அரசை தோலுரித்துக் காட்டிய மாமனிதர்! – மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்திய பின் சிறிதரன் தெரிவிப்பு.

“இறுதிப்போரில் தமிழினப் படுகொலையை அரங்கேற்றிய அரசை சர்வதேசத்துக்குத் தோலுரித்துக் காட்டிய மாமனிதரே இராயப்பு யோசப் ஆண்டகை.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

மறைந்த மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் உடலுக்கு இன்று நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசிய மண்ணிலே தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் அவர்களுடைய வாழ்வுக்காகவும் ஒரு நீண்ட பெரும் பாதையிலே தன்னுடைய ஆழமான பங்கை ஆத்மார்த்தமாகவும் உணர்வாகவும் வெளிப்படுத்திய ஆன்மா ஒன்று மீளாத்துயரில் உறங்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதிகமான பற்றுக்கொண்ட ஒரு மனிதனாக நின்று தன்னை அர்ப்பணித்து இன்று உறக்கம் கொள்கின்ற அவரை நினைக்கும்போது நெஞ்சம் துடிக்கின்றது .

இப்படியான ஓர் ஆயர் இனி கிடைப்பாரா என்பது சந்தேகமே. தமிழ் மக்களுடைய உரிமைக்காக – வாழ்வுக்காக – வாழ்வாதாரத்துக்காக – இருப்புக்காக குரல் கொடுத்த ஓர் ஒப்பற்ற மனிதரே அவர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சென்று மிகத் துணிச்சலோடு ஆதாரத்தோடு ஒரு இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை வெளிப்படையாகத் துணிச்சலுடன் சொன்ன ஒரு மனிதர்.

நெடுந்தீவில் பிறந்திருந்தாலும் வடக்கு, கிழக்கு தாயகம் எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழர்கள் மீதும் தமிழ் மண் மீதும் உறுதியான ஒரு பற்றுக்கொண்ட ஒரு மனிதனை தமிழ் மக்கள் இழந்து தவிக்கிறார்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.