அம்பாறை சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டது.

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டது.

அத்தோடு விரைவில் குறித்த ஆற்றுமுகப்பிரதேசத்தில் நிரந்தர அணைக்கட்டு (ஸ்பீல்) அமைப்பதற்கான வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் 01ஆம் திகதி இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்; கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினார்.

நடைபெற்ற சிறுபோகச் செய்கைக்கான இரண்டாவது கூட்டத்தில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தம்பிலுவில் மாகாண பிரதி நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் பி.விகர்ணன் மற்றும் பிரதேச நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் வி.விவேக்சந்திரன் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாய பெரும்பாக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், விவசாய பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் தாழ்நில விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் விதைப்பு நடவடிக்கைகள் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினர். ஆகவே சின்னமுகத்துவார ஆற்றுமுகப்பிரதேசத்தை அகழ்ந்து மேலதிக நீரை வெளியேற்றி விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதேநேரம் குறித்த ஆற்றுவாயை அகழ்ந்து நீரை வெளியேற்றினால் மீனவர்கள் பாதிக்கப்படுவதுடன் குடிநீருக்கான தட்டுப்பாடும் எதிர்காலத்தில் உருவாகலாம் எனவும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

ஆகவே இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருப்பதனால் இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் இப்பகுதியில் ஸ்பீல் அமைக்கப்பட்டு இதற்கான நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் எனவும். கேட்டுக்கொண்டனர்.

இறுதியாக சகல தரப்பு கருத்து மற்றும் நியாயத்தின் அடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாசன தொழில் நுட்ப அறிக்கையின் சிபாரிசுடன் சின்னமுகத்துவாரம் அகழ்ந்துவிடப்படும் என பிரதேச செயலாளர் கூறினார்.

இந்நிலையில் சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்படுவதற்கான நடவடிக்கை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கண்காணிப்பில் கிராம உத்தியோகத்தர் பி.கிருசாந்தன் முன்னிலையில் இன்று இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.