240 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் வடமராட்சி கிழக்கில் 2 பேர் கைது

யாழ். வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணிப் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது 240 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடத்திச் சென்ற டிப்பர் வாகனத்துடன் இரு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

சட்டவிரோத கடத்தல்களைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி வடக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் வெற்றிலைக்கேணிப் பகுதியில் நேற்று நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, வீதியில் காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான டிப்பர் வாகனம் ஒன்றை சோதனை செய்தனர்.

அப்போது சுமார் 07 பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ள 240 கிலோ கிராம் எடையுள்ள கேரளா கஞ்சா 100 பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதையடுத்து கேரளா கஞ்சா மற்றும் டிப்பர் வாகனத்துடன் அதில் பயணித்த 31 மற்றும் 34 வயதுகளையுடைய இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைதுசெய்தனர். இருவரில் ஒருவர் முள்ளியான் பகுதியையும், மற்றைய நபர் ஆழியவளைப் பகுதியையும் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கேரளா கஞ்சா மற்றும் டிப்பர் வாகனத்துடன் சந்தேகநபர்கள் பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.