போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனையை வழங்குக! – தமிழர்களின் எதிர்பார்ப்பும் இதுவே என்கிறார் சம்பந்தன்

“இலங்கை அரசு பொறுப்புக்கூறும் வகையிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனையை வழங்கும் வகையிலும் புதிய பிரேரணை அமையப் பெற வேண்டும். அந்தப் பிரேரணையை உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரிக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த அமர்வில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை தொடர்பான ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்ததுடன், உறுப்பு நாடுகளும் அதனை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கை மீது பிரிட்டன் முன்வைக்கவுள்ள பிரேரணையின் நகல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அது காத்திரமானதாக இல்லை என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போர் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்டன. எனவே நீதிக்காகவும், தீர்வுக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது ஐ.நா. மனித உரிமை சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் பிரதான கடமையாகும்.

பிரிட்டன் சில நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது முன்வைக்கவுள்ள பிரேரணையை வலுவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து உறுப்புரிமை நாடுகளும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.