விக்கியை வடக்கு முதல்வராக நானே கொண்டு வந்தேன்! – மாவை அறிக்கை

“தகுதியில்லை என்று விக்னேஸ்வரன் வர்ணித்த மாவை சேனாதிராசா 2013இல் முதலமைச்சராக வந்திருக்க முடியும் என்ற போதும் மாவை சேனாதிராசாதான் விக்னேஸ்வரனை வடக்கு மாகாண சபைக்கு முதல்வராகக் கொண்டு வந்தவர் என்பதை இலகுவாக மறந்து விட்டார்கள்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“முதல்வர் பதவிக்கு மாவை (தகுதியற்றவர்) பொருத்தமற்றவர் அதனால்தான் சம்பந்தர் தன்னை அழைத்து வந்தார்” – முன்னாள் முதலமைச்சர் “விக்னேஸ்வரன்”

14.04.2021 அதிகாலை சித்திரைப் புத்தாண்டு பிறந்து வந்த நேரத்தில் ஒரு பத்திரிகை மேற்படி குறித்த முதல்பக்கத் தலைப்புச் செய்தியை வரவைத்தவர் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன். அச்செய்தியை சித்திரைப் புத்தாண்டன்று புளகாங்கிதத்தோடு வெளியிட்டு மகிழ்ச்சியடைந்தவர்(காலைக்கதிர்) அப்பத்திரிகை ஆசிரியர்.

அதேவேளை வேலன் சுவாமியை வடக்கு மாகாணசபை முதல்வராகச் சிபார்சு செய்கின்றார் விக்னேஸ்வரன். அத்தோடு எல்லோரும் கேட்டுக் கொண்டால் தானும் முதல்வராக ஆயத்தம் என்கிறார் விக்னேஸ்வரன்.

இத்தனைக்கும் மாவை சேனாதிராசா 2013லோ தற்போதோ விக்னேஸ்வரனிடமோ சம்பந்தனிடமோ வேறொருவரிடமோ இப்பதவியைக் கேட்டு நிற்கவில்லை. அல்லது கட்சியில் பதவி கேட்டு நிற்கவுமில்லை. அப்படியிருக்கையில் விக்னேஸ்வரனும் வித்தியாதரனும் சித்திரைப் புத்தாண்டுச் செய்தியாக எனக்கு எதிராக முற்பக்கத்தில் வெளியிடுகிறார்கள். தகுதியில்லையென்று விக்னேஸ்வரன் வர்ணித்த மாவை சேனாதிராசா 2013இல் முதலமைச்சராக வந்திருக்க முடியும். ஆனால், மாவை சேனாதிராசாதான் விக்கினேஸ்வரனை வடக்கு மாகாண சபைக்கு முதல்வராகக் கொண்டு வந்தவர் என்பதை இலகுவாக மறந்துவிட்டார்கள்.

உண்மையில் 1977 ஏப்ரல் 13ஆம் திகதி சிறை வாழ்வின் பின் யாழ் வந்திருந்தேன். துயரமென்னவெனில் தந்தை செல்வா ஏப்ரல் 26ஆம் நாள் காலமாகினார். 1972 புதிய அரசியலமைப்பு வந்தபோது எல்லா தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டுமென்றநிலையில் மத்திய செயற்குழுவில் மாவை சேனாதிராசா “தந்தை செல்வா மட்டும் பதவி விலகினால் போதும்” என்று அதனை நிறைவேற்றியதனால் தந்தை செல்வா பதவி விலகினார் என்ற வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்ய வேண்டும். 1977 பொதுத் தேர்தலில் மாவை சேனாதிராசாவை காங்கேசன்துறைத் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட வேண்டுமென அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் கேட்டுக் கொண்டனர்.

அப்போது நான் அமிர்தலிங்கத்தை காங்கேசன்துறையில் போட்டியிட சம்மதிக்க வைத்தேன். அதன் பொருட்டு அமிர்தலிங்கம் “நாங்கள் கேட்டு காங்கேசன்துறையில் போட்டியிடுகிறேன்” என்று நன்றி தெரிவித்துக் கொழும்பு லீலா அச்சகத்தில் 25000 துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்டு வெளியிட்டார். காங்கிரஸ் தமிழரசு வேட்பாளர் போட்டியில் சுமுகமான தீர்வுக்காக உதவினேன். அக்காலத்தில் இலகுவாக நான் ளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருப்பேன்.

இப்போது 2013க்கு வருவோம். 2013 மாகாண சபைத் தேர்தல் வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் வேட்பாளர்களை போட்டியிட வைத்தபோது வடக்குமாகாணத்தின் முதல்வர் வேட்பாளராக மாவை.சேனாதிராசாவேதான் வரவேண்டும் எனக் கூட்டமைப்புக் கட்சிகள் தீர்மானமெடுத்திருந்தனர். அப்போதும் மாவை சேனாதிராசா முதலமைச்சர் பதவி ஆசைகொண்டவனாக இருக்கவில்லை.

1978 செப்டெம்பர் 07ஆம் திகதி புதிய அரசியலமைப்பு தமிழர் இனப் பிரச்சினைக்குத் தீர்வின்றியே பிரகடனப்படவிருந்தபோது செப்டெம்பர் 05ஆம் திகதி மட்டக்களப்பிலே கிழக்கு மாகாணம் முழுவதும் பல்லாயிரம் தமிழ்மக்கள்; இளைஞர்கள் திரண்ட போராட்டம் பொதுவேலைநிறுத்தம் இடம்பெற எம்மால் அழைப்பு விடப்பட்டது. “1978 அரசியலமைப்பை எதிர்த்திருக்கின்றோம்; தமிழீழத்தைக் கோருகின்றோம்” என்பதுதான் எங்கள் முன்மொழிவு, போராட்டத்தின் அடிப்படை. நான் மட்டக்களப்புக்கு 4ஆம் திகதியே சென்று விட்டேன். 05/09 மாலை மாபெரும் கூட்டம். 06/09 காலையில் நாம் கைது செய்யப்பட்டோம். மாபெரும் பொது வேலை நிறுத்தம். எம்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. மட்டக்களப்புச் சிறையில் காசியானந்தன், வேணுதாஸ் உட்பட நூற்றுக்கணக்கானோர் அடைக்கப்பட்டோம்.

மட்டக்களப்பு நீதிமன்றில் எமக்குப் பிணை பல மாதங்;களாக 1979 வரை மறுக்கப்பட்ட நிலையில் அந்த நீதிமன்றுக்கு நீதிபதியாக விக்னேஸ்வரன் வந்திருந்தார். எமது தரப்பில் சிவசிதம்பரம் மற்றும் பல வழக்கறிஞர்கள் வாதாடி வந்தனர். அன்று நீதிபதியே சட்டமா அதிபர் திணைக்கள வழக்கறிஞர்களுடன் வாதாடி எமக்குப் பிணை தந்தார். அப்போதுதான் நீதிபதி விக்னேஸ்வரன் எமக்கு அறிமுகமாகியிருந்தார். எமக்கும் அவர் மீது அபிமானம் ஏற்பட்டது.

விக்னேஸ்வரன் நீதியரசராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற நிலையில் தியாகராஜ நகரில் அவர் உறவினர் நிமலன் கார்த்திகேயன் வீட்டில் நாம் நீதியரசரைச் சந்திப்பதுண்டு. ஒரு முறை சம்பந்தனையும் அழைத்துச் சென்று சந்தித்தேன். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் “சேனாதி நீங்கள்தானே எனக்கு நீதியரசர் விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்தினீர்கள்” என்று சம்பந்தன் கூறினார்.

நீதியரசர் விக்னேஸ்வரனும் ஓய்வுபெற்றபின் வீரகேசரிப் பத்திரிகையில் விடுகின்ற அறிக்கைகளில் இரண்டு தடவைகள், “மட்டக்களப்பு நீதிமன்றில் திருவாளர்கள் மாவை சேனாதிராசா, காசியானந்தன் ஆகியோரைப் பிணையில் விடுவித்த சம்பவங்களின் பின்னர்தான் தமிழினப் பிரச்சனை பற்றி அறிய வாய்ப்புப் பெற்றேன்” என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பின்னணியில்தான் 2013இல் மாகாண சபை பற்றிய பேச்சுக்கள் வந்தபோது மறைந்த (திரு. நீலகண்டன் இந்துசமயப் பேரவை) “விக்னேஸ்வரன் பற்றியும் என்னுடன் பேசியிருக்கின்றார். ஆனால், சம்பந்தன் எம்முடன் நேரிலோ, எமது செயற்குழுவிலோ விக்னேஸ்வரன் வேட்பாளரைப் பற்றிப் பிரேரித்ததில்லை.

கிழக்கு மாகாண சபையில் பிள்ளையான் கூட முதலமைச்சராயிருந்தார். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இத்தனையும் சம்பந்தன் அறிந்திருப்பார்.

முதலில் தமிழரசுக் கட்சி மாவட்டக்கிளை, “மாவை சேனாதிராசா தான் எமது மாகாண சபை முதல்வர் வேட்பாளரெனத் தீர்மானித்ததாக சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார். அதைவிட ‘சுடர் ஒளி’ பத்திரிகையிலும் தலைப்புச் செய்தியாக மாவைதான் “வடக்கு மாகாண சபை முதல்வர் வேட்பாளர்” என அறிவித்ததை அறிந்தேன். முக்கியமென்னவெனில், அக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் தலைவர்கள் எல்லோரும் “மாவை அண்ணர்தான் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர்” என்பதில் தீர்மானமாயிருந்தனர்.

வடக்கு மாகாணசபை முதல்வர் வேட்பாளர் தொடர்பாக நடைபெற்ற தமிழரசுக் கட்சிச் செயற்குழுவில் மாவை சேனாதிராசா முன்வைத்த பிரேரனை என்னவெனில், “நீதியரசர் விக்னேஸ்வரனை வடக்கு முதல்வர் வேட்பாளராக நியமிப்போம். மஹிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான போராட்டங்களில் மக்களை இளைஞர்களை அணிதிரட்டிப் போராட்டங்களில் ஈடுபட என்னை அனுமதியுங்கள்” என்று நாற்பது நிமிடங்கள் பேசினேன். தலைவர் சம்பந்தன் அக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

விக்னேஸ்வரனின் பெயரை வேறு யாரும் முன்வைக்கவில்லை. மிகப் பெரும்பாலும் ஆதரித்திருக்கவில்லை. எனது உரைக்குப் பின்னர் சமாதானமாக செயற்குழு முதல்வர் வேட்பாளராகத் விக்னேஸ்வரனை ஏற்றுக் கொண்டது.

மட்டக்களப்பில் 2014இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இந்த நிலைப்பாட்டைப் பற்றிப் பேசியிருக்கின்றேன்.

திருகோணமலையிலும் மாகாண சபை உறுப்பினர் கூட்டத்தை நடத்தி இரு அமைச்சர் நியமனம் பற்றியும் ஒழுங்கு செய்திருக்கிறேன்.

இக்காலங்களில் மாவை சேனாதிராசா தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்ட காலம்.

மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னத்தில் விக்னேஸ்வரன் முதன்மை வேட்பாளராக எம் முன்னிலையில் கையெழுத்திட்டார். கட்சியின் பொதுச்செயலாளராக அந்த வேட்பாளர் பட்டியலில் மாவை சேனாதிராசா கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தோம். அத்தேர்தலில் விக்னேஸ்வரன் ஒரு இலட்சத்து முப்பத்திரண்டாயிரம் வாக்குகள் பெற்றார். 30 உறுப்பினர்கள் எமது அணியில் தெரிவாகினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து நான்கு கட்சிகள் புதிய கூட்டணியில் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன் போட்டியிட்டு 21 ஆயிரம் வரை விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராயிருக்கின்றார். இப்போது அவர் தகுதியை மக்கள் தீர்மானித்துள்ளார்கள். ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் வரை வாக்காளர் அவருக்கு வாக்களிக்கவில்லை.

வடக்கு மாகாண சபை இலங்கையில் ஒரு சிறந்த பெருமைப்படக்கூடிய சபையாக அமைச்சரவை நிர்வாகமாகச் செயலாற்றியது. வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை முதலமைச்சர் உள்ளிட்டவர்களை அழைத்து எனது தலைமையிலேயே கூட்டங்களை நடத்தி பிரச்சனைகளிருந்தால் தீர்ப்பதற்கும் புதிய பிரேரணைகள், தீர்மானங்களை எடுப்பதற்கும் கூட்டங்களை நடத்தியிருக்கின்றோம். இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்கள் நீக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. அடுத்த முதலமைச்சர் யாரென்று பேச்சுக்கள் எழுந்தன. பல குழப்பங்கள் ஏற்பட்டன. இவை விக்னேஸ்வரனினதும், கட்சியில் சில உறுப்பினர்களினதும் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாயிருந்தன.

நான், யாழ்ப்பாணம் இலக்கம்30, மாட்டின் வீதியில் பக்கத்து அறையில் குடும்பத்துடனிருந்து கட்சிப் பணியாற்றி வந்தேன். வடக்கு மாகாண சபையின் பிரச்சினையைத் தீர்த்தாக வேண்டும். நல்லை ஆதீன முதல்வரும், யாழ். மாவட்ட ஆயரும் என் வீட்டுக்கு வந்து என்னிடம் பேசினார்கள். சமாதானமாக இப்பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றுபட்டு இயங்கினோம். அடுத்த நாள் முதலமைச்சரே நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து என்னுடன் பேசவேண்டுமென்று பேசினார். இணக்கம் ஏற்பட முதலமைச்சர் இல்லத்துக்கே சென்று பேசித் தீர்த்து வைத்தோம். அப்போதும் மாவை சேனாதிராசா ஒரு தகுதி உள்ளவனாக ஆளுமை உள்ளவனாக இருந்திருக்கின்றார்.

2020 பிற்பகுதியில் இன்றைய அரசின் அநீதிகளுக்கு எதிராக, அடக்குமுறை, போர்க்குற்றங்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு நீதியரசர் வீட்டுக்கும் சென்று பேச்சு நடத்தியதை இச்செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் என்னைப் பெருமைப்படுத்திப் பாராட்டி எழுதினார்.

ஒரு கட்சியின் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவை சித்திரைப் புத்தாண்டு நாளன்று எக்காரணமுமின்றி, வலிந்திழுத்து வடக்கு மாகாண சபை முதலமைச்சராவதற்கு தகுதியற்றவர் என்றும், தானே முதலமைச்சராக வரச்சம்மதிப்பேனென்றும் விக்னேஸ்வரன் தலைமைத்துவப் பண்புகளற்ற, நாகரிகமற்ற முறையில் என்னை வைது அதுவும் சித்திரைப்புத்தாண்டன்று செய்தி வெளியிடவைப்பது எவ்வளவு அநாகரிகமான செயல் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்களென நம்புகிறேன். மதிப்புக்குரிய வேலன் சாமியாரை உச்சரித்ததும் அவர் மறுப்பார். தன்னையே பொதுவேட்பாளராக ஏற்பார்கள் என்ற எண்ணத்தில் தான் அறிவித்தார்.

இந்தச் செய்கையானது இன்னொரு கட்சியின் தலைவர் என்ற வகையில் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளேயாகும். இவை ஒட்டுமொத்த தமிழரசுக் கட்சிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளேயாகும்.

– 70ஆண்டுகள் வரலாற்றில்
மாவை.சோ.சேனாதிராசா.

– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.