இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

“இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதியளிக்க அரசு எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை.”

இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடலில் மீன்பிடிக்க அனுமதிப் பத்திரத்தை வழங்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் என்று ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து, இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துக் கூறும்போதே அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த விடயத்தில் அமைச்சரால் தனியாகத் தீர்மானம் எடுக்க முடியாது. அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும். ஆனால், இதுவரையில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அவ்வாறான யோசனையை அமைச்சரவையில் சமர்பிக்கவில்லை.

இதனால் அரசு என்ற ரீதியில் இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடலில் மீன்பிடிக்க எந்த வகையிலும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதேவேளை, இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை தொடர்பாக அரசு கலந்துரையாடி வருகின்றது. இது தொடர்பில் விரைவில் இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.