ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசாங்கம் விலைக்கு கொள்வனவு செய்துள்ள 05 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நேற்று இலங்கைக்கு கிடைத்துள்ளன. சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளது.

இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசிகள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் நேற்றைய தினம் சென்னையிலிருந்து இந்திய விமான சேவைக்கு சொந்தமான எயார் இந்தியாவின் ஏ.ஐ.273 இலக்க விமானத்தில் பிற்பகல் 1. 30 மணியளவில் அந்த தடுப்பூசிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள இந்திய விமான சேவை முகாமையாளர் சாராநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியா அன்பளிப்பாக 05 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

நேற்றைய தினம் இந்த தடுப்பூசிகளுடன் 14 விமானப் பயணிகளும் மற்றும் பொருட்களும் இலங்கைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விமானத்தில் தடுப்பூசிகள் குளிரூட்டப்பட்ட களஞ்சியத்தில் வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டு விமான நிலையத்தின் குளிரூட்டப்பட்ட களஞ்சிய தொகுதியில் வைக்கப்பட்ட பின் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கிணங்க ஏற்கனவே இந்தியா 05 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது.அந்த தடுப்பூசிகள் நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 05 இலட்சம் தடுப்பூசிகளைஅரசாங்கம் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.