எம்மைப் பயமுறுத்தி அடக்க முடியாது! – நாடாளுமன்றில் ஹக்கீம் சூளுரை.

விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து எம்மைப் பயமுறுத்தி அடக்க முடியாது. முடிந்தால் செய்துபாருங்கள் எனச் சவால்விட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அன்று ஜே.ஆர். செய்த நடவடிக்கையால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் மன்னிப்பு கோரினார் எனவும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் 11பேர் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ளனர். இது சாதாரண விடயமல்ல. அதேபோன்று அரசுக்கு ஆதரவாக இருக்கம் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். அரசில் இருக்கும் சிலருக்கு கடந்த காலத்தில் நீதிமன்றத் தீர்ப்பால் தண்டனை அனுபவித்ததை இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தீர்த்துக்கொள்ளக்கூடாது. அதற்கு மாற்று வழிகள் இருக்கின்றன. நீதிமன்றங்களுக்குச் சென்று தங்களது நியாயத்தை முன்வைக்கலாம்.

ஆட்சிக்கு வரும் அரசுகளால் அரசியல் பழிவாங்கல்கள் இரண்டு தரப்பினராலும் ஏற்பட்டிருப்பதாக வரலாற்றில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது. இது புதிய விடயமல்ல. ஆனால், அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாகும் அரச அதிகாரிகள் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பல அரச அதிகாரிகள் இருக்கின்றனர்.

அத்துடன் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பதன் தேவை என்ன?. இந்த நடவடிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் பலரை இக்கட்டான நிலைக்கு ஆளாக்கி இருக்கின்றது. சட்டமா அதிபரே இது தொடர்பாக தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார். வழக்கு விசாரணை செய்யும் நீதிபதிகளையும் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றது. அதனால் அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கும்போது அது எதற்கு என அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக நாங்கள் பேசும் போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எம்மைப் பார்த்து, ஏன் பயமா எனக் கேட்டுப் பயமுறுத்தப் பார்க்கின்றார். எம்மைப் பயமுறுத்தி அடக்க முடியாது. முடிந்தால் செய்து பாருங்கள். அன்று ஜே.ஆர். செய்த நடவடிக்கையால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் மன்னிப்புக் கோரினார். அவ்வாறான பயங்கரமான விடயங்களை மேற்கொள்ளத் தேவையில்லை. அதற்காக நாங்கள் பயப்படவும் மாட்டோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.