கல்முனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இறுக்கமாக அமுல்படுத்த ஏற்பாடு.

கல்முனை மாநகர சபை எல்லையினுள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மிக இறுக்கமாகவும் துரிதமாகவும் அமுல்படுத்துவதற்கு மாநகர கொவிட்-19 தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு ஒத்துழையாமல், பொது இடங்களில் சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்வோரைக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் அச்செயலணி தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர கொவிட்-19 தடுப்பு செயலணிக் கூட்டம் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இன்று திங்கட்கிழமை (03) மாலை, முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இக்கூட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன், பிராந்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர் சானக விஜயரட்ன, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த, கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ரமேஷ், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளான டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, டொக்டர் ஆர்.கணேஸ்வரன், டொக்டர் எம்.எம்.அல்அமீன் ரிஷாட் உட்பட பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

நாட்டில் கொரோனா தொற்று மூன்றாவது அலை தீவிரமாக உருவெடுத்து வருகின்ற சூழ்நிலையில் கல்முனை மாநகர பிரதேசங்களில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது தீவிரமாக ஆராயப்பட்டது.

தற்போது றமழான் நோன்புப் பெருநாள் வியாபாரம் களைக்கட்டியுள்ள நிலையில் புடவைக் கடைகளில் சனநெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அங்கு சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக அமுல்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கூடிய கவனம் செலுத்தப்பட்டது.

அவ்வாறே பொதுச் சந்தைகள், கடைத்தெருக்களில் சமூக இடைவெளிகளை பேணச் செய்வதிலும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார நடைமுறைகளையும் இறுக்கமாக அமுல்படுத்துவதெனவும் இதற்கு வர்த்தகர் சங்கங்கள் முழுமையாக ஒத்துழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக வருவோர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதற்கான ஒழுங்குகளை பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்துகளை கட்டுப்படுத்தல், கண்காணித்தல், கொழும்பு போன்ற தூர இடங்களுக்கான பயணங்களில் ஈடுபடுகின்ற பஸ்களினதும் பயணிகளினதும் விபரங்களை அன்றாடம் சேகரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தேவையின்றி வீதிகளில் நடமாக்குவோர், குறிப்பாக அங்கும் இங்குமாக கூடி நிற்கின்ற, வீதிகளில் சுற்றித்திரிகின்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு கல்முனை மாநகர சபை எல்லையினுள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநகர சபை, சுகாதாரத்துறை, பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகங்கள், வர்த்தக சங்கங்கள், பள்ளிவாசல்கள் சம்மேளனம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கூட்டுப்பொறுப்புடன் ஒன்றிணைந்து முன்னெடுப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Leave A Reply

Your email address will not be published.