கரையாக்கன்தீவு செக்கரியா குளம் அரசாங்க அதிபரினால் திறந்துவைப்பு.

மட்டக்களப்பு கரையாக்கன்தீவு செக்கரியா குளம் புனர்நிர்மானம் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

கரையாக்கன்தீவு துர்க்கா இளைஞர் கழகத்தின் தலைமையில் ஏ.யூ லங்கா (AU Lanka) நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற “இளைஞர் தலைமையில் நீர் முகாமைத்துவம்” எனும் தொனிப்பொருளில் இளைஞர்கள் தலைமையிலான சுற்றுச்சூழல் நலன்சார்ந்த அனர்த்த அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் கைலிமடு கிழல் கமநல அமைப்பினால் கமநல அபிவிருத்தித் திணைக்களம், மண்முனை மேற்குப் பிரதேச செயலகம், மண்முனை மேற்குப் பிரதேச சபை, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன், சைல் பண்ட் ஸ்ரீலங்கா, சைல் பண்ட் நியூஸ்லன்ட் மற்றும் சைல் பண்ட் கொறியா ஆகிய அமைப்புக்களின் நிதிப் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட முதலாவது குளமே உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், மாவட்ட அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்விற்கு ஏ.யூ லங்கா நிறுவனத்தின் சிரேஸ்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.வீ.பிரகாஸ், திட்ட உத்தியோகத்தர் கே.சதீஸ்குமார், இளைஞர் சேவை அதிகாரி ஏ.தயாசீலன் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் உட்பட இளைஞர் கழக உறுப்பினர்கலென பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வரவேற்புரையுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் திட்ட விளக்க உரையினைத் தொடர்ந்து அதிதிகள் உரையும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அதிதிகளினால் குளத்தின் பெயர்ப்பலகை திறந்துவைக்கப்பட்டதுடன், இளைஞர்களினால் புனரமைப்பு செய்யப்பட்ட குளம் உத்தியோகபூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அரசாங்க அதிபர் கமநல அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்திருந்தார்.

இளைஞர் கழக உறுப்பினர்களின் பாரிய பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டுள்ள குறித்த குளத்தில் அதிகளவிலான மழை நீர் சேமித்துவைக்கப்படுவதனால் இப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் (குடிநீர்) மற்றும் கால் நடைகள் அதிக பயன்பெற வாய்ப்பேற்படுவதுடன், இளைஞர்கள் ஊடாக நீர் முகாமைத்துவத்தை ஏற்படுத்தி வழிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.