99 ஸாங்ஸ் : விமர்சனம்

தயாரிப்பு – ஐடியல் என்டெர்டெயின்மென்ட், ஒய்எம் ஸ்டுடியோஸ்
இயக்கம் – விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி
இசை – ஏஆர் ரஹ்மான்
நடிப்பு – இஹான் பட், எடில்சி வர்காஸ், லிசாரே
நேரம் – 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் – 2.5/5

ஹிந்தியில் ஒரிஜனலாக எடுக்கப்பட்டு தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ள படம். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தயாரிப்பாளராகவும், கதையாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ள படம் இது.

தான் ஒரு இசையமைப்பாளர் என்பதாலோ என்னவோ ஒரு இளம் இசைக்கலைஞனைப் பற்றிய கதையை எழுதியிருக்கிறார். படம் ஹிந்திப் படம் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கான படமாக இல்லை என்பது ஒரு குறை.

திரைக்கதையிலும் பிளாஷ்பேக்கிற்கு மேல் பிளாஷ்பேக் என வைத்து நம்மைக் கொஞ்சம் குழப்பியும் விடுகிறார்கள். இந்த திரைக்கதை யுத்தி படம் பார்க்கும் சாதாரண ரசிகர்களை வெகுவாகவே குழப்பும்.

இஹான் பட் இசையார்வம் அதிகம் உள்ள கல்லூரி மாணவர். அவருக்கும் சக மாணவி மற்றும் பேஷன் கலைஞரான வாய் பேச முடியாத எடில்சி வர்காஸ் ஆகிய இருவருக்கும் காதல். மிகப் பெரும் பிஸினஸ்மேன் ரஞ்சித் பரோட்டின் மகள் தான் எடில்சி. ஒரு சாதாரண இளைஞனை தன் மகள் காதலிப்பது ரஞ்சித்துக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் 100 பாடல்களை உருவாக்கு, அதன் பின் மகளைத் திருமணம் செய்து தருகிறேன் என்கிறார். அதுவரையில் தன் மகளை பார்க்கவோ பேசவோ கூடாது என்று கண்டிஷனும் போடுகிறார். 100 பாடல்களை உருவாக்க நண்பனுடன் ஷில்லாங் செல்கிறார் இஹான். அவர் 100 பாடல்களை உருவாக்குகிறாரா, சவாலில் வென்று காதலியைக் கை பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எம்கே தியாகராஜ பாகவதர், எம்ஆர் சந்தானலட்சுமி நடிக்க எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் 1937ல் வெளிவந்த அம்பிகாபதி கதைக்கும் இந்த 99 *ஸாங்ஸ் கதைக்கும் பெரிய வித்தியாசமில்லை. அதில் கவிஞர், இதில் இசைக்கலைஞர் அவ்வளவுதான் வித்தியாசம்.

படத்தின் மேக்கிங்கில் ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது போன்ற ஒரு தாக்கத்தை டெக்னிக்கலாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி. மற்றபடி படத்தில் நம்மை உருக வைக்கும் காட்சிகள், ரசிக்க வைக்கும் காட்சிகள் என்று சொல்ல முடியாத அளவிற்குத்தான் படம் நகர்கிறது. படத்தின் முடிவு சினிமாத்தனத்திலேயே பெரிய சினிமாத்தனமான முடிவு.

இஹான் பட் அப்பா பேச்சையும் மீறி சிறு வயதிலிருந்தே இசையார்வத்துடன் இருப்பவர். தனக்குள் இருக்கும் இசைத் திறமையை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் கடுமையாக உழைக்கிறார். அவருடைய இசைத் திறமைக்கு சவால் விடும் வகையில் காதலியின் அப்பாவும் 100 பாடல்களை உருவாக்கி வா எனச் சொல்லும் போது அதில் வெற்றி பெறத் துடிக்கிறார். ஒரே ஒரு பாடல் தன் வாழ்க்கையையே மாற்றிவிடும் என நம்புகிறார். அந்த லட்சியம் மிக்க இளைஞன் கதாபாத்திரத்தில் இஹானின் நடிப்பு ஆஹா சொல்ல வைக்கிறது.

கதாநாயகியாக எடில்சி வர்காஸ். படம் கதாநாயகனைச் சுற்றித்தான் அதிகம் நகர்கிறது. ஆரம்பத்தில் இவர்களது காதல் காட்சிகள் ஒரு சில வந்தாலும் அதில் காதலின் தீவிரம் முத்தம் வரை அதிகமாகவே வெளிப்படுகிறது.

இஹானின் நண்பராக நடித்திருக்கும் டென்சின் தல்ஹா பார்ப்பதற்கு ஜாக்கி சான் போலவே இருக்கிறார். இவரால்தான் படத்தின் நாயகன் இஹானின் வாழ்க்கையில் மிகப் பெரும் சோகமான திருப்பம் ஏற்படுகிறது. மனிஷா கொய்ராலா, லிசா ரே ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். குறைந்த காட்சிகளே வந்தாலும் இவர்களது கதாபாத்திரங்கள் முக்கியமானவை. நாயகியின் அப்பாவாக இசையமைப்பாளர் ரஞ்சித் பரோட். வழக்கமான கார்ப்பரேட் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தில் அடிக்கடி பாடல்கள் வருகின்றன. ஒரு சில பாடல்கள் மட்டும் மனதைக் கவர்கின்றன. படம் முழுவதையும் ஏன் இப்படி ஒரு அரை வெளிச்சத்தில் எடுத்திருக்க வேண்டும் எனத் தெரியவில்லை. ஹாலிவுட்டிற்கு ஓகே, நம் இந்திய ரசிகர்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாமா ?. படத்தின் எடிட்டருக்குக் கடுமையான வேலை இருந்திருக்கும் என்பது படத்தைப் பார்க்கும் போது அனைவருக்குமே புரியும்.

ஒரு வரியில் சொல்லிவிடக் கூடிய கதைதான், இன்னும் உணர்வு பூர்வமாய் சொல்லியிருக்கலாம்.

99 ஸாங்ஸ் – இசைக் காதல்

Leave A Reply

Your email address will not be published.