ரிஷாத் பதியுதீன் கைது, முஸ்லிம்களை ஒடுக்கும் ராஜபக்ச அரசின் பாசிசம் : தமிழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

“இலங்கையை ஆளும் ராஜபக்‌ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களை ஒடுக்கும் ஒரு பாசிச அரசாகச் செயற்பட்டு வருகின்றது.”

– இவ்வாறு தமிழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி அரசு தடை செய்துள்ள முஸ்லிம் அமைப்புகளில் பெரும்பாலானவை பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்தும் மக்களிடையே பரப்புரை செய்தவை.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட, இனவாதமாகச் செயற்படும் சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை?

பேராயர் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளதைப் போன்று அரசியல் ஆதாயத்துக்காகக் கைக்கூலிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் தப்பவிடப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் நிலங்களையும் ராஜபக்‌ச அரசு கைப்பற்றி வருகின்றது.

முதலில் இந்திய வம்சாவளித் தமிழர்கள், அடுத்து ஈழத் தமிழர்கள், இப்போது முஸ்லிம்கள் என அடுத்தடுத்து குறிவைத்து சிங்கள இனவாத அதிகார வர்க்கம் தாக்கி வருகின்றது.

இலங்கை அரசு சிறுபான்மை விரோத போக்கைக் கைவிட வேண்டும்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.