநாயக ரீதியாக இலங்கையின் சட்டத்துக்கும், சர்வதேசத்தினதும் சட்டத்துக்கும் உள்பட்டுத்தான் பேரணியில் ஈடுபட்டோம். ஆகவே, எம் மீதான இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம். சுருக்கமாகச் சொன்னால் பொலிகண்டி முடிவு அல்ல. எமது போராட்டங்கள் தொடரும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.