ராசாக்களுக்கும் , மகராசாக்களுக்கும் பாடம் படிப்பிக்க எனக்கு தெரியும் : கோட்டாபய

ஊடக சுதந்திரம் என்பது ஊடக மனிதனின் சுதந்திரம் அல்ல, நம் நாட்டில் அரசர்களோ, மகராசாக்களோ இல்லை, அவர்களுக்கு எப்படி கற்பிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

“ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிட வேண்டுமா? இல்லையா? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, “சில ஊடகங்கள் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்த முயல்கின்றன. ஆனால், அது என்னிடம் பலிக்காது. இவ்வாறானவர்களுக்குப் பாடம் புகட்ட எனக்குத் தெரியும்” என்றும் குறிப்பிட்டார்.

நுவரெலியா – வலப்பனை பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்கள் என்னை 60 மாதங்களுக்கு ஆட்சிப் பொறுப்புக்காக நியமித்துள்ளார்கள்.இப்போது 14 மாதங்கள் கடந்துள்ளன. இந்தக் காலப்பகுதியில் கிராமங்களை அபிவிருத்தி செய்வதே எனது தேவை.

நான் மீண்டும் ஜனாதிபதியாக வரமாட்டேன் எனப் பலர் கவலை அடைந்துள்ளனர். ஆனால், மக்கள்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும்.

முதலில் 60 மாதங்களுக்கு வேலை செய்வதே எனது எதிர்பார்ப்பு. அதன் பின்னரே ஏனையவற்றை பற்றிச் சிந்திக்க முடியும்.

நான் கிராமங்களுக்கு வருவதால்தான் வீதிகள் புனரமைக்கப்படுகின்றன.குறுகிய வீதிகள் அமைக்கப்பட்டமையாலேயே இன்று துரதிர்ஷ்டவசமாக பசறை பஸ் விபத்து இடம்பெற்றது.

ஊடக சுதந்திரம் என்பது ஊடகத்தின் உரிமையாளருக்குத் தேவையான விதத்தில் செய்திகளை வெளியிடுவது இல்லை. அவ்வாறு செய்தால் அது ஊடக மாபியாவாகக் கருதப்படும்.

இவர்கள் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்த முயல்கின்றார்கள். என்னிடம் இது பலிக்காது. இவர்களுக்குப் பாடம் புகட்ட எனக்குத் தெரியும்.

14 மாதங்களாக நான் எந்த ஊடகத்துக்கும் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கவில்லை. எனினும், ஊடக சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த முனைபவர்களுக்கு எதிராக நீதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க என்னால் முடியும்.

நாம் எப்போதும் இயற்கை சூழலை அழிக்கவில்லை. இவ்வாறான பொய்யான தகவல்களை வெளியிடுபவர்கள் யார் என எனக்குத் தெரியும். போர்க்காலத்தில் பொய்யான தகவல்களை வெளியிட்ட ஊடகங்களே இப்போதும் இவ்வாறு செயற்படுகின்றன.

கடந்த அரசில் காடுகள் அழிக்கப்பட்டன. அதனை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அப்போது அவர்களுக்குத் தேவையான அரசு இருந்தது. எனவே, அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

தற்போது பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் பரப்பி மக்களைத் திசை திருப்ப முயல்கின்றனர்.

இந்தியாவின் ஒடிசாவில் மரங்கள் வெட்டப்பட்ட காட்சிகளை ஜே.வி.பி. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இலங்கையில் இடம்பெற்றதாகத் தவறான பிரசாரங்களை முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.