ஐ.நா. பிரேரணையை ஆதரியுங்கள்! – உறுப்பு நாடுகளிடம் கூட்டமைப்பு வேண்டுகோள்

உண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் இலங்கை எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை என்றும், இதனால் உரிய நடைமுறைகள் மூலம் மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை விசாரிப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நியாயமான செயற்பாடாகும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை நிராகரித்து வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஒருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அத்தீர்மானத்தில் இருந்து வெளியேற முடியாது என அந்த அறிக்கையின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை பலர் வரவேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உரிய நடைமுறைகள் மூலம் மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை விசாரிப்பது மனித உரிமைகள் பேரவையின் நியாயமான செயற்பாடாகும் என்றும், இது நாட்டின் இறையாண்மை அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாக அமையாது என்றும் கூட்டமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசால் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கப்பட்டமையே 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொடர்புபடுத்த முயற்சித்துள்ளதாகவும், ஆனால் போரின்போது வலிந்து காணாமல்போன பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இறுதியில் படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்க அவர் முன்வரவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 2011 இல் வெளியான நிபுணர்கள் குழுவின் அறிக்கை மற்றும் 2015 ஆம் ஆண்டின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு உண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் இலங்கை எந்த விசாரணையும் நடத்தவில்லை என்றும், குறித்த அறிக்கைகளின்படி நிறைவடைந்த விசாரணைகளின் அடிப்படையில் கூட நீதியை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூட்டமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய அரசமைப்பை இயற்றவும் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டவிருந்த நிலையில் தற்போதைய அரசு அதற்கு எதிராக செயற்பட்டது என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை 46/1 ஐ நிறைவேற்றுவதை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுதலைப் புலிகள் தொடர்பாக குறிப்பிட்டு இலங்கை அரசு பிரச்சினையை தெளிவுபடுத்த முயற்சிக்கின்றது என்றும், ஆனால் தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் விடுதலைப்புலிகள் உருவாகியிருக்க மாட்டார்கள் என்றும், இதனால் இந்த விடயத்தில் விடுதலைப் புலிகளை காரணம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.